உலகை உலுக்கும் கொரோனா.. உங்களை காப்பாற்றிக் கொள்வது எப்படி.. விழிப்புணர்வு கட்டுரை

Written by Deepa Lakshmi

சில மாதங்களுக்கு முன்னர் எங்கோ சீனாவிலும் அமெரிக்காவிலும் சில ஆயிரம் பேருக்கு பரவியிருந்த கொரோனா வைரஸ் பொது மக்களின் அலட்சியம் மற்றும் கவனமின்மை காரணமாக இப்போது இந்தியாவிலும் நுழைந்திருக்கிறது.

இந்தியாவில் முதலில் ஒற்றைப்படை இலக்கங்களில் ஆரம்பித்த கொரோனா நோயாளிகள் பட்டியல் இப்போது 400 எண்களை தாண்டி இருக்கிறது. இதனால் இறந்தவர்கள் 9 பேர் என இந்திய புள்ளியியல் விபரங்கள் கூறுகின்றன. நம் இந்திய அரசு கொரோனா வைரசுக்கு எதிரான சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

ஆனால் அதனை மக்கள் சரியாக முறைப்படுத்தினார்களா  என்பது தான் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. கொரோனா பற்றிய விழிப்புணர்வை மறந்து அறிவிக்கப்பட்ட விடுமுறைகளை உல்லாச விடுமுறைகளாக்கி வெளியிடங்களுக்கு மக்கள் செல்வதும் தங்கள் அன்றாடங்களை தொடர்வதுமாகவே இன்னும் இருக்கின்றனர். அவர்களுக்காகவே ஸ்டைல்க்ரேஸ் இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறது.

கொரோனா வைரஸ் அல்லது கோவிட் 19 பற்றிய விளக்கம்

Explanation of Coronavirus or Covid 19

Shutterstock

கொரோனா வைரஸ் என்பவை மிகப்பெரிய வைரஸ் குடும்பத்தை சார்ந்தவை. இந்த வைரஸ் சாதாரண சளி முதல் சார்ஸ் எனும் உயிர்கொல்லி நோய் வரை பரப்பக்கூடியவை (1). ஏற்கனவே உலகை உலுக்கிய சார்ஸ் வகை வைரஸ் குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் ஏழாவது கிருமிதான் கொரோனா அல்லது covid 19 எனப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Severe Acute Respiratory Syndrome Coronavirus 2 (SARS-CoV-2) என்று அழைக்கின்றனர்.

கொரோனா வைரஸ் எங்கிருந்து ஆரம்பித்தது 

சீனாவின் வுஹான் நகரத்தில் இது ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. மிருகங்களில் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என நம்பப்படுகிறது. மிருகங்களை உண்ணும் அல்லது தொடும் மனிதர்கள் மூலம் இது பல மனிதருக்கும் பரவி இருக்க கூடும் என கூறப்படுகிறது.இன்றைய தேதியில் 3,43,411 இந்நோய் பரவி இருக்கிறது. அதில் இருந்து மீண்டு வந்தவர்கள் எண்ணிக்கை 99,066 இறந்தவர்கள் எண்ணிக்கை 14775 என சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது(2).

இதன் வீரியம் என்ன எப்படி பரவுகிறது

கொரோனா வைரஸ் நீர்த்திவலைகள் எனப்படும் droplets மூலமாக பரவுவதாக கூறப்பட்டது. அதாவது கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருக்கும்போது அவர் தும்முவது மற்றும் இருமுவது மேலும் பேசுவது மூலம் அவர் உடலில் இருந்து வெளியேறும் கொரோனா வைரஸ் நீர்த்திவலைகள் எதன் மீதெல்லாம் படுகிறதோ அங்கேயே பல மணி நேரங்கள் உயிருடன் இருக்கிறது. அதனை தொடும் அடுத்த மனிதர்களுக்கு இது பரவுவதாக முன்னர் கூறப்பட்டது(3).

இப்போது WHO கூறுவது என்னவென்றால் covid 19 வைரஸ் காற்றின் மூலமாக பரவ வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு காற்று மூலம் தொற்று பரவாமல் இருக்கும்படியான மாஸ்க்குகள்  தரும்படி கூறியிருக்கிறது. ஆகவே கொரோனா வைரஸின் தற்போதைய நிலவரம் இது காற்றின் மூலமும் பரவலாம் என்பதுதான்.

கொரோனா பரவலின் நான்கு நிலைகள்

Four levels of corona distribution

Shutterstock

கொரோனா உடனடியாக அனைவருக்கும் கண்ணிமைக்கும் நேரத்தில் பரவும் கிருமி அல்ல என்பதுதான் உலகிற்கு இப்போது இருக்கும் ஒரே ஆறுதல். தன்னுடைய பரவலை நான்கு நிலைகளாக பிரித்து வைத்திருக்கிறது கொரோனா (4,3).

  • முதலாவது வெளிநாட்டினர் வருகையின் போது பரவுவது. இதனை இறக்குமதி பரவல் என்கின்றனர். வெளிநாடுகளில் covid 19 வைரஸ் பரவி இருக்கும் நாடுகளில் இருந்து நமது நாட்டிற்கு covid 19 வைரஸ் கிருமியுடன் வருவார்கள். அவர்களின் உடல் வெப்பநிலை போன்றவற்றின் மூலமோ அல்லது அறிகுறி எதுவும் இல்லாமல் இருந்தாலும் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பது முதல் நிலை எனப்படுகிறது.
  • இரண்டாம் நிலை என்பது வெளிநாட்டில் இருந்து வரும் உறவினர்கள் மூலம் உள்நாட்டில் இருப்பவர்களுக்கு பரவுவது. இதனை உள்நாட்டு பரவல் என்கின்றனர். உதாரணமாக வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை சந்திப்பது அல்லது குடும்பத்தாருடன் இருப்பதால் இது அவர்கள் மூலம் இரண்டாம்  மூன்றாம் நபர்களுக்கு பரவுகிறது.
  • மூன்றாவது நிலை என்பது வெளிநாட்டு நபர்கள் யாரையும் அறிமுகம் இல்லாதவர்கள் ஆனால் உள்நாட்டில் பாதிக்கப்பட்டவர் மூலம் தங்களது பயணம் அல்லது சமூக ஒன்றிணைதல் மூலமாக அந்த நபரிடம் இருந்து இவருக்கு பரவுதல். உதாரணமாக பாதிக்கப்பட்ட நபர் பயணம் செய்த வாகனத்தில் பயணம் செய்வது, அவர் அருகில் அமர்ந்து திரைப்படம் பார்ப்பது, பொது இடங்களில் , சமூக கூடுதல்களில் , மால்களில் அவர்கள் பயன்படுத்திய பொருள்களை தொடுவது போன்றவைகளால் பரவுகிறது. இதனை சமூக பரவல் என்கின்றனர்.
  • நான்காவது நிலை என்பதுதான் மிகவும் கவலைக்கிடமான நிலையாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வைரஸ் எங்கிருந்து யார் மூலம் பரவுகிறது என்பது கூட அறியாமல் போய் விடும். அதனால் வைரஸ் அதி தீவிரமாக பரவ ஆரம்பிக்கும். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம். வைரஸ் பரவலை தடுக்க முடியாது.

கொரோனா அறிகுறிகள்

Corona symptoms

Shutterstock

ஒருவருக்கு கொரோனா நோய் தாக்கி இருக்கிறதா என்பதை சில அறிகுறிகள் மூலம் உறுதி செய்யலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.கொரோனா வைரஸ் முதலில் காய்ச்சலில் தொடங்கும். பின்னர் வறட்டு இருமல் ஏற்படும். அதன் பின்னர் மூச்சு விடுதலில் சிரமம் இருக்கும். ஆனால் இது அனைத்துமே பொதுவான வைரஸ் தாக்கினாலும் ஏற்படும் பொது அறிகுறி என்பதுதான் இங்கே சிக்கலாக உள்ளது (5).

  • இருமல்
  • காய்ச்சல்
  • மூச்சு விடுதலில் சிரமம்

இதுதான் முக்கியமான மூன்று அறிகுறிகள் என உலக சுகாதார மையம் அறிவித்திருக்கிறது. தொடர் இருமல் அல்லது காய்ச்சல் இருந்தால் நீங்கள் உங்களை தனிமைப்படுத்தி கொள்வது அவசியமானது.

நீங்கள் கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் பயணம் செய்திருந்தாலோ அல்லது பயணம் செய்தவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தாலோ நீங்கள் வீட்டிலேயே இருங்கள். லேசான அறிகுறிகள் இருந்தாலும் அது சரியாகும் வரை உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

அறிகுறிகள் அதிகமாக இருந்தால் உங்கள் மாநில கொரோனா உதவி எண்ணுக்கு அழைத்து உங்கள் நிலையை சொல்லலாம். அதன் பின் சுகாதார அதிகாரிகள் உங்கள் மாதிரிகளை சேகரிப்பார்கள். உங்களுக்கு தொற்று இருப்பது தெரிந்தால் உங்களை தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிப்பார்கள்.

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி

How to defend yourself from corona

Shutterstock

உலகமெங்கும் பரவி இருக்கும் இந்த கொரோனா நோயின் பாதிப்பில் இருந்து நாம் மட்டும் எப்படி தப்ப முடியும் என்கிற அச்சம் இப்போது எல்லோரிடமும் இருந்து வருகிறது. உண்மையில் நாம் நினைத்தால் மட்டுமே இப்போது உலகையும் காப்பாற்ற முடியும் என்கிற தருணத்தில் இருக்கிறோம் (6).

ஒவ்வொரு தனி மனிதனும் அவனுக்குரிய பொறுப்புணர்வோடு கொரோனா வைரஸின் தீவிர தாக்குதலை எதிர்த்து போராட வேண்டியது அவசியம். அதற்கு அரசாங்கம் விதிக்கும் விதிகளை மதித்து நடக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு என்றால் வீட்டிற்குள் இருக்க வேண்டும். ஆனால் அப்போதுதான் நம் மக்களில் சிலர் நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் தவறானது.

உங்களுக்கு வாழ்வின் மீது அக்கறை இல்லாமல் இருக்கலாம். இந்த நோய் உங்களை மட்டும் தாக்கி அதனால் உங்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட போவதில்லை. உங்கள் மூலம் மற்ற மக்களுக்கும் அவர்கள் மூலம் அடுத்த மக்களுக்கும் இந்த நோய் வெகு விரைவில் தாக்க போகிறது என்பது மட்டுமே இப்போதைய நிச்சயமான உண்மை. ஆகவே நீங்கள் வெளியே வராமல் வீட்டிலேயே இருப்பதன் மூலம் மற்றவர்களை காப்பாற்றுகிறீர்கள் உங்களையும் காப்பாற்றிக்கொள்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அடிக்கடி 20 நொடிகளுக்கு சோப் போட்டு கைகளை கழுவுங்கள்(7). சளி இருமல் தொந்தரவு உள்ளவர்கள் கைக்குட்டையை பயன்படுத்தாமல் tissue பேப்பர்களை பயன்படுத்துங்கள். பயன்படுத்தி முடிந்ததும் குப்பை தொட்டியில் போட்டு கை கழுவுங்கள். உடல்நிலை சரியில்லாதவர்களை நெருங்காமல் இருங்கள். கைகளை முகத்திற்கு கொண்டு செல்வதை தவிருங்கள்.

மிக மிக முக்கியமான பாதுகாப்பு முறை என்பது முழுமையாக அனைவரும் வீட்டில் இருங்கள் என்பதுதான். எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அத்யாவசிய பொருள்கள் வாங்க வீட்டில் இருக்கும் யாரேனும் ஒருவர் சென்றால் போதுமானது.

அந்த நபரும் வெளியே செல்லும் போது முகமூடி அணிவது அவசியம். அது 30 நிமிடங்கள் மட்டுமே உங்களை கிருமிகளிடம் இருந்து காக்கும் என்பதால் N 95 ரக மாஸ்க் கிடைத்தால் வாங்கி பயன்படுத்துங்கள். வெளியில் இருந்து வாங்கி வரும் எந்த பொருளாக இருந்தாலும் அவற்றை சுத்திகரிப்பு செய்து அதன்பின்னர் பயன்படுத்துங்கள். அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளுங்கள். மஞ்சள் போன்ற கிருமி நாசினி பொருள்களை கூடுதலாக பயன்படுத்துங்கள். கிருமிநாசினி கிடைக்காதவர்கள் மஞ்சள் கலந்த நீரையே மாற்றாக பயன்படுத்தலாம் .

முடிந்தவரை வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து கூட்டங்கள் கூடும் இடங்களை விட்டு விலகி உங்களை நீங்கள் தனிமைப்படுத்தி கொள்தல் இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தை உலகளாவிய முறையில் தடுக்கும் முறையாகும். தனிமைப்படுத்தப்பட்ட நேரங்களில் பிடித்த திரைப்படங்கள், புத்தகங்கள் என உங்கள் மனநிலையை சமநிலையாக்கி கொள்ளுங்கள்.

கொரோனா வந்தால் மரணம் வந்து விடுமா

If Corona arrives, death will come

Shutterstock

நிறைய பேரின் பயம் கொரோனா வந்தால் மரணம் தவிர்க்க முடியாததாகி விடுமா என்பதுதான்(8). ஆனால் உண்மையில் கொரோனா அப்படியான கொடூரத்தை தன்னுள்ளே கொண்டிருக்கவில்லை. நோய் கொண்டவர்கள் எண்ணிக்கையில் இருந்து 2 சதவிகிதம் மட்டுமே மரணிக்கின்றனர். பெரும்பாலும் வயதானவர்கள் மற்றும் நோயாளிகளை இது மரணத்தில் தள்ளுவதாக சொல்லப்படுகிறது. ஆகவே வயதானவர்கள், ஆஸ்துமா நோயாளிகள், மற்றும் இதய நோய் , சிறுநீரக நோய் போன்ற நோய் பாதிப்பு கொண்டவர்களை அதிகமான  கவனத்தில் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் சில நாட்களில் இந்த நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து உலகம் பழைய நிலைக்கு திரும்பி விடும். அதுவரை பதட்டமில்லாமல் உங்கள் சுய ஒழுக்கத்தை தனிமைப்படுத்துதலை பின்பற்றுங்கள். அதுவே போதுமானது.

8 ஆதாரங்கள்

ஸ்டைல்க்ரேஸ் எப்போதும் தன்னுடைய கட்டுரைகளை தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது. மூன்றாம் நிலை ஆதாரங்களை முடிந்தவரை தவிர்க்கிறது. இந்த கட்டுரையின் உண்மைத்தன்மைக்கான 22 ஆதாரங்களும் அதன் இணைய இணைப்புகளும் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. editorial policy.
Was this article helpful?
The following two tabs change content below.