டயட் முறையை மேற்கொள்ளாமல், உடல் எடையை குறைக்க உதவும் எளிய குறிப்புகள்! – Weight Loss Tips in Tamil

Written by StyleCraze

விரும்பிய உணவுகளை எல்லாம் உண்டு, உடலில் காணப்படும் கொழுப்பை எரித்து, உடல் எடையை குறைக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுவும் வீட்டிலிருந்தே எடை இழப்பு செய்ய முடியும் என்றால் அது சாத்தியமான காரியமாக தோன்றுகிறதா? ஆம் எல்லாம் சாத்தியம் தான், இதை நீங்கள் முற்றிலுமாக நம்ப வேண்டும் எனில், இப்பதிப்பினை முழுமையாக படிக்க வேண்டும்.

இந்த பதிப்பில் வழங்கப்பட்டு இருக்கும் எளிய எடை இழப்பு குறிப்புகள், ஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தே உடல் எடையை குறைக்க முடியும் என்ற நம்பிக்கையை உங்கள் மனதில் ஏற்படுத்தும். உடல் எடை குறைப்பு என்பது ஒன்றும் செயற்கரிய செயல் அல்ல; அதற்கான வழிகளும் பெரும் இரகசியம் அல்ல. ஆகையால், எப்படி உடல் எடையை குறைக்க போகிறோம்? என்று யோசித்துக் கொண்டே இருக்காமல், பதிப்பு முழுதையும் படித்து, படித்ததை செயல்படுத்த தொடங்குங்கள்! வாருங்கள், பதிப்பிற்குள் செல்லலாம்.

உடல் எடையை குறைப்பது எப்படி? – How to Lose Weight in Tamil

உடல் எடை இழப்பு என்பது தானாக நடைபெறாது; அது நிகழ நாம் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். உடல் எடையை குறைப்பது எப்படி மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் குறிப்புகள் என்னென்ன என்றும் இங்கு பார்க்கலாம்.

1. சமையலறை மாற்றியமைப்பு

சமையலறையில் சில மாற்றங்களை கண்டிப்பாக செய்தால் மட்டுமே, ஒருவரால் உடல் எடை இழப்பில் முன்னேற்றங்களை பார்க்க முடியும். சமையலறையில் சேமித்து வைத்திருக்கும் துரித உணவு வகைகள், அதிக உப்புச்சத்து கொண்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பால் சாக்லேட்கள் மற்றும் அதீத அளவில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் போன்றவற்றை முதலில் அகற்ற வேண்டும்; இவற்றிற்கு மாற்றாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், முழு கோதுமை பிரட் மற்றும் லீன் புரதம் நிறைந்த உணவுகளை சமையலறை மற்றும் குளிர்சாதன பெட்டியில் நிரப்பி, அவற்றையே அன்றாடம் உட்கொள்ள வேண்டும்.

2. காலையில் வெந்தய நீரை அருந்துங்கள்

பொதுவாக காலை வேளையில் எல்லோரும் அருந்தும் குளிர்ந்த நீர் அல்லது தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்த சுடுநீரை பருக கூடாது; அதற்கு பதிலாக முதல் நாள் இரவு தூங்க செல்லும் முன்னர், இரண்டு தேக்கரண்டி வெந்தய விதைகளை நீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலை வெந்தயம் ஊறிய அந்நீரை, விதைகளை விலக்கி பருக வேண்டும். வெந்தய விதைகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன; மேலும் நீர் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

3. கிரீன் டீ பருகுங்கள்

கிரீன் டீ என்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் சிறந்த பானம் ஆகும்; இதில் உள்ள EGCG எனும் ஆன்டி ஆக்சிடென்ட், உடலில் காணப்படும் நச்சுப்பொருட்களை வெளியேற்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு கிரீன் டீ பருகுவது, 400 கலோரிகளை எரிக்க உதவும்.

4. சமநிலை கொண்ட உணவுகளை உண்ணுங்கள்!

தினசரி உண்ணும் உணவில் புரதம், நல்ல கார்போஹைட்ரேட்கள் (பழங்கள்/ காய்கறிகள்/ தானியங்கள்) போன்றவை இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்; இது போன்ற சமநிலை கொண்ட, சரிவிகித சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் பொழுது, உடலால் சரிவர இயங்க முடியும்; மேலும் இது உடலின் ஆற்றலை அதிகரித்து, நச்சுக்களை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

5. மெதுவாக மென்று விழுங்குங்கள்

உட்கொள்ளும் உணவை நன்றாக மென்று, உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால் நம்மால் உடலுக்கு தேவையான கலோரிகள் கொண்ட குறைந்த அளவு உணவை மட்டுமே உண்ண முடியும் என்று பல ஆய்வறிக்கைகள் கருத்து தெரிவிக்கின்றன. மெதுவாக மென்று உண்பது அதிகம் உட்கொள்ளும் சூழலை தவிர்த்து, வயிறு நிரம்பிய தகவலை மூளைக்கு அனுப்பி நம்மை அதிகம் உண்ண விடாமல் தடுக்கிறது. மேலும் இது செரிமானத்திற்கு உதவி, உட்கொள்ளும் உணவின் அளவை குறைக்க உதவுகிறது. ஆகவே ஒரு வாய் உணவை 35 முதல் 50 முறைகள் நன்கு மென்ற பின்னர் விழுங்க வேண்டும்.

6. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை உட்கொள்ளுங்கள்

சாதாரண உணவு பொருட்களை விட, கலோரிகள் குறைந்த உணவு வகைகளான பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்; தினந்தோறும் வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள், நார்ச்சத்து, பைட்டோ ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஐந்து வெவ்வேறு காய்கறிகளையும், மூன்று வேறுபட்ட பழங்களையும் உட்கொள்ள வேண்டும். மேலும் நாம், நமது அன்றாட உணவு முறையில் முழு தானிய வகையை சேர்ந்த பிரௌன் அரிசி, பிரான் ஃபிளேக்ஸ் (சோள சீவல்கள்), பாப்கார்ன், பார்லி மற்றும் சோளம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள முயல வேண்டும்; இவ்வுணவுகள் உடலை அதிக நேரம் பசியின்றி வைத்திருந்து, உடலுக்கு தேவையான நார்ச்சத்தையும் வழங்குகின்றன.

7. ஒவ்வொரு உணவுடனும் புரதத்தை உட்கொள்ளுங்கள்

லீன் புரதம் எனும் கொழுப்பற்ற, கலோரி குறைந்த புரத வகையை, அன்றாடம் எல்லா உணவுகளிலும் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு புரதத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நீண்ட நேரம் பசி எடுக்காமல் பார்த்துக் கொள்ளும் மற்றும் அதிகம் நாம் அதிகம் உண்ணாமலும் பார்த்துக் கொள்ளும்; முடிந்த அளவு நொறுக்குத்தீனிகளில் கூட லீன் புரதத்தை சேர்த்துக் கொள்வது மேலும் நன்மை பயக்கும். உணவு முறையில் யோகர்ட், கடலைகள், நிலக்கடலை வெண்ணெய், முட்டை, பீன்ஸ் மற்றும் கொழுப்பற்ற வெண்ணெய் போன்ற உணவு பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

8. ஒரு நாளை ஏமாற்றிக்கொள்ளலாம்!

உடல் எடை இழப்பு முறையை பின்பற்றி வரும் பொழுது, மிகவும் கட்டுப்பாட்டுடன் உணவு மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் நபர்கள் ஏதேனும் ஒரு நாளில் தனக்கு வகை உணவுகளை உட்கொண்டு அந்த நாளில் சந்தோஷமாக, உல்லாசமாக இருந்து கொள்ளலாம்; இவ்வாறு ஒரு நாளை ஏமாற்றி சந்தோஷமாக இருப்பது தவறு அல்ல. ஆனால், இந்த தவறு எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ள  வேண்டியது அவசியம்; அதாவது இவ்வாறு ஒரு ஏமாற்று தினத்தை மேற்கொள்ளும் பொழுது வழக்கத்தை விட 500 கலோரிகள் அதிகமாக, பிடித்த உணவுகளை உட்கொண்டு மகிழலாம். உட்கொள்ளும் 500 கலோரிகளை தாண்டினால், கூடிய உடல் எடையை குறைக்க நீங்கள் தான் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும். உடலின் வளர்சிதை மாற்றம் அசாதாரண நிலையை அடைந்து விடாமல் இருக்க இந்த ஏமாற்று நாள் உதவும். ஏமாற்று நாள் என்ற பழக்கத்தை மேற்கொள்வது, உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் உடல் செல்களை சுறுசுறுப்பாக வைத்து இருக்க உதவும்.

9. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பானங்களை தவிருங்கள்!

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், காய்கறி சாறுகள், ஆற்றல் பானங்கள், சோடா, ஜீரோ கலோரி சோடா போன்றவை உடல் எடை இழப்பை தாமதப்படுத்துவதோடு, உடலின் ஆரோக்கியத்தையும் அபாயத்தில் ஆழ்த்தி விடுகிறது. ஜீரோ கலோரி என்று கூறி விளம்பரப்படுத்தி விற்றாலும், இஜ்ஜீரோ கலோரி சோடாக்களில் சேர்க்கப்படும் செயற்கை பொருட்கள் அவற்றை  சாதாரண பானத்தை விட மிக மோசமானதாக மாற்றி விடுகின்றன. சாதாரண சோடாக்களில் சேர்க்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையின் அளவு மிகவும் அதிகம் மற்றும் இவற்றை அதிகம் பருகினால் உடலில் சர்க்கரை நோயை ஏற்படுத்தி விடும்.

புதிதாக தயாரிக்கப்பட்ட அல்லது சுகாதாரமான முறையில் சேமிக்கப்பட்ட பழச்சாறுகள், காய்கறி சாறுகளை பருகலாம்; மேலும் வீட்டிலேயே தினமும் ஒரு வகை பழச்சாறு தயாரித்து பருகுவது மிகவும் நல்லது.

10. அதிகம் சமைப்பதை தவிருங்கள்!

உணவு பொருட்களை அதிகம் சமைத்தால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் நீங்கி விடும் அபாயம் உண்டு; அதிகம் சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், பசி உணர்வு ஏற்பட்டு நம்மை துரித உணவுகளை உண்ணத் தூண்டும். இதை தடுக்க வேண்டும் எனில், உணவு பொருட்களை அதிகம் சமைத்து சாப்பிடாமல், பச்சையாகவோ அல்லது தேவையான அளவு சமைத்தோ சாப்பிட வேண்டும். ஆவியில் வேகவைத்த, பேக் செய்யப்பட்ட, நெருப்பில் சுட்ட காய்களை, இறைச்சிகளை, மீன்களை உட்கொள்வது நல்லது; இவ்வுணவுகளுக்கு சுவை சேர்க்க கலோரி குறைந்த மசாலாக்களை பயன்படுத்தலாம்.

11. இரவு உணவை 7:30 மணிக்கு முன் உட்கொள்ளுங்கள்

இரவு தாமதமாக உட்கொண்டால் அது உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தி விட வாய்ப்புண்டு; பொதுவாகவே இரவு உணவை 7:30 மணிக்குள் உண்டு முடிக்க வேண்டியது மிக முக்கியம். மேலும் இரவு உணவுக்கு முன் நொறுக்குத்தீனி உண்ணும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்; இரவு உணவு உண்டு முடித்த பின் மூலிகை தேநீர் குடிப்பது நல்லது. மேலும் அதிக உணவு உண்பதை தடுக்க, இரவு உணவுக்கு பின்னர் பல் துலக்கி விட வேண்டும்.

12. உணவின் மீது கவனம் செலுத்துங்கள்

நம் முன்னோர்கள் சாப்பிடும் பொழுது பேசக்கூடாது என்று கூற நாம் கேட்டிருப்போம்; அது காரணமின்றி கூறப்பட்ட கூற்று அல்ல. உணவு உண்ணும் பொழுது பேசவோ, படிக்கவோ, தொலைக்காட்சி அல்லது அலைபேசி போன்றவற்றை பார்க்கவோ கூடாது; உணவு உண்ணும் பொழுது பல வேலைகளை செய்யாமல், பல விஷயங்களில் கவனம் செலுத்தாமல் உணவின் மீது மட்டும் கவனம் செலுத்தி உட்கொண்டால் அது உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள உதவும். உணவின் மீது கவனம் செலுத்தி உட்கொண்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

13. நீர்ச்சத்துடன் உடலை வைத்திருங்கள்

நம்மில் பெரும்பாலானோர் உடலுக்கு தேவையான அளவு நீரை விட குறைவான அளவையே பருகி வருகிறோம்; ஓர் நாளைக்கு, ஒரு மனித உடலின் சராசரியான நீர்த்தேவை 3 முதல் 4 லிட்டர் ஆகும். வேலை செய்து அதிக வியர்வை வெளியேறினால், நிச்சயம் அதிக அளவு நீரை அதாவது 4 முதல் 5 லிட்டர் நீரை அருந்த வேண்டியது மிகவும் அவசியம். உடலுக்கு தேவையான அளவு நீரை குடிக்காவிட்டால் அது பசி உணர்வை ஏற்படுத்தி அதிக உணவை உண்ண வைத்துவிடும்; மேலும் சோர்வையும் ஏற்படுத்திவிடும். சரியான அளவு நீர் அருந்தாதது, உடலின் வளர்சிதை மாற்றத்தை நிறுத்தி – உடலில் கொழுப்பு இழப்பை தடுக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள போதுமான அளவு நீரை அருந்த வேண்டும்; ஆகவே தினமும் உடலுக்கு தேவையான அளவு நீரை குடிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள்.

14. உங்கள் காலடிகளை எண்ணுங்கள்!

வீட்டில் அல்லது வெளியே அல்லது வேலை செய்யும் இடத்தில் தினம் எத்தனை அடிகளை எடுத்து வைத்து நடக்கிறோம் என்று நீங்கள் எண்ணிப்பார்த்தது உண்டா? 15 முதல் 20 நிமிடங்களுக்கு விரைவாக நடப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஒரு எளிய உடற்பயிற்சி ஆகும். அலுவலகத்தில், பள்ளியில் அல்லது வீட்டில் என எங்கிருந்தாலும் தினமும் ஒரு மணிநேரம் நடக்க முயற்சியுங்கள்; அதிலும் காலையில் எழுந்த உடன் நடப்பது மிகவும் நல்லது. பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு, அலுவலகத்திற்கு, பள்ளிக்கு என தூரம் குறைவாக இருக்கும் இடங்களுக்கு நடந்தே சென்று வேற முயலுங்கள்; லிஃப்ட், எஸ்குலேட்டர் போன்ற இயந்திரங்களின் உதவியை நாடாமல், மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். நீங்கள் வைக்கும் காலடிகளை ஒவ்வொரு நாளும் எண்ணி, நீங்கள் எரிக்கும் கலோரிகளை – உண்ணும் உணவின் கலோரிகளை கணக்கெடுத்தால், உடல் எடை குறைப்பு பயணத்தில் என்ன நிகழ்கிறது என்பதை நம்மால் கண்கூட காண முடியும்.

15. அதிகம் சிரியுங்கள்!

டயட் இல்லாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமெனில், சிரிப்பு என்பது எடை இழப்பை ஏற்படுத்த உதவும் ஒரு மிகச்சிறந்த வழியாக கருதப்படுகிறது. வாய்விட்டு சிரிப்பது இதயத்துடிப்பை அதிகரித்து, உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவி, அடிவயிற்று தசைகளை கட்சிதமாக்க உதவும்; இது ஒரு இயற்கையான கார்டியோ பயிற்சி ஆகும். ரோவிங் இயந்திரத்தில் (rowing machine) 10 நிமிடங்கள் நேரம் செலவிடுவதை விட, தினமும் 5 முறை நன்கு வாய்விட்டு சிரிப்பது அதிக பலனை அளிக்கும். நன்கு, சத்தமாக 10 முதல் 15 முறை சிரித்தால், எளிதாக 50 கலோரிகளை எரித்து விடலாம்; இவ்வாறு தொடர்ந்து செய்வது ஒரு வருடத்திற்கு 4.4 பவுண்ட் எடையை இழக்க முடியும்.

16. ஜங்க் ஃபுட் எனும் துரித உணவு தீனிகளை தவிருங்கள்

நம் அனைவருக்குமே தீனிகள் அதிலும் நொறுக்குத்தீனிகள் என்றால் மிகவும் பிரியமான ஒன்று; ஆனால் எந்த ஒரு தீனி உணவும் குறைவான அல்லது ஜீரோ கலோரிகளை கொண்டிருப்பதில்லை. கலோரி மிகுந்த துரித உணவுகளை தவிர்த்து, பிஞ்சு கேரட், பிஞ்சு பீட்ரூட், பிஞ்சு வெள்ளரி, பழங்கள், ஒரு கை நிறைய நிலக்கடலை அல்லது பிஸ்தா பருப்புகள், பாப்கார்ன் போன்ற பல ஆரோக்கியம் தரும் உணவுகளை தீனிகளாக உட்கொள்ளலாம். கலோரி குறைந்த, ஊட்டச்சத்து மிகுந்த தீனிகளை உட்கொண்டால் அது உடல் எடையை எளிதில் குறைக்க உதவும்.

17. உறக்கம்

உடல் எடையை எளிதில் குறைக்க வேண்டுமெனில், சரியான நேரத்திற்கு முறையாக உறங்க வேண்டியது மிகவும் அவசியம். நாம் உறங்கும் பொழுது கூட, நமது உடல் ஓயாது உழைத்து, உடலின் காயங்களை குணப்படுத்தி, சேதங்களை சரி செய்ய முயற்சித்து கொண்டிருக்கும். உணவை செரிக்க, கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றத்தை நிகழ்த்த, கொழுப்புகளை உடைக்க செரிமான உறுப்புகள் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும். இன்சுலின் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் தூக்க  முறை முக்கிய பங்கு வகிக்கிறது. கார்டிசோல் ஹார்மோன் என்பது சர்க்கரை, கொழுப்பு, புரதம், தாதுச்சத்துக்கள், நீர் வளர்சிதை மாற்றம் போன்றவற்றை சரிப்படுத்த மற்றும் இன்சுலின் ஹார்மோன் இரத்த சர்க்கரை, கொழுப்பு சேமிப்பு போன்றவற்றை சரிப்படுத்த உதவும் ஹார்மோன்களாக விளங்குகின்றன. முறையற்ற உறக்கம் கார்டிசோல், இன்சுலின் ஹார்மோன்களை அதிகரித்து, உடல் எடை குறைப்பை ஒரு பெரும் சவாலாக்கிவிடும் வகையில் விளங்குகிறது. ஆகவே இரவு சரியான நேரத்திற்கு முறையாக உறங்கி ஓய்வெடுங்கள்.

18. தியானம்

உடலில் கொழுப்பை சேர்க்கும் முக்கிய காரணியாக திகழ்வது மன அழுத்தம் ஆகும்; கவலைப்படுதல், மன அழுத்தம், அழுத்தம் மற்றும் எதிர்மறை உணர்வுகள் போன்றவை கார்டிசோல் எனும் அழுத்த ஹார்மோனின் அளவை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்க காரணமாகி விடலாம். இது அழற்சி, தீங்கு விளைவிக்கக்கூடிய தேவையற்ற ஆக்சிஜன் செல்கள் போன்றவற்றை ஒரே இடத்தில் சேரவைத்து உடல் செயல்பாட்டை மெதுவாக்கி விடும். ஆகவே, இத்தகைய மோசமான உணர்வை தவிர்க்க, ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள் தியானம் செய்தாலே போதுமானது. ஆரம்பத்தில் இது கடினமாக இருக்கலாம்; ஆனால், இதை தொடர்ந்து செய்தால் நேர்மறை எண்ணங்களும் நல்ல அலைகளும் நம்மைச் சுற்றி எழும் என்பதில் ஐயமே இல்லை.

19. உத்வேக கவிதைகளை சுவரில் ஒட்டிக்கொள்ளுங்கள்

வீட்டில் இருந்தே உடல் எடையை குறைக்க உத்வேகத்துடன் இருக்க வேண்டியது அவசியம்; அதுவும் டயட் முறையை மேற்கொள்ளாமல் எடையை குறைக்க நிச்சயம் உத்வேகம் அவசியம். அதிலும் நீங்கள் ஒரு உணவு பிரியராக இருந்தால், ஆரோக்கியமான உணவுகளை அளவோடு உண்ணத் தேவையான உத்வேகத்தை கொண்டிருக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதை சோர்வு ஏற்படுத்தும் விஷயமாக கருதாமல் அதை உற்சாகத்துடன் மேற்கொள்ளுங்கள்; இவ்வாறு தினந்தோறும், ஒவ்வொரு செயலையும் செய்வதில் உத்வேகத்துடன் இருக்க, சுவரில் உத்வேகம் கொடுக்கும் பிடித்தமான கவிதைகளை எடுத்து, வீட்டின் சுவரில் அடிக்கடி கண்ணில் படும்வகையில் ஒட்டி வைத்துக் கொள்ளவும். அலுவலகத்தில் கூட உங்களது இருக்கையில் உத்வேகத்தை கைவிடாமல் வைத்திருக்க உதவும் குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டு, தினமும் நேரம் இருக்கும் போதெல்லாம் அதை பார்த்துக் கொள்ளுங்கள். இந்த முறையை இரண்டு அல்லது மூன்று வாரத்திற்கு மேற்கொண்டால், அதன் பின் எதையும் எழுதி ஒட்டி வைத்து பார்க்காமலேயே, உங்களால் உத்வேகத்துடன், உற்சாகத்துடன் இருக்க முடியும்; இது ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ள உதவும்.

உடல் எடையை குறைக்க உதவும் உணவு முறை குறிப்புகள் – Diet for Weight Loss in Tamil

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி அவசியம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இக்காலத்தில் டயட் என்று மாடர்ன் பெயரை உணவு முறைக்கு கொடுத்து, எளிய உணவுகளை கூட கடினமான முறையில் தயாரித்து உண்ணும் அவல நிலை நிலவுகிறது. இந்த பத்தியில் உடல் எடையை குறைக்க உதவும் உணவு முறை குறிப்புகள் பற்றி படித்து அறியலாம்.

உடல் எடை இழப்பு ஏற்பட டயட் என்பது அவசியமா?

டயட் எனும் வார்த்தைக்கு இந்த நவீன உலகம் ஒரு புது சாயலை பூசி, அதை ஒரு ஆடம்பரமான, அலட்டலான செயலாக மாற்றிவிட்டது; மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் எல்லாம் டயட் என்னும் ஒரு வழிமுறையை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் உருவாகிவிட்டது. உண்மையில் டயட் என்பது ஒரு எளிய உணவு முறையை மட்டுமே குறிக்கிறது; வழக்கமாக மேற்கொள்ளும் உணவு முறையையே குறைவான அளவில் அதாவது குறைந்த கலோரி அளவில் சரிவிகித சத்துக்களை கொண்ட உணவாக உட்கொண்டாலே போதுமானது. இவ்வாறு செய்து வந்தால் உடல் எடை இழப்பு மிக எளிதாக நிகழ்ந்து விடும்.

மற்றவர்களுடன் ஒப்பிட்டு உடல் எடையை குறைப்பதை விட வேறொரு முட்டாள்தனம் இல்லை, ஏன் தெரியுமா? ஒவ்வொருவரின் உடல் நிலையும் வேறுபட்டது; உடல் எடையை குறைக்க வேண்டுமெனில், உங்களது உணவு முறை, வாழ்க்கை முறையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது. டயட் எனும் பெயர் கொண்டு உணவு முறையில் அதீத கட்டுப்பாடுகளை விதிக்காமல், எளிதாக – வழக்கமான உணவு முறையை அளவாக, ஆரோக்கியமாக எடுத்துக் கொண்டால் வீட்டிலிருந்தே உடல் எடையை எளிதாக குறைத்து விடலாம்.

உங்களுக்கான டயட் என்னெவென்று தெரிந்து கொள்ளுங்கள்!

உங்கள் நண்பருக்கு ஒரு வகையான டயட் முறை பலனளித்து இருந்தால், அது உங்களுக்கும் அதே பலனை வழங்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்; மேலும் உங்களது உடலின் செயல்பாடு, இயக்கம் இவற்றிற்கு ஏற்ற, உங்களின் வழக்கத்தை ஒத்த எளிய உணவு முறையை மேற்கோள்ள முயற்சியுங்கள். உடல் எடை இழப்பு ஏற்பட, அதற்கு மனதில் உத்வேகம் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். உடல் எடையை இழக்க, குறைந்த உணவுகளை உண்டு அல்லது உடலின் நீர்ச்சத்தை வெளியேற்றி உடல் எடையின் அளவை குறைத்தால், நிச்சயமாக அதன் பின் விளைவுகள் பயங்கரமான ஆரோக்கிய சீர்கேடை உடலில் ஏற்படுத்தி விடலாம்.

அதுவே ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை மேற்கொண்டு உடல் எடையை குறைக்க முயற்சித்தால், அது உடல் எடை இழப்பை ஏற்படுத்துவதோடு அவையே வாழ்க்கையில் நாள்பட்ட பழக்கமாக மாறிவிடும். வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக, எளியதாக, தேவையற்றவை இல்லாததாக மேற்கொண்டால், எடையை இழக்க டயட் என்ற ஒன்று தேவையே படாது!

விரதத்தை உடைத்து, உண்ணுங்கள்..!

நம்மில் பலர் காலை உணவை தவிர்த்து விட்டால், கலோரி அளவுகளை குறைத்து உடல் எடையை குறைத்து விடலாம் என்ற தவறான விஷயத்தை உண்மை என நம்பிக்கொண்டு உள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் முக்கியமாக உட்கொள்ள வேண்டிய ஒரு உணவு, காலை உணவு ஆகும்; அதை ஒருபோதும் தவிர்க்கவோ, சாப்பிடாமல் தள்ளி வைக்கவோ கூடாது. ஒரு நாளில் ஒரு சில முறைகள் உணவு உட்கொண்டு உடலை இயக்கத்தில் வைக்க வேண்டியது அவசியம்; நீங்கள் காலை உணவை தவிர்த்தால், மதிய நேரத்தில் வழக்கத்தை விட அதிகமான பசி உணர்வு ஏற்பட்டு உங்களை அதிகம் உணவு உண்ண வைத்துவிடும். இது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரித்துவிடும்; மேலும் காலை உணவை தவிர்த்தால் அது உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மெதுவானதாக்கி விடும். ஒரு கிண்ணம் நிறைய முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருட்களை காலை உணவாக எடுத்துக் கொண்டு நம் நாளை தொடங்கலாம்.

உடல் எடையை இழக்க, உங்களை நீங்களே பட்டினி போடுகிறீர்களா? இனி இந்த நிலை தேவையில்லை. இவ்வாறு செய்தால் உடலில் நீரின் அளவு குறைந்து எடையும் குறைவது போன்று தோன்றலாம், ஆனால் குறைந்த வேகத்தில் உடல் எடை மிகவும் அதிகரித்து விடும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான  உணவுகளை உட்கொண்டு, எளிய வாழ்க்கை முறையை பின்பற்றினாலே எளிதில் எடையை குறைத்து விடலாம். எடையை குறைக்க உதவும் குறிப்புகளில் இதுவே மிக முக்கியமானது; முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், லீன் இறைச்சிகள், ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் சேர்த்துக் கொள்வது மட்டும் முக்கியமல்ல. அவ்வாறு சேர்த்து கொள்ளும் உணவுகளை ஒரே நேரத்தில் அதிக அளவு உட்கொள்ளாமல், குறைவான அளவில் 5 முதல் 6 முறைகள் மெதுவாக நன்கு மென்று உட்கொண்டால் உடல் எடையை விரைவில் குறைத்து விடலாம்.

உடல் எடையை குறைக்க உதவும் உடற்பயிற்சிகள் – Workout for Weight Loss in Tamil

ஜிம்மிற்கு போய் உடல் எடையை குறைக்க விருப்பமில்லையா? ஜிம்மிற்கு சென்று தான் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றில்லை; மனதிற்கு பிடித்த பாடல்களுக்கு நடமானடியே எளிதில் எடை இழப்பை ஏற்படுத்தி விடலாம். உடலை சோர்வாக்கி விடாமல், உடலை இலேசாக வைத்திருக்க உதவும் உடற்பயிற்சிகளை செய்தே உடல் எடை இழப்பை சாதித்து விடலாம். சுறுசுறுப்புடன் நடத்தல், நாய் போன்ற செல்லப்பிராணிகள், குழந்தைகளுடன் சேர்ந்து நடத்தல், ஓடுதல், நீந்துதல், சைக்கிள் பயணம் மேற்கொள்ளுதல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை, நாள் ஒன்றுக்கு ஒரு மணிநேரம் செய்தாலே உடல் எடையை விரைவில் குறைத்து விடலாம். எந்த ஒரு உடற்பயிற்சியையும் மெதுவாக செய்ய தொடங்கி, மனம் மற்றும் உடலை மெதுவாக தயார் செய்து 100 சதவிகித அர்ப்பணிப்புடன் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 60 நிமிடங்களை செலவு செய்து உடற்பயிற்சி செய்தாலே போதும்; இந்த செயலை பிடித்து செய்தால் அதை செய்யும் ஆர்வம் மனதில் மேலோங்கி விடும்.

உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்!

உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்லாமல், பொதுவாகவே உடலின் மீது பாசத்தை காட்டினால் அது நிச்சயம் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தாது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, சில காலத்திற்கு மட்டும் உடலின் மீது அக்கறை இருப்பது போல் நடந்து கொண்டால் அது நிச்சயம் நீண்ட காலத்திற்கான பலனை நல்காது. உடலின் மீது அக்கறை இருந்தால் அதை அனுதினமும் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, பழக்கங்களை மேற்கொண்டு, உடலை அன்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களது உடல் ஆரோக்கியமாக மற்றும் கட்டுக்கோப்பாக இருப்பது போல் தோன்றினால், நீங்கள் உடல் எடையை இழக்க வேண்டிய அவசியம் இல்லை; ஆனால் இதுவே உங்களது மனம் மற்றும் உடல் நலம் சரியாக இல்லை எனில், கண்டிப்பாக நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும். எதிர்மறை விளைவுகளை தவிர்க்க, நேர்மறையான பழக்கங்களை மேற்கொண்டு உடலின் மீது அக்கறை செலுத்தி வாழ்ந்தால், உடல் எடையை குறைக்க வேண்டிய நிலையே ஏற்படாது.

டயட் முறையை மேற்கொள்ளாமல், எளிய – வழக்கமான உணவு முறையை பயன்படுத்தி, வீட்டில் இருந்தே உடல் எடையை குறைக்க, இயற்கையான முறையில் எடை இழப்பு ஏற்பட தேவையான எல்லா குறிப்புகளையும் இந்த பதிப்பில் படித்து அறிந்திருப்பீர்; இவற்றை நடைமுறை வாழ்வில் நடைமுறைப்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்! வாழ்க வளமுடன்.. வளர்க நலமுடன்.!

Was this article helpful?
The following two tabs change content below.