உங்கள் இளமையையும் அழகையும் அப்படியே தக்கவைக்கும் அற்புத உணவு கோதுமைப்புல் ! Benefits of Wheat Grass!

Written by StyleCraze

தங்களது ஆரோக்கியம் குறித்த தனிமனித அக்கறை இப்போது அனைவரிடமும் பரவலாக இருக்கிறது. நமது ஆரோக்கியத்தை பாதுகாக்க இயற்கை பல அதிசயமான பொருள்களை நமக்கு வாரி வழங்கி இருக்கிறது. அவற்றில் இயற்கை தந்த மற்றுமொரு அற்புத படைப்பு கோதுமைப்புல் .

கோதுமை என்பதே பெரும்பாலும் ஆரோக்கியமான உணவு வகை என்று உணரப்படுகிறது. அதனாலேயே வடஇந்திய சப்பாத்திகள் இப்போது அகில இந்திய அளவில் அனைவரின் உணவுப்பழக்கவழக்கத்தில் முதன்மையாக இருக்கிறது. அத்தனை ஆரோக்கியமான கோதுமையில் வளரும் புல் என்பது இன்னும் அதிக அளவு ஆரோக்கியத்தை நேரிடையாகவே வழங்கி வருகிறது.

வழக்கமாக அருகம்புல் சாறு பற்றி தான் கேள்விப்பட்டு இருப்போம். கோதுமை புல் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதில் அடங்கியிருக்கும் சத்துக்கள் பற்றித் தெரிந்தால் நிச்சயம் இதனை புறக்கணிக்க மாட்டோம். அந்த அளவுக்குகோதுமைப்புல்லில் பல மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது.

கோதுமைப்புல்லின் சிறப்புகள்

வீட் கிராஸ் எனப்படும் கோதுமை புல் என்பது கோதுமைச் செடியின் தண்டிலிருந்து தயாரிக்கப்படும் உணவாகும். கோதுமை புல் தூள் (Wheat grass powder) சிறந்த ஆரோக்கியம் மற்றும் எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது . இதில் 19 அமினோ அமிலங்கள் மற்றும் 92 தாதுக்கள் உள்ளன(1). அவை உடலை சிறப்பாக செயல்பட உதவுகின்றன. இது பொதுவாக “ரொட்டி கோதுமை” என்று அழைக்கப்படுகிறது. பசுமை வீடுகளில் அல்லது செயற்கை விளக்குகளின் கீழ் பயிரிடப்படுகிறது.

கோதுமை கிராஸ் தூள் கோதுமை புல்லின் சாற்றைப் பிரித்தெடுப்பதன் மூலம் பெறப்பட்ட உணவாகும். மூன்று மாதங்கள் வயலில் இயற்கையாக வளர்க்கப்படும் புல்லிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட, பூமியில் கண்டறியப்பட்ட 102 தனிமங்களில் 98 தனிமங்களை கொண்டுள்ளது.

இதில் உள்ள செறிவூட்டப்பட்ட குளோரோபில் (70%) இந்த தூளின் பல ஆரோக்கிய நன்மைகளுக்கு முதன்மைக் காரணமாக விளங்குகிறது. இதில் அத்தியாவசிய நொதிகளும் உள்ளன. குளோரோபில் தாவரங்களின் இரத்தம் என்று கூறப்படுகிறது. இதனை நாம் உட்கொள்ளும் போது வயதான தோற்றத்தை மாற்றியமைக்கிறது, பசி அடங்கச் செய்கிறது,  உடல் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடுகிறது,  இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது மேலும் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது.

கோதுமையை போலன்றி, கோதுமைப்புல் பசையம் இல்லாதது. ஒவ்வொரு தேக்கரண்டிலும் 18 கலோரிகள் மட்டுமே உள்ளன. கோதுமைப்புல் பொடியை தண்ணீரில் கலந்து ஊட்டச்சத்து பானம் தயாரிக்கலாம். இதில் கோதுமை தாவரத்தின் அனைத்து பண்புகளும் உள்ளன. மேலும் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சீரான விகிதத்தில் உள்ளன.

கோதுமைப்புல் நன்மைகள் (Wheat grass Benefits in Tamil) :

கடந்த சில ஆண்டுகளில், கோதுமைப்புல் தனக்கென ஒரு பெரிய பெயரை உருவாக்கி,  இறுதியாக ‘சூப்பர்ஃபுட்ஸ்’ பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மக்கள் தங்கள் வழக்கமான பானங்களிலிருந்து, கோதுமைப்புல் சாறுக்கு மாறி வருகின்றனர்.  எண்ணற்ற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு கோதுமை கிராஸ் தூள் சிறந்த தீர்வாக உள்ளது. அப்படிப்பட்ட கோதுமை கிராஸ் தூளின் நன்மைகளை இங்கே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

1. செரிமானத்தை அதிகரிக்கச் செய்கிறது

கோதுமைப்புல் எளிதான செரிமான செயல்முறைக்கு உதவுகிறது. அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் கூற்றுப்படி, கோதுமை கிராஸ் தூளில் சில கார தாதுக்கள் உள்ளன. அவை வயிற்றில் உள்ள புண்கள், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. இதிலுள்ள அதிக அளவு மெக்னீசியம் மலச்சிக்கலை போக்க உதவுகிறது.

இது எளிதில் ஜீரணிக்கக்கூடியது. மேலும் பெருங்குடலை சுத்தப்படுத்தவும், அமிலத்தன்மை அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் உதவுகிறது. மேலும், உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க, வயிற்றில் உள்ள பல்வேறு பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்க கோதுமை கிராஸ் உதவுகிறது. அவை சமநிலையை இழந்தால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். கோதுமைப்புல் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து போகவும்,  நல்ல பாக்டீரியாக்கள் உருவாகவும், அவை வளரவும் உதவுகிறது. (2)

2. பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கோதுமைப்புல் தூள் பல் சிதைவு மற்றும் பிற பல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

உங்கள் ஈறுகளை கோதுமைப்புல் பொடியுடன் மசாஜ் செய்வது, ஈறு பிரச்சனைகளை ஆற்றுவதோடு, உங்கள் ஈறுகளை இறுக்கமாகவும் உறுதியாகவும் மாற்றும். (3)

3. அழற்சியை குறைக்க உதவுகிறது

கோதுமைப்புல்லின்  அற்புதமான திறன் உள்ளுறுப்பு வீக்கத்தை குறைப்பதோடு, வலியை நீக்குகிறது. இதனால், பொதுவான உடல் வலிகள் மற்றும் இதர வலிகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. (4)

4. கொழுப்பை குறைக்க உதவுகிறது

இதன் இயற்கை மூலப்பொருள் கொழுப்பு அளவை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கோதுமைப்புல் உணவை தொடர்ச்சியாக உட்கொண்ட எலிகளில் ஹைப்பர்லிபிடீமியா வருவதற்கான தாக்கம் குறைவாக உள்ளதாக 2011 ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இது கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. (5)

5. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது

நீரிழிவு நோய்க்கு கோதுமைப்புல் தூள் என்ன நன்மைகள் செய்யும் என்று யோசனையா!  நிச்சயமாக ஏராளம் உண்டு. கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை தாமதப்படுத்துவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. நீரிழிவு நோயை அதன் முதன்மை அல்லது மேம்பட்ட கட்டங்களில் கூட கட்டுப்படுத்த உதவுகிறது. (6)

6. கோதுமைப்புல் வாதநோய் சிகிச்சைக்கு பயன்படுகிறது

Shutterstock

வாத நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான சிறந்த வீட்டு வைத்தியமாக  கோதுமைப்புல் பரிந்துரைக்கப்படுகிறது. கோதுமைப்புல் பானங்களைக் உட்கொண்ட முடக்கு வாத நோயாளிகள், அதன் அறிகுறிகளைக் குறைத்ததாக 2012ல் நடந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (7)

7. கால்களில் வெரிகோஸ் வெயின் வருவதை தடுக்கிறது

வீங்கி பருத்த நிலையில், வலிக்கிற நரம்புகள், வெரிகோஸ் வெயின் என்று அழைக்கப்படுகின்றன. உங்கள் நரம்புகள் நீண்டு, பெரிதாகி,  இரத்தம் நிரம்பும்போது இந்த நிலை ஏற்படும். இந்த நரம்புகள் பெரும்பாலும் வலி மிகுந்தவையாகவும், வீங்கிய தோற்றத்தையும் கொண்டிருக்கின்றன. சில நேரங்களில், அவை நீல-ஊதா அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.

கோதுமைப்புல் வழக்கமாக எடுத்து வந்தால் வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளை உருவாகும் வாய்ப்பு குறையும். (8)

8. கோதுமைப்புல் உடல் எடையை குறைக்க உதவுகிறது

கோதுமைப்புல் தூள் எடை இழப்புக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.  இது உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு வலிமையை அதிகரிக்கிறது. மேலும் உடற்பயிற்சி காலத்தை அதிகரித்து எடை இழப்பை துரிதப்படுத்துகிறது. கோதுமை கிராஸ் தூள் தைராய்டு சுரப்பியைத் தூண்டுவதன் மூலம், உடல் எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. அதோடு சேர்த்து அஜீரணம் மற்றும் உடல் பருமனைத் தடுக்கிறது. (9)

மேலும், கோதுமைப்புல்லில் தைராய்டு சுரப்பியின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமான தாதுவான செலினியம் உள்ளது. இது உடல் எடை இழப்புக்கு உதவுகிறது. எனவே, கோதுமைப்புல் பொடியை தண்ணீரில் கலந்து காலையில் குடித்து வந்தால் கொழுப்பை எளிதாக குறைக்கலாம்.

9. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

கோதுமைப்புல் பொடியை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால் நோயெதிர்ப்பு சக்தி அபிரிவிதமான அளவுக்கு உயர்கிறது. (10)

மேலும் கோதுமைப்புல் நம் இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் (ஆர்.பி.சி) மற்றும் இரத்த வெள்ளை அணுக்கள் (டபிள்யூ.பி.சி) எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இது  வைரஸ் தடுப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. (11)

10. கோதுமைப்புல் கேன்சர் செல்களை அழிக்கிறது

கோதுமைப்புல் இரத்த ஆக்ஸிஜனேற்றத்திற்கு உதவுகிறது. இது அதன் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளில் முக்கியமானதாகும். குறைந்த ஆக்ஸிஜன் சூழலில் புற்றுநோய் செல்கள் செழித்து வளர்கின்றன. கோதுமை கிராஸ் உதவியுடன் இதை எளிதாக எதிர்கொள்ள முடியும்.

மேலும் , இந்த மூலப்பொருளில் புற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும், கதிர்வீச்சின் நச்சு சுமையை குறைக்கவும் உதவும் என்சைம்கள் உள்ளன. எனவே, புற்றுநோயைத் தடுக்க ஒரு கிளாஸ் கோதுமைப்புல் ஜூஸை காலையில் முதலில் சாப்பிடுங்கள்.

11. தோல் பிரச்சனைகளை குறைகிறது

வெயிலில் வெளியே வரும் போது, தோலில் படும் புற ஊதா கதிர்கள் உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அவை மிகவும் தீங்கானவை மட்டுமல்ல,  நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால் புற்றுநோயையும் ஏற்படுத்தும்.

கோதுமைப்புல் விரைவான சிகிச்சை அளிக்க உதவுகிறது. மேலும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் தோல் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.

12. கோதுமைப்புல் இளமை தோற்றத்தை அளிக்கிறது

கோதுமைப்புல் தூள் இயற்கையாகவே வயதான தோற்றத்தை உருவாக்கும் செல்களை எதிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. தோல் செல்களை புத்துயிர் பெற உதவுகின்றது. இதனால் வயதான தோற்றம் உண்டாவதை குறைக்கிறது. கோதுமை கிராஸ் சரும சிக்கலைச் சமாளிப்பதோடு தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. இதனால் உங்கள் சருமத்தின் இளமை பிரகாசத்தை மீட்டெடுக்கிறது.

மேலும், கோதுமைப்புல்லில் வயதான தோற்றத்தை எதிர்த்து போராடும் பண்புகளில் குளோரோபில் முக்கிய பங்கு வகிக்கிறது.

13. கூந்தல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

முன்கூட்டியே தலைமுடி நரைப்பது இளைய தலைமுறையினருக்கு ஒரு பிரச்சனையாகி வருகிறது. எல்லாவற்றையும் பொறுத்தவரை, கோதுமைப்புல்  இயற்கையாக நரை முடிக்கும் தீர்வை கொண்டுள்ளது.

உங்கள் முடியின் இயற்கையான நிறத்தை மீட்டெடுப்பதில் கோதுமைப்புல்  தூள் முக்கிய பங்கு வகிக்கிறது. முடி நரைப்பதை தடுக்க இந்த பொடியுடன் உங்கள் தலைக்கு தேய்த்து குளித்தால் விரைவில் அதற்கான பலனை கண்கூடாக பார்க்கலாம்.

கோதுமைப்புல்லில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவுகள்

கோதுமைப்புல்லில் என்னென்ன நன்மைகள் உள்ளது. அது எவ்வாறெல்லாம் உடல் ஆரோக்கியத்திற்கு துணைபுரிகிறது என்று பார்த்தோம். அடுத்து அதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவை கீழே அட்டவணைப்படுத்தியுள்ளோம்.

Shutterstock

கோதுமைப்புல்லை எப்படி பயன்படுத்தலாம்?

நீங்கள் கோதுமைப்புல் பொடியைப் பயன்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. சாறு வடிவிலும் உட்கொள்ள முடியும், இல்லையென்றால் அதன் பொடியை மற்ற உணவுகளுடன் கலந்தும் சாப்பிடலாம். சாறு வடிவில் பருக வேண்டும் என்றால் 3 கிராம் கோதுமை கிராஸ் பவுடரை (1 டீஸ்பூன்) வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலக்கி, வெறும் வயிற்றில் ஒவ்வொரு நாளும் இதை குடிக்கவும். இதன் சுவை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், கோதுமை கிராஸ் தூளை மற்ற ஜூஸ்களுடன் கலந்து குடிக்கலாம்.

வீட்டில் கோதுமைப்புல் வளர்க்கும் முறை

Shutterstock

இப்போது கோதுமைபுல்லை உங்கள் வீட்டிலேயே வளர்க்க கூடிய வழிமுறைகளும் வந்து விட்டன.அதற்கான வழிமுறைகள் உங்களுக்காக

இரண்டு கைப்பிடி அளவு கோதுமையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை 12 முதல் 16 மணி நேரம் வரை நீரில் ஊறவைக்கவும். பின்னர் ஊற வைத்த கோதுமையை ஒரு துணியில் கட்டியோ அல்லது முளை கட்டும் பாத்திரத்தில் இட்டோ ஒரு இரவு முழுதும் கோதுமையை முளை விட செய்யவும்.

இப்போது கோதுமை புல்லிற்கான விதை தயார் ஆகி விட்டது. இதனை நீங்கள் ஒரு சாதாரண பவுலில் மண் நிரப்பி அதனை ஈரப்படுத்தவும். அதில் முளைவிட்ட கோதுமையை தூவி அதன் மேல் லேசான முறையில் மண் துகளைத் தூவி விடவும். மிக தடிமனான முறையில் மண்ணை விதைகள் மேல் போட்டு மூட வேண்டாம். அது அவை முளைக்கையில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.

விதையிட்ட எட்டு நாட்களுக்குள் கோதுமைப்புல் எட்டு இன்ச் அளவு வரை வளரும். அதன் அடிபாகத்தில் உள்ள வெண்ணிற இடத்தை விட்டுவிட்டு தண்டை மட்டும் அறுவடை செய்து மீண்டும் வளரவிட்டால் இரண்டு முறைகள் நீங்கள் கோதுமைபுல்லை அறுவடை செய்ய முடியும். மூன்றாவது முறை மண்ணில் உள்ள பழைய விதைகளை நீக்கி விட்டு புதிய விதைகளை விதைக்கலாம்.

இப்போது உங்கள் கையால் விளைய வைத்த கோதுமை தண்டை அறுத்து அதனை மிக எளிய முறையில் அரைத்து சாறு எடுத்து ஃபிரெஷாக அருந்தலாம்

கோதுமைப்புல் தரும்  பக்க விளைவுகள்

  • அளவுக்கு அதிகமாக கோதுமை கிராஸ் சாறு குடித்த பிறகு சிலர் தலைவலி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
  • ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கோதுமை கிராஸ் சாறு குடித்தால், ஒரு சிலருக்கு  குமட்டல் ஏற்படும்.
  • ஒரு சிலருக்கு கோதுமை கிராஸ் எடுத்துக்கொள்வது ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.
  • சில நேரங்களில் அதிகப்படியாக உட்கொண்டவர்களுக்கு தலைச்சுற்றல் மற்றும் சோர்வு ஏற்படலாம்.
  • ஒரு சிலருக்கு மலச்சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்.

இறுதியாக

கோதுமைப்புல் போன்ற எண்ணற்ற இயற்கை உணவுகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. செயற்கையாக பெறப்படும் ஊட்டச்சத்துக்களை விட, மிக குறைந்த செலவில் நிறைந்த பலன்களை கோதுமைப்புல் மூலம் பெற முடிகிறது. சாதாரண உடல் நல பிரச்சனையில் தொடங்கி, கேன்சர் வரைக்கும் சிறந்த தீர்வாக கோதுமைப்புல் உள்ளது. இதனை நீங்களும் உட்கொள்ளுங்கள். எப்படி பலனளிக்கிறது என்பதை இங்கே பதிவிடுங்கள்.

Was this article helpful?
The following two tabs change content below.