சீப்பா கிடைக்குதேனு கேர்லெஸ்ஸா வாங்காம விட்ட கொய்யாப்பழம் இத்தனை நன்மைகளை நமக்கு கொடுக்கிறதா! Benefits of Guava in tamil

Written by StyleCraze

கொய்யாபழம்…! சொல்லும்போதே நாவில் எச்சில் ஊறக்கூடிய ஒரு கனி, இதன் விலையும் குறைவு. அதனால்தானோ மக்கள் அதனை பெரிதாக கண்டுகொள்வதில்லை? ஆனால் கொய்யாவால் கிடைக்கும் பலன்கள் தெரிந்தால், நிச்சயம் அதை சாதாரணமாக நினைக்க மாட்டீர்கள். சந்தைக்குப் போனால்,செக்கச்செவேலென வெட்டி வைத்திருக்கும் கொய்யாவைக் கண்டால் யாருக்குத்தான் ஆசை வராது. சர்வசாதாரணமாக வருடம் முழுக்க கிடைக்கக்கூடிய கனி என்பதால் மக்களுக்கு அதன் அருமை புரிவதில்லை. உண்மையில் ஆப்பிள், ஆரஞ்சு போலவே கொய்யாவும் ஒரு மிகச்சிறந்த கனியே! கொய்யாவின் பயன்கள் நமக்கு தெரியாவிட்டாலும் மருத்துவர்களுக்கு நன்கு தெரியும். எனவே தான் அவர்கள் அதனை “ஊட்டச்சத்து களஞ்சியம்” என கூறுகின்றனர்.

இந்தப்பழம் நம் உடலுக்கு எப்படியெல்லாம் உதவுகிறது என்பது பற்றி இப்பதிவில் காண்போம். கொய்யாவில் வைட்டமின் சி, லைகோபீன், ஆன்டிஆக்ஸிடன்ட், கரோட்டின், நீர்ச்சத்து மற்றும் எண்ணற்ற சத்துகள் அடங்கியுள்ளன. இவை நம் உடலுக்கும் சருமத்திற்கும் நல்ல பலன்கள் தரக்கூடியவை. கொய்யாவில் அதிகமிருக்கும் மாங்கனீஸ் உடலில் ஊட்டச்சத்தைச் சேமிக்க உதவும். இதிலிருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். சுவாரசியமான ஒரு உண்மையை சொன்னால் நம்புவீர்களா??? நான்கு ஆரஞ்சு பழத்தில் கிடைக்கும் வைட்டமின் சி ஒரே ஒரு கொய்யாப்பழத்தில் கிடைத்து விடுகிறது. இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் “ஸ்கர்வி” என்ற நோயின் தீவிரத்தைக் குறைக்க கட்டாயம் கொய்யாப்பழ ஜுஸ் குடிக்க வேண்டும்.

இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கேன்சர் செல்கள் வளராமல்தடுக்கும். கொய்யாவிலிருக்கும் லைகோபீன் மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கக்கூடியது. இதில் உள்ள நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதன் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென அதிகமாவதையும் தடுக்கும். ஆண்களைவிட பெண்களே அதிகமாக கொய்யாப்பழத்தை விரும்பி உண்கின்றனர். காரணம் சருமத்தை பராமரித்து அழகூட்டுவதில் இதன் பங்கு இன்றியமையாதது. கொய்யாவில் வைட்டமின் கே அதிக அளவில் இருப்பதால் தோலின் நிறம் கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் முகப்பருவால் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும். இவ்வளவு பயன்கள் கொண்டதா கொய்யாப்பழம்? என்று அனைவரும் வியந்திருப்பீர்கள் உண்மையில் இங்கு குறிப்பிட்டுள்ள அதன் பயன்கள் பாதியே..! மேலும் இதனைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கொய்யாவின் ஆயுர்வேத குணங்கள்

வருடம் முழுதும் கிடைக்கக்கூடிய கொய்யா, அதிக அளவில் மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. இதன் தாவரப்பெயர் சிடியம் கஜாவ ஆகும். இதன் அனைத்து பாகங்களும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. கொய்யாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் லைகோபீன், விட்டமின்ஸ், பீட்டா கரோடின், ஐயன், கால்சியம், மெக்னீசியம், ஜிங்க், சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.

கொய்யாவின் பயன்கள்

கொய்யா உடலுக்கு எவ்வளவு நல்லது என்று அனைவர்க்கும் இப்பொழுது தெரிந்துருக்கும்.இதன் பயன்களைபற்றி இன்னும் தெளிவாக பார்ப்போம்.

பயன் 1: நீரிழிவு நோயைத் தடுக்கிறது

கொய்யாவானது நீரிழிவு நோயை இரண்டு வகைகளில் தடுக்கிறது. முதலாவது, இதிலிருக்கும் நார்ச்சத்து உடலின் சர்க்கரையின் அளவை நன்கு ஒழுங்குபடுத்துகிறது. கொய்யாப்பழத்தை நார்ச்சத்துகளின் உறைவிடம் எனவும் கூறலாம். அதிகமாக கொய்யாவை சாப்பிடும்போது நீரிழிவு நோயின் அபாயத்தை தவிர்க்கலாம். இரண்டாவது, இதன் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ், திடீரென ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது. எனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொய்யா ஒரு சிறந்த உணவாக இருக்கும்(1).

பயன் 2: புற்றுநோய் பாதுகாப்பு

கொய்யாவில் உள்ள லைகோபீன் (lycopene), க்வர்ஸ்ட்டின் (quercetin), வைட்டமின் சி மற்றும் பிற பாலிபீனால்கள் சக்தி வாய்ந்த ஆக்ஸினேற்றங்களாக செயல்படுகிறது. இவை ஒன்றிணைந்து புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழித்து உடலை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ப்ரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம் குறைவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் இதில் லைகோபீன் அதிகம் உள்ளதால், பெண்களுக்கு மார்பகப்புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் அழிக்கப்படுகிறது(2).

பயன் 3: உடல் எடைக்குறைப்பு

உங்களுக்கு உடல் பருமனைக்குறைக்க வேண்டுமா? எனில் கட்டாயம் கொய்யாப்பழம் சாப்பிடுங்கள். மற்ற பழங்களைக்காட்டிலும் இதில் குறைந்த அளவே சர்க்கரை உள்ளது. மேலும் இதில் கொழுப்புகள் ஏதும் இல்லை மற்றும் மிகக்குறைந்த அளவே கார்போஹைடிரேடுகளும் உள்ளன. உங்களுடைய மதிய உணவில் கொய்யாப்பழம் சேர்த்துக்கொண்டால் மாலை வரை உங்களுக்கு பசியே எடுக்காது. குறைவான பசியே உடல் எடைக்குறைப்பிற்கு முதல் ஆதாரமாகும். முரணாக இப்பழம் ஒல்லியாக இருப்பவர்களுக்கு உடல் எடை பெறவும் உதவுகிறது. இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களின் காரணமாகவே உடல் எடை பெறலாம்(3).

பயன் 4: செரிமானம்

கொய்யாவில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால், இது உங்கள் செரிமானத்தை சீராக்குகிறது. மற்ற பழங்களை விட கொய்யாவில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. செரிமானக்கோளாறு சிறியவர்களை விட பெரியவர்களிடத்தில் அதிகம் இருக்கும். இதற்குக்காரணம அவர்களின் செரிமானக்குடல்கள் தோய்வடைந்துவிடுவதே. அவர்கள் தினமும் கொய்யா சாப்பிட்டுவந்தால் எளிதாக செரிமானக்கோளாறை சரிசெய்யலாம்(4).

பயன் 5: நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

நோயெதிர்ப்புசக்தி குறைபாடே நமக்கு ஏற்படும் அனைத்து வியாதிகளுக்கும் காரணமாகும். இதனை சரி செய்ய பழங்கள், கீரைகள் சாப்பிட வேண்டுமென மருத்துவர்கள் கூறுவர். இதிலும் முக்கியமான இடத்தை கொண்டுள்ளது நம் கொய்யாப்பழம்.கொய்யாவில் வைட்டமின் சி அதிகளவில் இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. குழந்தைகளுக்கு கொய்யாப்பழத்தை கொடுப்பதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து ஆரோக்கியமாகவும் துடிப்பிப்புடனும் இருக்கச்செய்யலாம்(5).

பயன் 6: இதயத்தை பாதுகாக்கிறது

கொய்யாவில் சோடியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளன. இவை இரண்டும் இதயத்திற்கு மிகவும் அவசியம். இதன்மூலம் உயர் ரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. கொய்யாபழமானது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கச்செய்கிறது(6).

பயன் 7: பார்வைத்திறனை சீராக்குகிறது

பார்வைத்திறன் என்றாலே நம் அனைவருக்கும் மனதில் தோன்றுவது வைட்டமின் ஏ ஆகும். கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால் இது பார்வைக்குறைபாட்டை சரி செய்வதோடு பார்வைத்திறனையும் மேம்படுத்துகிறது. மேலும் இது கண்புரை ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது. தொடர்ந்து கொய்யாப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் சீரான கண் பார்வையை பெற்று கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்(7).

பயன் 8: கர்ப்ப காலத்தில் பயனுள்ளது

கொய்யாவில் வைட்டமின் பி9 அல்லது போலிக் அமிலம் உள்ளது. இவை கருவில் இருக்கும் குழந்தையின் நரம்பு மண்டலத்தை சீராக்க உதவுகிறது. மேலும் புதிதாக பிறக்கும் குழந்தையை நரம்பியல் கோளாறுகளிலிருந்து பாதுகாக்கிறது. எனவே தான் மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் கொய்யாப்பழம் சாப்பிட வேண்டுமென பரிந்துரைக்கின்றனர்(8).

பயன் 9: மன அழுத்தத்தைக் குறைக்கிறது

கொய்யாவில் உள்ள மெக்னீசியம் உடல் தசைகள் மற்றும் நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. எனவே நீங்கள் களைப்பாக இருக்கும்போது சாப்பிடும் ஒரு கொய்யாப்பழம் உங்கள் உடல் தசைகளை ஓய்வடையச்செய்து, அதனை சமநிலையில் இருக்கச்செய்கிறது(9). மேலும் இது உங்கள் மன அழுத்தத்தை சரிசெய்து நல்ல ஆற்றலையும் ஊக்கத்தினையும் அளிக்கிறது.

பயன் 10: இரத்த அழுத்தத்தைக் குறைகிறது

இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கொய்யாப்பழம் குறைக்கிறது. இது இரத்தத்தின் கடினத்தன்மையை தடுத்து அதன் திரவத்தன்மையை பாதுகாக்கிறது. இதன் மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் கொய்யாப்பழம் அடிக்கடி சாப்பிடுவதால் இரத்த அழுத்தத்தை சீராக்கமுடியும்.

பயன் 11:தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்

கொய்யாவில் போதுமான அளவு காப்பர் உள்ளது. இதனால் ஹார்மோன் உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதைக் கட்டுப்படுத்தி வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. பெண்களுக்கு தைராய்டு குறைபாடு ஒரு முக்கியமான பிரச்சனையாகும். அவர்கள் கொய்யாவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தைராய்டு குறைபாடுகளை சரி செய்யலாம்.

பயன் 12: சளி பிரச்சனைகளை சரி செய்கிறது

கொய்யாவில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து சளி இருமலுக்கு சிறந்தது. கொய்யா மற்றும் அதன் இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு சளிக்கு மருந்தாக பயன்படுவதோடு சுவாச மண்டலம், நுரையீரல் மற்றும் தொண்டைப்பகுதியை சுத்தப்படுத்தவும் செய்கிறது. தமிழகத்தின் சில பகுதிகளில் வறுத்த கொய்யா இருமல் மற்றும் சளிக்கு நல்ல தீர்வாக உள்ளது(10).

பயன் 13: மலச்சிக்கல்

நார்ச்சத்தை அதிகளவில் கொண்ட கொய்யா மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த தீர்வாக விளங்குகிறது. பொதுவாகவே நார்ச்சத்து உள்ள உணவுகளை உண்ணும்போது செரிமானம் சீராகி சுலபமாக மலம் வெளியேறுவதை காணலாம். இதிலும் கொய்யா “நார்ச்சத்துகளின் உறைவிடம்” என்றழைக்கப்படுவதால் மலச்சிக்கலால் அவதிப்படும் மக்கள் கொய்யாப்பழத்தை சாப்பிட்டு இந்த குறையை சரி செய்யலாம்.

பயன் 14: மூளைக்கு நலம்

கொய்யாவில் வைட்டமின் பி3 மற்றும் வைட்டமின் பி6 உள்ளன. இவை நியாசின் மற்றும் பெரிடாக்சின் எனும் பெயர்களில் அழைக்கப்படுவது நமக்கு தெரிந்ததே. நன்மை பயக்கும் கொய்யாவானது இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் அறிவாற்றலையும் தூண்டுகிறது. மேலும் இது நரம்புகளுக்கு ஓய்வினை அளிக்கிறது.

பயன் 15: வைட்டமின்கள்

கொய்யாவில் எத்தனை வகையான வைட்டமின்கள் உள்ளன என்பது இப்பொழுது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். கொய்யாவானது வைட்டமின் சி, ஏ, பி6,பி3 என பல வகையான வைட்டமின்களை கொண்டுள்ளது. இவை நம் சருமம், கூந்தல் மற்றும் உடலை ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் வைத்திருக்க உதவுகிறது. எளிதில் கிடைப்பதால் மக்கள் இதன் அருமை புரியாமல் தவிர்த்து விடுகின்றனர். இப்பதிவிற்கு பிறகாவது நீங்கள் கொய்யாப்பழத்தை அடிக்கடி சாப்பிடுவீர்கள் என நம்புகிறேன்.

பயன் 16: மாதவிடாய் சமயத்தில் பயனுள்ளதாக உள்ளது

மாதவிடாய் சமயத்தில் பெண்கள் பெரும்பாலும் அவதிக்கு உள்ளவர். இந்த நேரத்தில் அவர்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். உதாரணமாக முகப்பருக்கள், உடல்வலி, உடல்சோர்வு, எரிச்சல், மற்றும் அரிப்புகள் என பல. கொய்யாப்பழம் சாப்பிடும்போது முகப்பருக்கள் குறைந்து அதன் வடுக்களும் மறைந்துவிடும். மேலும் இது உடல்சோர்வையும் சமாளிக்கிறது. எனவே மாதவிடாய் சமயத்தில் நீங்கள் சாப்பிடும் கொய்யாப்பழம் சருமத்தை பாதுகாத்து சுறுசுறுப்பையும் தருகிறது (11).

பயன் 17: பல் வழியை போக்குகிறது

கொய்யா மரத்தின் இலைகளில் ஆற்றல் மிக்க மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் திறனும் உள்ளது. இவை நோய்க்கிருமிகளிடம் போராடி அவற்றை அழிக்கிறது. இதன் மூலம் கொய்யா இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறானது பல்வலி, ஈறுவீக்கம் மற்றும் வாய்ப்புண்களை குணமாக்க உதவுகிறது. நகரங்களில் கொய்யா இலைகள் அவ்வளவு எளிதாக கிடைக்காது. எனவே முடிந்த வரை பழமாகவே உண்ணலாம்(12).

பயன் 18: சரும ஆரோக்கியம்

கொய்யாப்பழம் சருமத்திற்கு மிகவும் நல்லது. முக்கியமாக தோலின் நிறத்தை மேம்படுத்துவதில் இதன் பங்கு இன்றியமையாதது.கொய்யாவை தினசரி உண்டு வந்தால் நல்ல நிற மாற்றத்தை காணலாம். மேலும் இது வயதாவதால் உண்டாகும் சுருக்கங்களையும் குணப்படுத்துகிறது. கொய்யா இலையின் சாற்றை முகத்திற்கு பூசி வந்தால் நிறம் மேம்படுவதைக் காணலாம். நிறம் மாறுவதற்காக நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக உடலுக்கு ஆரோக்கியமான பழங்களை சாப்பிட்டு நன்மை அடையலாம்.

பயன் 19: வயதான தோற்றத்தை சரி செய்கிறது

கொய்யாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் வயதாவதால் உண்டாகும் சுருக்கத்தை நீக்கி சருமத்தை இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது. தினம் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டுவந்தால் எப்போதும் இளமையுடன் இருக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொய்யாப்பழத்தை எவ்வாறு உபயோகிக்கலாம் என பார்ப்போம்

கொய்யாப்பழமானது எளிதில் சந்தைகளில் கிடைக்கிறது. மற்ற பழங்களை போல் இல்லாமல் இது வருடம் முழுதும் கிடைப்பதால் இதனை தவறாமல் வாங்க வேண்டும். நல்ல நிறமுள்ள, கீறல்கள், காயங்கள் இல்லாத பழங்களை தேர்வு செய்ய வேண்டும்.

கொய்யாப்பழத்தை எப்படி சாப்பிடலாம்?

நன்கு நீரில் கழுவி சிறி சிறு துண்டுகளாக வெட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். மேலும் இதனை மிக்சியில் அரைத்து ஜூஸ் செய்தும் பருகலாம். கொய்யாப்பழத்தை அறுத்து வெயிலில் காய வைத்து பொடியாக்கி முகத்திற்கு பூசி வர நிறம் மேம்படும். இவ்வாறு கொய்யாப்பழத்தை பல வழிகளில் உபயோகிக்கலாம்.

எப்பொழுது கொய்யாப்பழத்தை சாப்பிட வேண்டும்?

கொய்யாப்பழமானது பசியைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என்பதால் அதனை காலை உணவுடனும் மதிய உணவுடனும் சேர்த்து சாப்பிடலாம். மேலும் மாலை நேரத்தில் புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் உண்ணலாம்.

ஒரு நாளிற்கு எவ்வளவு கொய்யாப்பழம் சாப்பிட வேண்டும்?

அமுதமே ஆனாலும் அளவோடு தான் சாப்பிட வேண்டுமென மூத்தோர்கள் கூறுவர். அதுபோல கொய்யாப்பழமானது பல ஊட்டச்சத்துக்களை கொண்டிருந்தாலும் அதனையும் அளவோடு தான் உண்ண வேண்டும். இருப்பினும் ஒரு நாளிற்கு 2 முதல் 3 பழங்கள் சாப்பிடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொய்யாவின் ஊட்டச்சத்துக்கள்:

கொய்யாவின் ஊட்டச்சத்துக்கள்
அளவு
கலோரிகள்  191கொழுப்பில் இருந்து கலோரி 174.4
உணவில் இருக்கும் அளவு% தினசரி அளவு
மொத்த கொழுப்பு 19g30%
  செறிவூட்டப்பட்ட கொழுப்பு 1g7%
மாற்றம் செய்யப்பட்ட கொழுப்பு
கொழுப்பு 0mg0%
சோடியம் 1mg0%
கார்போஹைட்ரேட் 3.7g1%
நார்சத்து 1g4%
சர்க்கரை 1g
புரதம் 4g
வைட்டமின் A0%
வைட்டமின் C0%
கால்சியம்0%
இரும்பு சத்து9%
வைட்டமின்கள்
உணவில் இருக்கும் அளவுதினசரி அளவு
                            வைட்டமின் A39.1IU1%
                            வைட்டமின் C1.1mg2%
                              வைட்டமின் D
                              வைட்டமின் E12.6mg63%
                              வைட்டமின் K72.8mcg91%
                              தையமின்0.5mg33%
                              ரிபோவ்ளாவின்0.3mg18%
                                  நியாசின்5.9mg30%
                              வைட்டமின் B60.1mg6%
போலேட்45.9mcg11%
                          வைட்டமின் B120.0mcg0%
பேன்டோதெனிக் ஆசிட்0.4mg4%
                                கோலைன்  75.3mg
                              பீட்டைன்0.5mg
தாதுக்கள்
உணவில் இருக்கும் அளவுதினசரி அளவு
கால்சியம்21.6mg2%
இரும்பு7.5mg41%
மெக்னீசியம்339mg85%
பாஸ்பரஸ்776mg78%
பொட்டாசியம்806mg23%
சோடியம்2.7mg0%
ஜிங்க்8.7mg58%
காப்பர்1.8mg89%
மாங்கனீஸ்11.9mg594%
செலினியம்0.9mcg1%
பிளூரைடு

கொய்யாப்பழங்களை எவ்வாறு சேமித்து வைப்பது?

கொய்யாப்பழங்களை சேகரித்து வைப்பது மிகவும் எளிது. கொய்யாவை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கும்போது அதன் ஆயுட்காலம் நீடிக்கும். இதனை சிறு துண்டுகளாக வெட்டியோ இல்லை முழுப்பழமாகவோ பிரிட்ஜில் வைக்கலாம். சிறு துண்டுகளாக வைக்கும்போது அவற்றை ஒரு காற்று புகாத பையிலோ அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்திலோ போட்டு வைக்கலாம்.

கொய்யாப்பழத்தினை எப்படி சாப்பிட்டாலும் ருசியாகவே இருக்கும். மேலும் இதற்கு சுவை கூட்ட உப்பு மற்றும் மிளகாய்பொடியை சேர்க்கலாம். இல்லையெனில் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் ஜூஸ் செய்து கொடுக்கலாம்.

கொய்யாப்பழ ஜூஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

  1. கொய்யாப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்
  2. பிறகு 1கப் குளிர்ந்த நீரை சேர்த்து மறுபடியும் அரைத்துக்கொள்ளலாம்.
  3. வடிகட்டி, கொய்யாவின் விதைகளை பிரித்துக்கொள்ளவும்
  4. இப்போது தேவையான அளவு சர்க்கரை மற்றும் பனிக்கட்டிகளை சேர்த்துக்கொள்ளவும்.
  5. தேவையெனில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

கொய்யா பக்க விளைவுகள்:

நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல, உலகில் உள்ள அனைத்திற்கும் நன்மை, தீமை என இரு பக்கங்கள் உள்ளது. கொய்யாவானது அதிக நன்மைகளை கொண்டிருந்தாலும் இதற்கும் சில பக்க விளைவுகள் இருக்கலாம். அதனை காண்போம்.

கொய்யாவின் பக்க விளைவுகள் என்பது அறிவியல் பூர்வமாக இது வரைக்கும் விளக்கப்படவில்லை. இதற்கு ஆராய்ச்சிகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் ஒரு நாளிற்கு 2 முதல் 3 கொய்யா சாப்பிடுவது நல்லது. மேலும் கர்ப்பகாலத்தில் இதனை உட்கொள்ளும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி எடுத்துக்கொள்வது சிறந்தது.

இறுதியாக

நம் அன்றாட வாழ்வில் எளிதில் கிடைக்கக்கூடிய கொய்யாவானது, பல ஊட்டச்சத்துக்களை தன்னுள் அடக்கியுள்ளது. ஆரோக்கியம்,ஆரோக்கியம் என செயற்கை மருந்துகளையும் ஆரோக்கிய பானங்களையும் வாங்கி பயன்படுத்துவதை விட நமக்கு சுலபமாக கிடைக்க கூடிய பழங்களையும் காய்கறிகளையும் வாங்கி உண்ணலாம். கொய்யாவானது உடலுக்கு ஆற்றலையும் ஊக்கத்தினையும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது. இதன் பக்க விளைவுகள் இன்னும் கண்டறியப்படாததால் அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது மருத்துவரின் ஆலோசனையை கேட்டறிதல் நல்லது.

தொடர்பான கேள்விகள்

கொய்யாப்பழத்தின் தன்மை: குளிர் பழமா இல்லை சூடான பழமா?

கொய்யாவானது வெயில் இருந்து உடலைக் காத்து குளிர்ச்சியடையச் செய்கிறது. எனவே இது உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பழமாகும்.

ஒரு நாளிற்கு எத்தனை கொய்யாப்பழம் சாப்பிடலாம்?

தாராளமாக ஒரு நாளிற்கு இரண்டு முதல் மூன்று கொய்யாப்பழங்கள் சாப்பிடலாம்.

கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?

கொய்யா போன்ற கடினமான இழைகளைக் கொண்ட பழங்கள் உங்கள் செரிமான அமைப்பை மெதுவாக்கலாம். எனவே, வெறும் வயிற்றில் கொய்யா சாப்பிட வேண்டாம்.

சாப்பிட்ட பின்பு கொய்யாப்பழம் சாப்பிடலாமா?

ஆம், உணவு உண்ட பிறகு கொய்யாபழம் உண்ணலாம். இது உங்களின் செரிமானத்தை சீராக்கும்.

கொய்யாப்பழ ஜூஸ் எப்பொழுது குடிக்கலாம்?

கொய்யாப்பழ ஜூஸை காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் உங்கள் உணவுடன் சேர்த்து குடிக்கலாம்.

கொய்யாப்பழம் அல்லது கொய்யாப்பழ ஜூஸை வெறும் வயிற்றில் உண்ணலாமா?

கொய்யா போன்ற கடினமான இழைகளைக் கொண்ட பழங்கள் உங்கள் செரிமான அமைப்பை மெதுவாக்கலாம். எனவே, வெறும் வயிற்றில் கொய்யா அல்லது கொய்யாப்பழ ஜூஸை வேண்டாம்.

கொய்யா விதைகளை சாப்பிடலாமா?

ஆம், கொய்யா விதைகளை சாப்பிடலாம்.

ஏன் சில கொய்யாப்பழங்கள் ரோஸ் நிறத்திலும் சில வெள்ளை நிறத்திலும் உள்ளன?

இளஞ்சிவப்பு கொய்யாக்களில் கரோட்டினாய்டுகள் உள்ளன, அவை அவற்றின் சிறப்பியல்பு நிறத்தை கொடுக்கும் கலவைகள். வெள்ளை கொய்யாக்களில் இந்த கரோட்டினாய்டுகள் இல்லை.

கொய்யாவானது மற்ற மொழிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கொய்யாவை பிரெஞ்சு மொழியில் கோயாவ் என்றும் ஸ்பானிஷ் மொழியில் குயாபா என்றும் இந்தியில் அம்ரூட் என்றும் அழைக்கிறார்கள்.

கொய்யாவானது உடலுக்கு ஆற்றல் தரக்கூடியதா?

ஆம். கொய்யாவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது புத்துணர்ச்சி அளிக்கும் மற்றும் உங்களுக்கு ஆற்றலை வழங்கும்.

கொய்யாப்பழம் சிறுநீரகத்திற்கு நல்லதா?

கொய்யாவில் பொட்டாசியம் உள்ளது, இது சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படாது. உங்களுக்கு சிறுநீரக பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால், இந்த பழத்தை உட்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரிடம் பரிந்துரையுங்கள்.

இரவு நேரத்தில் கொய்யாப்பழம் சாப்பிடலாமா?

ஆம், நீங்கள் இரவில் கொய்யா சாப்பிடலாம். ஊட்டச்சத்து நிறைந்த இந்த பழம் எளிதில் ஜீரணமாகி மறுநாள் காலையில் குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.

கொய்யாப்பழம் சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்கலாமா?

ஆம். கொய்யா சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் செரிமான செயல்முறையை மேலும் எளிதாக்கும்.

கொய்யாப்பழ இலைகள் சத்துள்ளதா?

ஆம் , கொய்யாப்பழ இலைகள் மிகவும் நல்லது . இதில் எத்தனால் இருப்பதால் ஆண்களுக்கு பெர்ட்டிலிட்டியை அதிகரிக்கும்.

Sources

Articles on StyleCraze are backed by verified information from peer-reviewed and academic research papers, reputed organizations, research institutions, and medical associations to ensure accuracy and relevance. Check out our editorial policy for further details.
Was this article helpful?
The following two tabs change content below.