மலச்சிக்கலுக்கான வீட்டு வைத்தியங்கள் – Home Remedies for Constipation in Tamil

Written by StyleCraze

நம்மில் 90% மக்களுக்கு மலச்சிக்கல் என்ற குறைபாடு இருக்கலாம்; ஆனால், பெரும்பான்மையானவர்கள் அதை ஒத்துக்கொள்வதில்லை. 60% சதவிகித மக்கள் நாள்பட்ட மலச்சிக்கலுக்கு ஆளாகியிருக்கலாம்.

மலச்சிக்கல் எனும் பிரச்சனை மலக்குடல் வழியாக மலம் வெளியேறாமல் இருப்பதால் தான் ஏற்படுகிறது மற்றும் பொதுவாக  மலம் கழிப்பதற்கு இடையே இருக்கும் இடைவெளி அதிகரிக்கும். சீரற்ற மலம் வெளியேற்றம் என்பது வாரத்திற்கு மூன்று முறைக்கும் குறைவான தடவை மலம் வெளியேறியிருப்பதை குறிக்கும். இந்த குடல் சார்ந்த பிரச்சனையை கண்டறிவதற்கு உடல் பரிசோதனை, சில இரத்த பரிசோதனைகள் மற்றும் கொலொனோஸ்கோபி போன்ற முறைகளை பயன்படுத்தலாம் (1).

மலச்சிக்கலுக்கான காரணங்கள் – Causes of Constipation in Tamil

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, எண்ணற்ற ஆரோக்கிய மற்றும் வாழ்க்கை முறை காரணிகளால் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கின்றனர்; இவ்வளவு ஏன் பிறந்த குழந்தைகள் கூட ‘மோஷன் மேனஸ்’ எனும் மலச்சிக்கல் குறைபாட்டை சந்திக்கின்றனர். மலச்சிக்கலை ஏற்படுத்தும் காரணிகள் மிகவும் சாதாரணமானவையே, அவற்றை பற்றி இங்கு படிக்கும் பொழுது இத்தனை நாள் இவற்றை உணராதது ஏன் என்று நீங்களே எண்ணுவீர்கள்! வாருங்கள் மலச்சிக்கலை ஏற்படுத்தும் சில பொதுவான காரணங்கள் என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம்.

1. குறைவான கரையக்கூடிய அல்லது கரையாத நார்ச்சத்தினை உட்கொள்ளல்

கரையக்கூடிய அல்லது கரையாத நார்ச்சத்து என்பது செரிக்கப்படாத உணவின் ஒரு பகுதியாகும். இது குடலில் தங்கி, மலம் வாயிலாக உடலை விட்டு செல்கிறது. மலத்தை சேர்த்து மலக்குடல் சரியாக இயங்க நார்ச்சத்து உதவுகிறது; நார்ச்சத்து நிறைந்த உணவு முறை கொண்டு மலச்சிக்கலை குணப்படுத்தவும், இப்பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும் முடியும்.

2. குறைந்த அளவு திரவத்தை பருகுதல்

நார்ச்சத்து வேலை செய்ய திரவம் அவசியம் தேவை; நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளும் பொழுது அதிக அளவு நீரை அருந்த வேண்டியதும் அவசியம். தினந்தோறும் குறைந்தபட்சம் 2 லிட்டர் நீரையாவது அருந்த வேண்டும்; போதிய அளவு நீர் அருந்தாததால் குடலில் ஏற்படும் அடைப்பை சரி செய்து, சிக்கலான பிரச்சனைகளை தடுக்க உதவும்.

3. மருந்து மாத்திரைகள்

பிற நோய்க்குறைபாடுகளை சரி செய்ய எடுத்துக்கொள்ளப்பட்ட மருந்துகள் அல்லது மாத்திரைகளால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. ஆன்டி ஹிஸ்டமைன்கள், மனஅழுத்த எதிர்ப்பு பொருள், வலி நிவராணி மருந்து, ஆண்டாசிட்கள் மற்றும் இரும்பு சத்து சப்ளிமெண்ட்டுகள் போன்றவை மலச்சிக்கலை ஏற்படுத்த காரணங்களாக அமையலாம்; இம்மருந்துகள் முக்கிய மலச்சிக்கல் அறிகுறிகள் உருவாக காரணமாகலாம்.

4. கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு

கர்ப்ப காலத்தின் பொழுது உண்டாகும் புரோஜெஸ்டிரான் ஹார்மோன் சுரப்பினால், குடலில் உணவு பொருட்களின் இயக்கத்தால் ஏற்படும் தசை சுருக்கங்கள் மெதுவாகலாம் (2). மேலும் கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ளும் அதிகப்படியான இரும்புச்சத்து, மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். பொதுவாக இந்த பிரச்சனை முதல் ட்ரைமெஸ்டரின் பொழுது ஏற்படலாம், அடுத்தடுத்த மாதங்களில் இது தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

5. ஹைப்போ தைராய்டிசம்

ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள் ஹார்மோன் உருவாக்க குறைபாட்டை பொறுத்து மாறுபடும்; இது பல வருடங்களாக உடலில் மெதுவாக வளர்ச்சியடையக்கூடிய ஒன்று. உடல் வளர்சிதை மாற்றம் மெதுவடைந்தால், ஒருவரால் இந்நோய்க்கான அறிகுறிகளை தெளிவாக கண்டறிந்து கொள்ள முடியும். சோர்வு, விவரிக்க முடியாத உடல் எடை அதிகரிப்பு, மலச்சிக்கல் போன்றவை ஹைப்போ தைராய்டிசத்தின் முக்கிய அறிகுறிகள் ஆகும் (3).

6. எரிச்சலான குடல் நோய்க்குறைபாடு – IBS (Irritable Bowel Syndrome)

எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறைபாடு or IBS என்பது குடல் அல்லது பெருங்குடலை பாதிக்கக்கூடிய ஒரு பொதுவான நோய் ஆகும். IBS நோய், தசைப்பிடிப்புகள், வயிறு ஊதுதல், வாயுத்தொல்லை, டையேரியா எனும் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உணவு முறை, வாழ்க்கை முறை, அழுத்தம் போன்றவற்றை சமாளிப்பதன் மூலம் IBS நோயை கட்டுப்படுத்தலாம் (4). மருந்து மற்றும் கலந்தாய்வு போன்றவை கூட இந்நோயை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.

7. போதிய உடல் செயல்பாடின்மை

போதிய உடல் செயல்பாடு இல்லாமல் இருந்தால், அது உடல் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கி விடலாம். இதனால் மலச்சிக்கல் மற்றும் இதர ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம். ஒரு மனிதனை ஆரோக்கியமான உடற்கட்டமைப்புடன் வைக்க உடற்பயிற்சி உதவும்.

8. சாக்லேட்

பெரும்பாலான மக்களுக்கு சாக்லேட் என்றால் அலாதி விருப்பம்; ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. எரிச்சலான குடல் நோய்க்குறைபாடு கொண்ட மக்கள் (IBS) சாக்லேட் உண்பதை அறவே தவிர்த்துவிட வேண்டும். சாக்லேட் மற்றும் மலச்சிக்கலுக்கு இடையேயான தொடர்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது; ஆனால், பொதுவாக கொழுப்பு நிறைந்த சாக்லேட்டுகள், செரிமான இயக்கத்தை மெதுவாக்கும்.

9. ஆரோக்கிய சப்ளிமெண்ட்டுகள்

ஆரோக்கிய சப்ளிமெண்ட்டுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்; இரும்பு மற்றும் கால்சியம் சப்ளிமெண்ட்டுகள் தான், மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடிய இரண்டு முக்கிய குற்றவாளிகள். இவ்விரண்டு சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்வதையும் குறைத்து, இச்சத்துக்களை உணவின் மூலம் பெற முயல வேண்டும். சரிவிகித மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது தேவையான எல்லா வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்களை அளித்து, உடலை சரிவர இயங்கச் செய்யும்.

10. மலமிளக்கியின் அதிகப்படியான பயன்பாடு

மலமிளக்கி எனும் மலத்தை வெளியேற்ற உதவும் தூண்டு பொருட்களை தினசரி எடுத்துக் கொள்வது, பெருங்குடலின் பொருட்களை நகர்த்தும் திறனை இழக்கச் செய்யும். இனிமா (Enema) போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தினாலும் இதே விளைவு தான் ஏற்படும். ஆகையால், இப்பொருட்களை தினசரி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்; இல்லையேல் மலச்சிக்கல் நோயை குணப்படுத்துவது மிகவும் கடினமான செயல் ஆகலாம்.

11. பால் பொருட்கள்

பால் பொருட்களை செரிக்க இயலாத நிலை இருந்து, அதை மீறி பால் பொருட்களை உட்கொண்டால் – அதனால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. ஒரு வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு மாட்டுப்பாலை அளிக்க வேண்டாம்; எந்த ஒரு பால் பொருட்களையும் மருத்துவ அறிவுரையின்றி குழந்தைக்கு அளிக்க வேண்டாம். பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்வது உடல் நலத்திற்கு நல்லது தான், அதில் சந்தேகமே இல்லை; ஆனால், பால் பொருட்கள் குறித்த ஒவ்வாமை கொண்ட நபர்கள் அவற்றை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

12. மனஅழுத்தம்

மனஅழுத்தம் மற்றும் அழுத்தம் போன்றவை மலச்சிக்கலுடன் நேரடித் தொடர்பு கொண்டவை; இப்பிரச்சனைகளை தவிர்க்க ஓய்வு வழிமுறைகளை தினந்தோறும் பின்பற்ற வேண்டும். எந்த ஒரு விஷயம் குறித்த மனஅழுத்தமும் உடலின் சாதாரண செயல்பாட்டை பாதித்து, சீரற்ற குடல் இயக்கத்தை ஏற்படுத்தலாம்.

13. அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர் அல்லது மலம் வரும் பொழுது அதை அடக்கி வைத்திருப்பது மிகவும் ஆபத்தான விளைவை ஏற்படுத்தலாம்; இந்த மாதிரியான சூழ்நிலைகளில் பொது கழிவறைகளை பயன்படுத்த தயங்காதீர்கள். ஆரோக்கியமான உடல் நிலையே பிரதானம்; எனவே தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மலம் கழிப்பதை மேற்கொள்வது உடலின் இயக்கத்தை சீரமைக்க உதவும்.

மலச்சிக்கலின் அறிகுறிகள் – Symptoms of Constipation in Tamil

மலம் கழிக்க முடியாத நிலையை தவிர, மலச்சிக்கலை குறிக்கும் பிற மலச்சிக்கல் அறிகுறிகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்:

 • வாயுத்தொல்லை
 • வயிறு ஊதுதல்
 • வயிறு நிறைந்த உணர்வு
 • அடிவயிற்றில் வலி
 • அடிவயிற்று தசைப்பிடிப்புகள்
 • தலைவலி

மலச்சிக்கலின் வகைகள் – Types of Constipations in Tamil

மலச்சிக்கல் என்பது முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை மலச்சிக்கல் என இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது.

முதல் நிலை மலச்சிக்கல்

முதல் நிலை மலச்சிக்கலை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்; அவையாவன: மெதுவான இயக்கம் கொண்ட மலச்சிக்கல், வெளிப்புற மலச்சிக்கல் அல்லது இடுப்பு பகுதி செயலிழப்பு, சாதாரண இயக்கம் கொண்ட மலச்சிக்கல் ஆகியவை ஆகும்.

மெதுவான இயக்கம் கொண்ட மலச்சிக்கல்:

இந்த வகையில், மலத்தின் இயக்கம் குறைந்து – மலம் வெளியேறுவதற்கான நேரம் அதிகரிக்கும். இவ்வகைக்கான மலச்சிக்கல் அறிகுறிகளாவன: சீரற்ற குடல் இயக்கம், வயிறு உப்புதல், அடிவயிற்றில் வசதியின்மை ஆகியவை ஆகும்.

வெளிப்புற மலச்சிக்கல் அல்லது இடுப்பு பகுதி செயலிழப்பு:

இவ்வகை மலச்சிக்கலில், இடுப்பு பகுதி தசைகளின் ஒருங்கிணைப்பு இல்லாத செயல்பாடு, பொருத்தமற்ற ஆசன வாய் சுருக்கம், ஆசன வாய் ஓய்வில் தோல்வி அல்லது மலத்தின் திறனற்ற உந்துதல் போன்ற குறைபாடுகள் ஏற்படலாம். வெளிப்புற மலச்சிக்கல் அறிகுறிகள் ஆவன: மலம் வெளியேறுவதில் கடினத்தன்மை, மலம் எளிதில் வெளியேறாத தன்மை, மலக்குடலில் வசதியின்மை போன்றவை ஆகும். இது பாரம்பரிய மலச்சிக்கல் வைத்திய முறைக்கு அதிகம் மறுமொழி அளிக்காத மலச்சிக்கல் வகையாகும்.

சாதாரண இயக்கம் கொண்ட மலச்சிக்கல்:

முதல் நிலை குரோனிக் மலச்சிக்கல் குறைபாடு கொண்ட சில மனிதர்களுக்கு மெதுவான இயக்கம் கொண்ட அல்லது வெளிப்புற மலச்சிக்கல் ஆகிய இரண்டு குறைபாடும் இருக்காது; இவர்களுக்கு சாதாரண இயக்கம் கொண்ட மலச்சிக்கல் குறைபாடு ஏற்பட்டிருக்கும். இந்த வகை மலச்சிக்கல் பிரச்சனை கொண்டவர்கள், தினசரி குடல் இயக்கம் சரிவர அமையாததால் மலம் வெளியேறுவதில் கடினமான மலம், அடிவயிறு ஊதுதல், வசதியின்மை போன்ற பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வரலாம். இப்பிரச்சனை அதிகப்படியான உளவியல் அழுத்தத்தால் ஏற்படலாம்; இது ஒரு சாதாரண குரோனிக் மலச்சிக்கல் வகை ஆகும்.

இரண்டாம் நிலை மலச்சிக்கல்

இரண்டாம் நிலை மலச்சிக்கல் என்பது உடல் வளர்சிதை தொந்தரவுகளான ஹைப்போ தைராய்டிசம், பர்கின்சன் நோய், மல்டிபிள் ஸ்கிளீரோசிஸ், முதுகுத்தண்டு காயங்கள் போன்ற நரம்பு பிரச்சனைகள், செலியாக் நோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் டைவர்டிகுலர் நோய் ஆகியவற்றால் ஏற்படலாம். பல்வேறு மருந்து, மாத்திரைகளும் இரண்டாம் நிலை மலச்சிக்கலை ஏற்படுத்த காரணம் ஆகலாம்.

மலச்சிக்கலுக்கான வீட்டு வைத்திய முறைகள் – Home Remedies for Constipation in Tamil

மருந்து, மாத்திரைகள் மற்றும் சிகிச்சை முறைகள் போன்றவை உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தலாம். ஆகவே, இயற்கை முறை வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றுவது நோய்க்குறைபாடுகளை பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்த உதவும். வாயுத்தொல்லை குறைபாடுகள் அல்லது எரிச்சலான குடல் நோய்க்குறைபாடு கொண்டிருக்கும் ஒருவர் கவனமாக, ஒழுக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி- என்று யோசிக்கிறீர்களா? உடலின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்தாலே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுத்து விடலாம். மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க உதவும் மலச்சிக்கல் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

தீர்வு 1: தண்ணீர்

தேவைப்படும் பொருட்கள்
 • 2-3 லிட்டர் தண்ணீர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • தினமும் காலை எழுந்ததும் தண்ணீரை சூடு செய்து வெந்நீரை பருக வேண்டும்
 • நாள்தோறும் 2-3 லிட்டர் நீரை கட்டாயம் பருக வேண்டும்
எப்படி இது வேலை செய்யும்?

மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கும் நபர்கள் அதிக திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்; குறிப்பாக அதிக அளவு நீர் அருந்தினால், குடலில் பல நாட்களாக சேர்ந்திருக்கும் மலம் வெளியேற உதவும்.

தீர்வு 2: ஆமணக்கு எண்ணெய்

தேவைப்படும் பொருட்கள்
 • 1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • காலை வேளையில் வெறும் வயிற்றில் ஆமணக்கு எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்
 • வெறும் ஆமணக்கு எண்ணெயை உட்கொள்வது கடினமாக தோன்றினால், ஆமணக்கு எண்ணெயை எலுமிச்சை சாறு அல்லது சூடான பாலில் கலந்து பருகலாம்.
எப்பொழுது இதை செய்ய வேண்டும்?

ஒரு சில நாட்களுக்கு தினமும் காலையில் இதை பருக வேண்டும்

எப்படி இது வேலை செய்யும்?

ஆமணக்கு எண்ணெய் என்பது மலச்சிக்கல் நீங்க வழிவகை செய்யும் ஒரு அற்புதமான பொருள் ஆகும்; காலையில் வெறும் வயிற்றில் இந்த எண்ணெயை எடுத்துக் கொண்டால், ஒரு சில மணிநேரத்தில் மலத்தை இளக்கி வெளியேற்ற உதவும் (5).

எச்சரிக்கை

மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் ஆமணக்கு எண்ணெயை உட்கொள்ள வேண்டாம்; மேலும் இதனை ஏழு நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது.

தீர்வு 3: பப்பாளி

தேவைப்படும் பொருட்கள்
 • 1 பழுத்த பப்பாளி
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • பப்பாளி பழத்தை அப்படியே அல்லது பழச்சாறு தயாரித்து பருகலாம்.
எப்பொழுது இதை செய்ய வேண்டும்?

நோய்க்குறைபாடு சரியாகும் வரை தினமும் இதை உட்கொள்ள வேண்டும்

எப்படி இது வேலை செய்யும்?

மலச்சிக்கல் நீங்க வழிவகை செய்ய பப்பாளி பழத்தில் உள்ள என்சைம்கள் பெரிதும் உதவும்.

எச்சரிக்கை

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இப்பழத்தை உண்பது நல்லதல்ல; உண்ணும் முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

தீர்வு 4: ஆளிவிதை

தேவைப்படும் பொருட்கள்
 •   ஆளி விதைகள்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • ஸ்மூத்தி பானங்கள், சாலட்கள், ஓட்ஸ் உணவு போன்றவற்றில் ஆளி விதைகளை சேர்த்து உட்கொள்ளலாம்.
எப்பொழுது இதை செய்ய வேண்டும்?

நோய்க்குறைபாடு சரியாகும் வரை இதை உண்ண வேண்டும்

எப்படி இது வேலை செய்யும்?

மலச்சிக்கல் நீங்க வழிவகை செய்ய ஆளி விதைகளில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை பெரிதும் உதவும். பிரௌன் நிற அல்லது தங்க நிற ஆளி விதைகளை பயன்படுத்தலாம்; இரண்டு வகையும் நல்ல பலன்களை அளிக்கும்.

தீர்வு 5: பேக்கிங் சோடா

தேவைப்படும் பொருட்கள்
 • 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா
 • 1 தம்ளர் டெபிட் நீர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • பேக்கிங் சோடாவை டெபிட் நீரில் கலந்து பருகலாம்.
 • இவ்வாறு தொடர்ந்து பருகி வருகையில், குறைவான காலகட்டத்திலேயே குடல் இயக்கம் சீரடைவதை உணர முடியும்.
எப்பொழுது இதை செய்ய வேண்டும்?

இப்பானத்தை வெறும் வயிற்றில் பருக வேண்டும்

எப்படி இது வேலை செய்யும்?

சோடியம் பைகார்பனேட் எனும் பேக்கிங் சோடா மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவும். இது வாயுத்தொல்லையை குறைத்து, வயிற்றின் அமிலத்தன்மையை போக்கி, வயிறு உப்புசம் மற்றும் வயிறு நிறைந்த உணர்வை நீக்கி மலச்சிக்கலை குணப்படுத்த உதவும் (6). இது பெரியவர்கள், சிறியவர்கள் என எல்லா வயதினருக்கும் ஒரே மாதிரியான நன்மைகளை அளிக்கும்.

தீர்வு 6: தேன்

தேவைப்படும் பொருட்கள்
 • 1 தேக்கரண்டி தேன்
 • 1 தம்ளர் சூடான நீர்
 • 1 எலுமிச்சை
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • சூடான நீரில் தேன், எலுமிச்சை ஆகியவற்றை கலந்து பருகலாம்.
எப்பொழுது இதை செய்ய வேண்டும்?

இப்பானத்தை தினமும் வெறும் வயிற்றில் பருக வேண்டும்

எப்படி இது வேலை செய்யும்?

தேன் என்பது ஒரு மலமிளக்கியாக செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய உதவும்; மலச்சிக்கலை குணப்படுத்த உதவும் முக்கிய வீட்டு வைத்தியங்களுள் தேனும் ஒன்று.

தீர்வு 7: பால்

தேவைப்படும் பொருட்கள்
 • 1 தம்ளர் சூடான பால்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • தினந்தோறும் அல்லது அடிக்கடி சூடான பாலை பருகலாம்.
எப்பொழுது இதை செய்ய வேண்டும்?

ஒரு நாளில் உணவு உண்ட பின் அல்லது உண்ணும் முன் பாலை பருகலாம்

எப்படி இது வேலை செய்யும்?

பால் மற்றும் பால் பொருட்களில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மலச்சிக்கலை குணப்படுத்த உதவும்.

எச்சரிக்கை

பால் குறித்த ஒவ்வாமை உள்ளவர்கள் பால் பருகுவதை தவிர்ப்பது நல்லது.

தீர்வு 8: திரிபாலா

தேவைப்படும் பொருட்கள்
 • 2 தேக்கரண்டி திரிபாலா பொடி
 • 1 தம்ளர் சூடான நீர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • சூடான நீரில் திரிபாலா பொடியை கலந்து, அப்பானத்தை இரவு தூங்கும் முன் குடிக்க வேண்டும்.
 • இந்த பானத்தை குடித்த பிறகு எதையும் உண்ணக்கூடாது; இப்பானத்தை குடித்து 30 நிமிடங்களுக்கு பிறகு உணவு பொருட்களை உண்ணலாம்.
எப்பொழுது இதை செய்ய வேண்டும்?

சில நாட்களுக்கு இரவு தூங்கும் முன் இப்பானத்தை பருக வேண்டும்

எப்படி இது வேலை செய்யும்?

பிரௌன் நிறத்தில் காணப்படும் இந்த பொடி மூன்று தாவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டது; அமலாக்கி, ஹரிதாக்கி, பீபிடாக் போன்ற தாவரங்களிலிருந்து திரிபாலா பொடி தயாரிக்கப்படுகிறது. செரிமானத்தை மேம்படுத்த உதவும் செரிமான என்சைம்களை உருவாக்கி தசை சுருக்கத்தை மேம்படுத்த உதவும் ஒரு பழமையான ஆயுர்வேத மருந்து திரிபாலா ஆகும். இது ஒரு இயற்கையான மலமிளக்கியாக செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது (7). மலச்சிக்கலுக்கான குறிப்புகளில் இது முக்கியமான ஒன்று.

தீர்வு 9: தேங்காய் எண்ணெய்

தேவைப்படும் பொருட்கள்
 • தேங்காய் எண்ணெய்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • தினந்தோறும் காலை மற்றும் இரவு வேளையில் அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை உட்கொள்ளவும்; இந்த எண்ணெயை உணவில் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம்.
 • குரோனிக் மலச்சிக்கலை குணப்படுத்த இந்த முறை உதவும்.
எப்பொழுது இதை செய்ய வேண்டும்?

இம்முறையை பின்பற்றினால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.

எப்படி இது வேலை செய்யும்?

தேங்காய் எண்ணெயில் அதிக அளவு நடுத்தர – சங்கிலி கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன; இவை சீரற்ற குடல் இயக்க பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும். இந்த எண்ணெய் குரோனிக் மலச்சிக்கலால் அவதிப்படும் மக்களுக்கு தீர்வு வழங்க உதவுகிறது (8). இது மலச்சிக்கலுக்கான குறிப்புகளில் மிக முக்கியமான ஒன்று.

எச்சரிக்கை

ஒரு நாளைக்கு 4 தேக்கரண்டிகளுக்கு மேல் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளக்கூடாது; இது வயிற்றுபோக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

தீர்வு 10: வைட்டமின்கள்

தேவைப்படும் பொருட்கள்
 • வைட்டமின் சி மாத்திரை
 • வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரை
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • வைட்டமின் சி மாத்திரையை உடைத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து பருகவும்.
 • இதனுடன் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரையை உட்கொள்ளவும்.
எப்பொழுது இதை செய்ய வேண்டும்?

இம்முறையை ஒரு சில நாட்களுக்கு மேற்கொண்டால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

எப்படி இது வேலை செய்யும்? 

வைட்டமின் சி சத்து குடல் பகுதியை சுத்தமாக்கும் காரணியாக செயல்பட்டு, மலச்சிக்கல் குறைபாட்டின் விளைவுகளை குறைக்க உதவுகிறது; இது செரிமான உறுப்புகளை சரிவர செயல்பட உதவுவதோடு, உடலில் சேர்ந்துள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உறுப்புகள், முக்கியமாக B1, B5, B9 மற்றும B12 போன்றவை மலமிளக்கிகளாக செயல்பட்டு கடினமான மலம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது (9). ஆகவே, செரிமான இயக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்ற வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

தீர்வு 11: கொய்யாப்பழம்

தேவைப்படும் பொருட்கள்
 • கொய்யாப்பழம்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • தினமும் கொய்யாப்பழம் அல்லது கொய்யாப்பழ சாறை பருகலாம்.
எப்பொழுது இதை செய்ய வேண்டும்?

இம்முறையை தொடர்ந்து பின்பற்றி வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்; இது மலச்சிக்கல் குறிப்புகளில் மிக முக்கியமானது. இது உடலுக்கு வேறு பல நன்மைகளையும் வழங்கும்.

எப்படி இது வேலை செய்யும்?

கொய்யாப்பழம் நார்ச்சத்து நிறைந்த ஒரு பழம்; பொதுவாகவே நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவுகின்றன.

தீர்வு 12: மூலிகை தேநீர்

தேவைப்படும் பொருட்கள்
 • மூலிகை தேநீர் இலைகள்
 • நீர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • தண்ணீரை கொதிக்க வைத்து, இந்த மூலிகை தேநீர் இலைகளை போடவும்.
 • பின் 30 நிமிடங்களுக்கு இக்கலவையை ஆற வைத்து, இந்த இலைகளை வடிகட்டி பருகவும்.
எப்பொழுது இதை செய்ய வேண்டும்?

ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு கப் தேநீர் பருகலாம்.

எப்படி இது வேலை செய்யும்?

மூலிகை தேநீர் வகைகள் பொதுவாக இயற்கை மலமிளக்கிகளாக செயல்பட்டு, மலத்தை எளிதாக வெளியேற்ற உதவுகின்றன (10). இவை பெருங்குடலில் ஒரு குறிப்பிட்ட அளவு நீரை இருக்க செய்து, மலத்தை எளிதில் வெளியேற்ற உதவுகின்றன. தேன் அல்லது வெல்லப்பாகு போன்றவற்றை மூலிகை தேநீரில் கலந்து கொள்ளலாம்; இவை மலமிளக்கும் பண்புகளை மேம்படுத்த உதவும். மலச்சிக்கலை குணப்படுத்த உதவும் மிகச்சிறந்த மூலிகை தேநீர் வகைகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 • கிரீன் டீ எனும் பசுமை தேநீர்
 • பெப்பர்மின்ட்தேநீர்
 • பிளாக் டீ

மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு கூட இந்த மூலிகை தேநீர் வகைகளை அளிக்கலாம்.

தீர்வு 13: ஆலிவ் எண்ணெய்

தேவைப்படும் பொருட்கள்
 • 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
எப்பொழுது இதை செய்ய வேண்டும்?

மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும் வரை, இம்முறையை ஒரு சில நாட்களுக்கு மேற்கொள்ளலாம்.

எப்படி இது வேலை செய்யும்?

மலச்சிக்கலை குணப்படுத்த இயற்கை எண்ணெய்கள் தான் மிகச்சிறந்த மருந்துகள் ஆகும்; குடல் இயக்கத்தை மிருதுவாக்கி, மலத்தை வெளியேற்றும் மலமிளக்கியாக ஆலிவ் எண்ணெய் செயல்படும். இதை பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கூட பயன்படுத்தலாம்; குடல் பகுதிகளின் சுவர்களை சரி செய்து, எளிதில் மலம் வெளியேற உதவுகிறது (11, 12). வெறும் வயிற்றில் ஆலிவ் எண்ணெயை எடுத்துக் கொள்வதுடன், உணவுப்பொருட்களில் இந்த எண்ணெயை சேர்த்து உணவு தயாரிக்கலாம்.

தீர்வு 14: ப்ரூனே பழச்சாறு

தேவைப்படும் பொருட்கள்
 • 2 தம்ளர் ப்ரூனே பழச்சாறு
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • காலை மற்றும் இரவு வேளைகளில் ஒரு தம்ளர் ப்ரூனே பழச்சாறை பருகலாம்.
 • ப்ரூனே பழச்சாறுக்கு பதிலாக ப்ரூனே பழங்களை கூட உட்கொள்ளலாம்
எப்பொழுது இதை செய்ய வேண்டும்?

இதனை தினசரி உட்கொள்வது மலச்சிக்கலை குணப்படுத்த உதவும்

எப்படி இது வேலை செய்யும்?

ப்ரூனே பழங்கள் நார்ச்சத்து நிறைந்தவை; நாள்பட்ட மலத்தை ஒன்று சேர்த்து, அவற்றை எளிதில் வெளியேற்ற உதவுகின்றன. இப்பழத்திலுள்ள டைஹைட்ரோபினைல் பெருங்குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது (13). இப்பழத்தில் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் நிறைந்துள்ளன (14).

எச்சரிக்கை

ஒரு தம்ளர் ப்ரூனே பழச்சாறை பருகி, அது செரிமானம் அடைந்த பின்னர் தான் மற்றொரு பழச்சாறை பருக வேண்டும். ஒரு தம்ளரை காலையிலும், இன்னொன்றை இரவிலும் பருகலாம்; இரண்டு தம்ளர் பழச்சாறுகளுக்கும் இடையில் போதிய இடைவெளி இல்லையெனில், அது டையேரியா குறைபாட்டை ஏற்படுத்தலாம்.

தீர்வு 15: உலர் திராட்சைகள்

தேவைப்படும் பொருட்கள்
 • உலர் திராட்சைகள்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • உலர் திராட்சைகளை நீரில் ஊறவைத்து, தினந்தோறும் சிறிது சிறிதாக உட்கொள்ளலாம்.
 • மேலும் ஸ்மூத்தி பானங்கள், சாலட்கள், உணவு பொருட்களில் உலர் திராட்சைகளை சேர்த்து உட்கொள்ளலாம்.
எப்பொழுது இதை செய்ய வேண்டும்?

இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம்.

எப்படி இது வேலை செய்யும்?

உலர் திராட்சையில் நார்ச்சத்து மிகுந்து இருப்பதால், அது மலச்சிக்கல் நோய்க்குறைபாட்டை சரி செய்ய உதவும். நீரில் ஊற வைத்த உலர் திராட்சைகள் இயற்கை மலமிளக்கியாக செயல்படுகின்றன.

மலச்சிக்கலுக்கான உணவு முறை – Diet for Constipation in Tamil

மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்துவது எப்படி? என்று சிந்திக்கிறீர்களா – வெறும் உணவு முறையில் மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் மலச்சிக்கலை குணப்படுத்தலாம். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், முழுதானியன்கள், ஓட்ஸ், பிரௌன் அரிசி மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் – பழங்களான புரோக்கலி, இனிப்பு உருளை, பீன்ஸ், ஆப்பிள், பீச் பழங்கள், பேரிக்காய், பெர்ரி பழங்கள் போன்றவற்றை கட்டாயம் தங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து மிகுந்த உலர் பழங்கள் மற்றும் பருப்பு வகைகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். பிற ஆரோக்கியமான உணவுகளான ருபார்ப் (rhubarb), ஆர்டிசோக்ஸ் (artichokes), லெகும்கள் (legumes) போன்றவற்றையும் உட்கொள்ளலாம்.

செரிமான குறைபாடு உள்ளவர்கள் பால், வெண்ணெய், சிவப்பு இறைச்சி, பாக்கெட் செய்யப்பட்ட குளிரூட்டப்பட்ட இரவு உணவுகள், வறுத்த உணவுகள், வாழைப்பழம் ஆகிய உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மலச்சிக்கலுக்கான யோகா பயிற்சிகள் – Yoga for Constipation in Tamil

இப்பொழுதிருக்கும் அவசர காலத்தில் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது அல்லது மிகக்குறைவான அளவு உடற்பயிற்சி செய்வது மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தலாம். மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்துவது எப்படி? என்று யோசிப்பவர்கள் தினசரி உடற்பயிற்சி & யோகா பயிற்சிகளை செய்து வந்தாலே போதும். எனவே, ஓட்டம், நடைப்பயிற்சி, டென்னிஸ் விளையாடுதல், ஜிம்மிற்கு செல்லுதல், ஏரோபிக்ஸ், கார்டியோ ட்ரில்கள், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை தினமும் செய்ய வேண்டும். இவ்வாறு கடினமாக உடற்பயிற்சி செய்வது, அதிகப்படியான திரவத்தை உட்கொள்ள செய்யும்; அவ்வகையில் அது மலச்சிக்கலை குணப்படுத்த உதவும்.

மேற்கூறிய உடற்பயிற்சிகளை செய்ய விருப்பம் இல்லாத நபர்கள், பவன் முக்தாசனம், உதகன்பாடாசனம், சுகாசனம், வைரசானம் போன்ற யோகா ஆசனங்களை செய்வது வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற குடல் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.

மலச்சிக்கலினால் ஏற்படும் பக்க விளைவுகள் – Side Effects Constipation in Tamil

மலச்சிக்கல் பிரச்சனை என்பது சீரற்ற குடல் இயக்கம் மற்றும் மலம் கழிப்பதில் காணப்படும் கடினத்தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இது தவிர மலச்சிக்கலினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்று இப்பொழுது காணலாம்:

 • அதீத அசௌகரியம்
 • வயிறு ஊதியது போன்ற உணர்வு
 • அடிவயிற்று வலி
 • வீங்கிய அடிவயிறு
 • வாந்தி எடுத்தல்
 • தலை வலி
 • முதுகு வலி (முழுமையான முதுகு அல்லது ஒரு பக்க முதுகு, கர்ப்பிணிகளை தவிர)
 • மார்பு வலி
 • கால்களில் ஏற்படும் வலி

மலச்சிக்கல் பிரச்சனை அதிக காலத்திற்கு தொடர்ந்து காணப்பட்டால், அது நீண்ட காலத்திற்கு தொடரக்கூடிய, வலி மிகுந்த, குணப்படுத்த கடினமான நோய்களான ஆசன பிளவுகள், மூல வியாதி போன்ற ஆரோக்கிய சீர்கேடுகளை ஏற்படுத்தலாம். மலச்சிக்கல் பிரச்சனையால் உடலில் நச்சுப்பொருட்கள் உருவாகி வளரலாம்; ஆகவே இந்த பிரச்சனை உடலின் மற்ற பாகத்தை பாதித்து, வாழ்வை நரகமாக்கும் முன், இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

மலச்சிக்கல் பிரச்சனைக்கான முன்னெச்சரிக்கை குறிப்புகள் – Prevention Tips For Constipation in Tamil

ஒவ்வொரு பிரச்சனைக்கும் நிச்சயம் ஒரு தீர்வு இருக்கும்; மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்க உதவும் மலச்சிக்கல் குறிப்புகள் என்னென்ன என்று கீழே காணலாம்:

 • தனிப்பட்ட நேர மேலாண்மை: தூங்கும் முறைகள், உணவு முறைகளுக்கு இடையேயான இடைவெளி போன்றவை குடல் இயக்கத்தை சரி செய்ய உதவும்.
 • பயணம் செய்தல்: பயணம் செய்யும் பொழுது முறையான, சரியான உணவு இடைவெளியை, உணவு பொருட்களை பின்பற்ற இயலாமல் போகலாம். ஆகவே மலச்சிக்கலை தீவிரமாக்கும் உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது.
 • தொடர்ச்சி: மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வை அடக்காமல் இருக்க வேண்டும்; மீறி அடக்கினால் அது தீவிர குரோனிக் மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
 • உணவு: நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்க உதவும்.
 • உடற்பயிற்சி: தினசரி தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை மேற்கொள்வது மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்க உதவும்.

இதுவரை இந்த பதிப்பில் கூறப்பட்ட எல்லா மலச்சிக்கல் வைத்தியங்களும் இயற்கை முறையில் செய்யக்கூடிய வீட்டு வைத்திய முறைகளே ஆகும்; மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு காண ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளுடன் இங்கு கூறப்பட்டுள்ள மலச்சிக்கலுக்கான வீட்டு வைத்தியங்களை பின்பற்றினால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. சரியான நேரத்திற்கு உண்டு, உறங்கி மற்றும் சிறுநீர், மலம் இவற்றை கழித்து வந்தாலே போதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பெரியவர்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதோடு பச்சிளம் குழந்தைகளுக்கும் கூட இப்பிரச்சனை ஏற்படலாம். இங்கு கூறப்பட்டுள்ள மலச்சிக்கல் வைத்திய முறைகளை குழந்தைகள், பெரியவர்கள் என எவருக்கும் கொடுக்க தொடங்கும் முன், ஒருமுறை மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது; மலச்சிக்கலுக்கான வீட்டு வைத்தியங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நன்மைகளை வழங்கும்.

மலச்சிக்கல் பிரச்சனையை புரிந்து கொள்ள, இது எதனால் ஏற்படுகிறது என அறிய மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன ஆகிய எல்லா விஷயங்களையும் படித்து அறிந்திருப்பீர். உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டிருந்தால் நீங்கள் எவ்வாறு அதை கையாண்டீர்கள்? என்ன விதமான சிகிச்சை முறையை பின்பற்றினீர்கள் என்பது பற்றி கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக பகிருங்கள்.

Was this article helpful?
The following two tabs change content below.