வியக்க வைக்கும் வேர்க்கடலை – நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Peanut Benefits, Uses and Side Effects in Tamil

Written by StyleCraze

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை இப்போது உலகமெங்கும் பரவி இருக்கிறது. முன்னோர்களின் பழங்கால முறைகளை ஆசையோடு அள்ளி எடுத்து அணைத்துக் கொள்ள துடிக்கிறது இன்றைய தலைமுறை. காரணம் அவர்கள் வாழ்ந்த வாழ்வின் ஆரோக்கிய மிச்சங்களே நாம் என்கிற புரிதல் தான்.

அப்படி முன்னோர்கள் தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு அம்சமாக வைத்திருந்தது வேர்க்கடலை எனும் ஜீவ சஞ்சீவினி பருப்பு வகை. அன்றைய காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடம் இந்த வேர்க்கடலை உண்பது பழக்கமாகவே இருந்தது. இட்லி தோசை போல வேர்க்கடலையும் அன்றாட உணவில் தனி இடம் கொண்டிருந்தது.

பீன்ஸ், பட்டாணி போலவே ஒரு தாவர வகையைச் சேர்ந்தது தான் வேர்க்கடலையும். ஆனால் இதன் ஊட்டச்சத்தினை கணக்கில் கொண்டு கொட்டை வகைகளில் சேர்த்துள்ளனர். குறிப்பாக வேர்க்கடலை உலகெல்லாம் பரவியது பதினாறாம் நூற்றாண்டில் தான்.

பூமிக்கு அடியில் தலை வைத்து, பூமிக்கு வெளியே இலை விடுகிற தாவரம், இந்த வேர்க்கடலை. இதன் இலைகள் செடியில் பழுத்த பிறகு, மஞ்சள் நிறமடைந்த இரு மாதங்களில் வேர்க்கடலை முற்றிய வடிவில் கிடைக்கிறது. இது ஏழைகளின் முந்திரி என்று சொல்லப்படுகிறது. மாமிசம், முட்டை, காய்கறிகளை விடவும், இந்த வேர்க்கடலையில் புரதச்சத்து மிகுந்து காணப்படுகிறது. நிலக்கடலை, வேர்க்கடலை, கச்சான் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் வேர்க்கடலை பலரால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரமாகும்.

இது தென் அமெரிக்கா நாட்டை பூர்வீகமாக கொண்டது. தற்போது சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன. இது ஒவ்வொரு ஊருக்கு ஏற்ப ஒவ்வொரு வட்டார பெயரில் அழைக்கப்படுகிறது. வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை அல்லது மல்லாட்டை என பல பெயர்கள் உண்டு. இந்த வேர்க்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணலாம். இதனுடன் வெல்லப்பாகு கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. சில இடங்களில் வேர்க்கடலையை பொடித்து இனிப்புருண்டைகளாகவும் தயாரிக்கின்றனர்.

சீனா தான் உலகிலேயே வேர்க்கடலை உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்குகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், ஆந்திரா, தமிழ்நாடு, மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களை தொடர்ந்து குஜராத் மிகப்பெரிய அளவில் நிலக்கடலையை உற்பத்தி செய்கிறது.

ஐரோப்பியர்கள் வேர்க்கடலையை வெவ்வேறு விதங்களில் பயன்படுத்துகிறார்கள். காபி கொட்டைகளுக்கு பதிலாக வேர்க்கடலையை தான் பயன்படுத்துகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எண்ணெய் உற்பத்தியைத் தவிர, வேர்க்கடலையை வைத்து வெண்ணெய், இனிப்பு தின்பண்டம், சிற்றுண்டி பொருட்கள், சூப்கள் மற்றும் சாலட்கள் தயாரிக்கப்படுகிறது.

வேர்க்கடலை நன்மைகள் (Benefits of Peanut)

நீங்கள் ஒவ்வொரு நாளும் வேர்க்கடலையை சாப்பிட்டால் உங்களுக்கு புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பல சத்துகள் உடலுக்கு கிடைக்கும். வேர்க்கடலை மற்ற கொட்டை வகை உணவுகளை விட அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. இதில் 30 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும் நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகளின் மூலமாகும். வேர்க்கடலையில் கலோரிகள் அதிகம். அவற்றில் 20 அமினோ அமிலங்களும் உள்ளன. அவற்றில் அர்ஜினைன் என்ற நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் அமினோ அமிலம் மிக அதிகமாக உள்ளது. இருதய நோய், நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

வேர்க்கடலை முக்கியமான ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது. இவை உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அதே போல வேர்க்கடலை எண்ணெய் ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களில் ஒன்றாகும். இதில் கொலஸ்ட்ரால் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் குறைவாக இருப்பதாக நம்பப்படுகிறது.

அதனாலேயே ஆண்களுக்கு சத்துக்களை அள்ளி தரும் என வேர்க்கடலை பற்றி கூறப்படுகிறது. வீட்டில் உள்ள பெண்கள் தங்களுடைய கணவர், மற்றும் மகன் போன்றவருக்கு நிலக்கடலை எண்ணெய்யில் சமைத்த உணவை கொடுப்பது அவர்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வேர்க்கடலையின் ஆரோக்கிய நன்மைகள்

அதிக விலை கொடுத்து வாங்கும் பிஸ்தா பாதாம் முந்திரி போன்ற உயர் ரக பருப்பு வகைகளை விட மிக மலிவான விலையில் கிடைக்கக்கூடிய வேர்க்கடலையில் எண்ணற்ற சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. முந்திரியில் உள்ளதை விட மிகுதியான சத்துகள் இதில் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வேர்க்கடலையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து அடுத்து பார்க்கலாம்

1. வேர்க்கடலை நீரழிவு நோய்க்கு உதவுகிறது

வேர்க்கடலையின் ஜி.ஐ (கிளைசெமிக் குறியீடு) மதிப்பெண் 14 ஆகும். இதன் பொருள் வேர்க்கடலை அல்லது வேர்க்கடலை வெண்ணெயை உணவில் சேர்ப்பது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது. அமெரிக்க நீரிழிவு சங்கம் வேர்க்கடலையை நீரிழிவு சூப்பர்ஃபுட்ஸ் என்று பெயரிடுகிறது.

வேர்க்கடலையில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் பங்கு வகிக்கும் மெக்னீசியம் மற்றும் பிற ஆரோக்கியமான அமிலங்களும் அவற்றில் உள்ளன.

வேர்க்கடலை அல்லது வேர்க்கடலை வெண்ணெயை (Peanut butter) காலையில் சாப்பிடுவது மூலம் நாள் முழுவதும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். இது தொடர்பாக பருமனான பெண்களில் ஆய்வு செய்யப்பட்டது. வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் அதிகமாக உட்கொள்வது பெண்களில் டைப் 2 நீரிழிவு நோயைக் குறைக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

24 வாரங்களுக்கு மேலாக வேர்க்கடலையுடன் செறிவூட்டப்பட்ட உணவை தினசரி உட்கொள்வது டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் உடல் திறனை மேம்படுத்தும். வேர்க்கடலையில் உள்ள மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு, ஃபைபர், அர்ஜினைன், நியாசின், ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை இதற்கு காரணமாகும். (1)

2. வேர்க்கடலை மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

அல்சைமர்ஸ் என்ற நரம்பியல் நோயானது மூளையின் செயல்பாடு மற்றும் திறன்களை மோசமடையச் செய்கிறது. இது அறிவாற்றல் இழப்புக்கு முக்கிய காரணமாகும். இந்த நோய்க்கு என்று உறுதியான தீர்வு எதுவும் கிடையாது. அறிவாற்றல் சிகிச்சைகள் மற்றும் நடத்தை மேலாண்மை ஆகிய வழக்கமாக சிகிச்சைகள் மூலமாக மக்கள் சாதாரண வாழ்க்கையை வாழ முடியும். வேர்க்கடலையில் வைட்டமின் பி 3 மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. இதனால் வேர்க்கடலை சாப்பிடுவது அல்சைமர் நோயில் இருந்து பாதுகாக்க உதவும். மேலும் மூளையில் உயிரணு சேதத்தை தடுக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை ரெஸ்வெராட்ராலின் நல்ல ஆதாரமாக இருப்பதால், அல்சைமர் நோய்க்கு எதிராக சில சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

3. வேர்க்கடலை புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது

வேர்க்கடலையை அதிக அளவில் உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது. வேர்க்கடலையில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள், ரெஸ்வெராட்ரோல் மற்றும் பினோலிக் அமிலம் ஆகியவை கேன்சர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் தாக்கத்தை வேர்க்கடலை உட்கொள்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

வயதான அமெரிக்க பெரியவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் இரைப்பை மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய்களைத் தடுக்க வேர்க்கடலை பயன்படுவதாக கண்டறியப்பட்டது. வேர்க்கடலை உட்கொள்ளாத நபர்களுக்கு இந்த புற்றுநோய் ஆபத்து அதிமாக இருந்தது.

வேர்க்கடலையில் சில பூஞ்சைகளால் உற்பத்தி செய்யப்படும் நச்சு பொருளான அஃப்லாடாக்சின்களால் வேர்க்கடலை மாசுபடுத்தப்படலாம். இந்த நச்சுகள் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

அதற்கு, முக்கிய வணிக பிராண்டுகளிலிருந்து மட்டுமே வேர்க்கடலையை வாங்குவதன் மூலம் இந்த அபாயத்தை நீங்கள் குறைக்க முடியும். மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், நிறமாற்றம், சுருங்கிய அல்லது பூஞ்சை படிந்த வேர்க்கடலையை நிராகரிக்கவும். நம்பகமான ஆர்கானிக் பிராண்டிலிருந்து வேர்க்கடலையை உட்கொள்வது மாசுபடுவதற்கான அபாயத்தையும் குறைக்கிறது. (2)

4. வேர்க்கடலை ஆற்றலை அதிகரிக்கிறது

சோயாபீன்ஸிற்கு அடுத்து உயர் தரமான புரதம், வேர்க்கடலையில் நிறைந்து இருக்கிறது. முட்டையில் உள்ளதை விட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் நிறைந்துள்ளது. மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.

ஒரு அவுன்சில் 7gm புரதத்தை தன்னுள்ளே கொண்டிருக்கும் ஒரே உணவு வேர்க்கடலை மட்டுமே. தசை வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கிய நிர்வாகத்திற்கும் அவசியமானது வேர்க்கடலை. சைவம் மட்டுமே உண்ணும் நபர்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வேர்க்கடலை.

5. வேர்க்கடலை இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

76,464 பெண்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், தவறாமல் வேர்க்கடலை சாப்பிட்டவர்களுக்கு இதய நோய் காரணமாக ஏற்படும் இறப்பு ஆபத்து குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. (3)

வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொழுப்பு (எல்.டி.எல்) அளவை குறைக்கலாம். மோசமான கொழுப்பு இரத்த நாளங்களில் கொழுப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் இதைத் தடுக்கலாம்.

வேர்க்கடலையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் இதய நோய்களை எதிர்த்துப் போராட உதவும். ரெஸ்வெராட்ரோல் கொண்ட பிற உணவுகளைப் போலவே வேர்க்கடலையும் ஒத்த விளைவுகளை ஏற்படுத்துகிறது.

வழக்கமான வேர்க்கடலை (verkadalai nanmaikal) உட்கொள்ளவது ட்ரைகிளிசரைட்களைக் குறைக்கிறது, மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் இந்த விளைவு ஏற்படுகிறது. மற்றொரு ஆய்வில், வேர்க்கடலை நல்ல கொழுப்பின் அளவை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டது. (4)

6. வேர்க்கடலை மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

Peanuts Tamil Article

Shutterstock

பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் நரம்பியல் மாற்றங்களின் விளைவாக மன அழுத்தம் ஏற்படுகிறது. இது மூளையில் உண்டாகும் இரசாயனங்களின் மாற்றமாகும். மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தை தடுக்கும் இரண்டு முக்கியமான சேர்மங்கள் வேர்கடலையில் உள்ளன. அதில் முதலாவதாக, வருவது வைட்டமின் பி. வேர்க்கடலை இதன் நல்ல ஆதாரமாக உள்ளது. உடலில் வைட்டமின் பி குறைந்த அளவில் இருக்கும் போது மனச்சோர்வு மிகுந்து காணப்படுவோம். இதுவே வைட்டமின் பி3-யின் நுகர்வு அதிகமாக இருக்கும் பொழுது மன அழுத்த அறிகுறிகளை குறைத்து மனநிலையை மேம்படும் என்று கண்டறியப்பட்டது. கூடுதலாக, செரோடோனின் மற்றும் அமினோ அமிலமான டிரிப்டோபான் வேர்க்கடலையில் உள்ளது. இந்த செரோடோனின் மன அமைதியை அதிகரிக்கிறது. மேலும் இது மனச்சோர்வை குறைக்கும் மகிழ்ச்சி ஹார்மோன் ஆகும்.

7. வேர்க்கடலை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

வேர்க்கடலையில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்து இருப்பதால் ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு இது உதவுகிறது. அதோடு மட்டுமல்லாமல் முதுமையில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது. மேலும் எலும்புகளின் பலத்தை அதிகரிக்க செய்யும் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நி யாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.

8. வேர்க்கடலை கொழுப்பின் அளவை குறைக்கிறது

வேர்க்கடலையின் ஹைபோலிபிடிமிக் பண்புகள் கொழுப்பை குறைக்க உதவுகின்றன. மேலும் வேர்கடலை உடலில் எல்.டி.எல் கொழுப்பை பராமரிக்க உதவுகிறது. அதே நேரத்தில் ஹெச்.டி.எல் கொலஸ்டிரால் அளவுகளை குறைக்கின்றன. தொடர்ச்சியாக வேர்க்கடலை உண்டு வருவது, 4 வாரங்களுக்குள் கொழுப்பின் அளவுகளை சமநிலைப்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (5) அதிக கொழுப்பு கொண்ட உணவை சாப்பிட்ட பிறகு 85 கிராம் வேர்க்கடலை சாப்பிடுவதால், இரத்த கொழுப்பு அமிலங்களின் உச்ச பட்ச அளவு எட்டுதலை குறைக்கும். மேலும் உணவுக்குப் பின்பான ஹைபர்லிபிடிஸ்மியாவை மேம்படுத்த உதவுகிறது. (6)

9. வேர்க்கடலை கருத்தரித்தலை மேம்படுத்துகிறது

பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது. கர்ப்பிணி பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு சம்பந்தமான கோளாறுகள் ஏற்படாது. வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிக மிக அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன.

10. வேர்க்கடலை பித்தப்பை கற்களை தடுக்கிறது

பித்தப்பை கற்கள் பெரிய அளவில் உடலுக்கு அசௌகரியம் மற்றும் வலியை ஏற்படுத்தும். இதற்கான ஒரே தீர்வு அறுவை சிகிச்சை மூலம் பித்த பையை அகற்றுவது மட்டுமே என்றாலும், வேர்கடலை இந்த மோசமான நிலையில் இருந்து நம்மை காப்பாற்ற உதவும். (7) வேர்க்கடலையின் நுகர்வு பித்தப்பைக் கற்களின் அபாயத்தை குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட யூனிட் வேர்க்கடலை உட்கொள்ளும் ஆண்களுக்கு பித்தப்பை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு வாரத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட யூனிட் கொட்டைகளை உட்கொள்ளும் பெண்களுக்கு கோலிசிஸ்டெக்டோமி எனப்படும் பித்தப்பை நீக்குதல் தொடர்பான ஆபத்து குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேர்கடலை பல்வேறு வகையான ஆக்ஸிஜனேற்றிகளை கொண்டுள்ளது. இதனால் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைப்பதன் மூலம் பித்தப்பை கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. (8)

11. வேர்க்கடலை உடல் எடையை குறைக்க உதவுகிறது

நீங்கள் உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் போது வேர்க்கடலை சாப்பிடுவது உங்கள் எடை அதிகரிக்கும் என்பது பொதுவான தவறான கருத்தாகும். வேர்க்கடலையில் உள்ள கொழுப்பு பெரும்பாலும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் ஆகும். இது உயர் கொழுப்பு அளவுகளை தடுக்க உதவுவதோடு, உடலில் ஒரு ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்க உதவும். உடல் பருமனை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியமாகும். வேர்க்கடலையில் நார் சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. எனவே, வேர்கடலை நீண்ட நேரத்திற்கு நம் வயிற்றை நிறைத்து வைத்திருக்க உதவுவதோடு, நம்மை குறைவாக சாப்பிட வைக்கிறது. உங்கள் உணவு பட்டியலில் வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை சார்ந்த பொருட்களை சேர்த்து கொள்வது உங்கள் உடல் நிறை குறியீட்டெண் அதிகரிப்புக்கு வழிவகுக்காது. BMI எனப்படும் உடல் நிறை குறியீட்டெண் என்பது உங்கள் உயரம் மற்றும் எடையின் அடிப்படையில் உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவாகும்.

வேர்க்கடலையில் கலோரிகள் மிக அதிகமாக உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, அவை மிதமாக எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றன. வேர்க்கடலை ஆற்றல் அடர்த்தியான உணவு வகையை சேர்ந்தது. அவற்றை உணவோடு சாப்பிடுவதோடு ஒப்பிடுகையில், வேர்க்கடலையை ஒரு ஸ்நாக்ஸ் போல உட்கொள்வது எடை இழப்புக்கு உதவக்கூடும். வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் உட்கொள்வது கார்போஹைட்ரேட் உணவுகளை போல திருப்தியான உணர்வை தரும்.

12. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்த வேர்க்கடலை

வேர்க்கடலை பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும்.

பயோட்டின் – பயோட்டின் நிறைந்த உணவு ஆதாரங்களில் வேர்க்கடலையும் ஒன்றாகும். இது கர்ப்ப காலத்தில் முக்கியமானது(9,10).

காப்பர் – இதன் குறைபாடு இதய ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். வேர்க்கடலையில் இது நிறைந்து காணப்படுகிறது(11).

நியாசின் – வைட்டமின் பி 3 என்றும் அழைக்கப்படும் நியாசின் உங்கள் உடலில் பல்வேறு முக்கிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இது இதய நோய் அபாயத்தை குறைக்கிறது(12).

ஃபோலேட் – வைட்டமின் பி 9 அல்லது ஃபோலிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. ஃபோலேட் பல அத்தியாவசிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது மற்றும் கர்ப்ப காலத்தில் குறிப்பாக முக்கியமானது(13).

மாங்கனீசு – மாங்கனீசு குடிநீர் மற்றும் பெரும்பாலான உணவுகளில் காணப்படுகிறது.தேவையான அளவு மாங்கனீசு சத்து எடுத்துக் கொண்டால் இதய நோயில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் (14).

வைட்டமின் ஈ – ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற வைட்டமினான இது, பெரும்பாலும் கொழுப்பு நிறைந்த உணவுகளில் அதிக அளவில் காணப்படுகிறது.

தியாமின் – பி வைட்டமின்களில் ஒன்றான தியாமின், வைட்டமின் பி 1 என்றும் அழைக்கப்படுகிறது. இது உங்கள் உடலின் செல்கள் கார்ப்ஸை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. உங்கள் இதயம், தசைகள் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு இது அவசியம்.

பாஸ்பரஸ் – வேர்க்கடலை பாஸ்பரஸின் ஒரு நல்ல மூலமாகும். இது உடல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது தவிர உடலை என்றும் இளமையாக பராமரிக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிலக்கடலையில் அதிகம் உள்ளன. இயற்கையான பழங்களில் கிடைக்கும் அத்தனை ஆன்டி ஆக்சிடென்ட்களும் நிலக்கடலையில் கிடைக்கின்றன.

ஆனால் இவை அனைத்தும் உடலில் சேர நாம் பச்சை நிலக்கடலையை சாப்பிட வேண்டும். வேக வைப்பதன் மூலம் சில சத்துக்கள் அழியலாம்.

p-Coumaric acid – நிலக்கடலையில் இருக்கும் மிக முக்கியமான ஆன்டி ஆக்சிடென்ட் தான் இது(15,16).
Resveratrol – உங்கள் உடலில் புற்று நோய் மற்றும் இதயநோய்களை தடுக்கும் முக்கியமான ஆன்டி ஆக்சிடென்ட் இது(17).

Isoflavones – பாலிபினால்களின் ஒரு வகையை சார்ந்த இது பல்வேறு நன்மைகளை வழங்குகிறது(18).

Phytic acid – இது எல்லாவிதமான விதை மற்றும் பருப்பு வகைகளிலும் காணப்படும். சில உணவுகளுடன் ஒன்றாக உண்ணப்படும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை இவை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும் (19).

Phytosterols – இவை உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை உறிஞ்சிக் கொள்ளும் திறன் வாய்ந்தவை(20,21).

சருமத்தை மேம்படுத்தும் வேர்க்கடலை

Peanuts Tamil Article1

Shutterstock

வேர்க்கடலை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளதோடு மட்டுமல்லாது, சருமத்தின் அழகை மேம்படுத்தவும் செய்கிறது. இதில் அடங்கியுள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

1. வேர்க்கடலை ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்கிறது

வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு நிறைந்து காணப்படுவதால், இது சருமத்தில் எண்ணெய் பதத்தை தொடர்ந்து பாதுகாக்கும். இதனால் குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு போவதை தடுக்கலாம். தோலில் எண்ணை பதத்தை தொடர்ந்து பராமரிக்க வேர்க்கடலையை அடிக்கடி உட்கொண்டு வருவது நல்லது.

2. வேர்க்கடலை வயதான தோற்றத்தை தடுக்கிறது

வேர்க்கடலையில் வைட்டமின் இ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை சருமத்தின் பொலிவை அதிகரிக்க செய்யும். அதோடு மட்டுமல்லாது, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கும். வேர்க்கடலையில் நிறைந்துள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் அப்பழுக்கற்ற சருமத்தை தரக்கூடியது.

3. வேர்க்கடலை தோல் அலர்ஜி மற்றும் சொரியாஸிஸ் வருவதை தடுக்கிறது

வேர்க்கடலையின் மெல்லிய சிவந்த தோலில் இருந்து Capric acid எனப்படும் வேதிப்பொருள் பெறப்படுகிறது. இது பூஞ்சைக் காளான்களைப் போக்கும் தன்மைக் கொண்டது. பூஞ்சைகளால் தோலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க வேர்க்கடலை சிறந்த தீர்வாக இருக்கும்.

4. வேர்க்கடலை வெயில் மற்றும் தோல் பாதிப்பிலிருந்து காக்கிறது

வேர்க்கடலையில் ஆண்டிஆக்சிடென்ட் நிறைந்து காணப்படுகிறது. இது வெயில் காலங்களில் சூரிய கதிர்கள் மூலம் தோல் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. இருந்தாலும் வெயில் காலங்களில் அளவுக்கு அதிகமாக வேர்க்கடலை உண்ணக்கூடாது. மிதமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

5. வேர்க்கடலை சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது

வேர்க்கடலை இயற்கையாகவே நம்முடைய உடல் வெப்ப அளவை அதிகரிக்கக் கூடியது. இதனால் குளிர்காலத்தில் வேர்க்கடலை அடிக்கடி உட்கொண்டால் உடலுக்கு தேவையான வெது வெதுப்பு கிடைக்கும். பொதுவாகக் குளிர்காலத்தில் நமது கல்லீரல் நல்ல ஆரோக்கியத்துடன் செயற்படும் என்பதால் எண்ணெய் நிறைந்த உணவுகளையும் அதனால் எளிதாக செரிமானம் செய்ய முடியும். வேர்க்கடலை எடுத்துக்கொள்வது சருமத்தை ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்ளும்.

6. வேர்க்கடலை தோல் தடிப்பை தடுக்கிறது

ஒரு சிலருக்கு தோல் வறண்டு, சிவந்த நிலையில் காணப்படும். தோலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல், இது போன்ற நிலை வரும். வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் சத்துகள் தோலில் உள்ள செல்களுக்கு ஆற்றலை கொடுத்து, அந்த இடத்தில் மீண்டும் புதிய செல்கள் உருவாக வழிவகை செய்கின்றன.

முடியின் ஆரோக்கியத்தில் வேர்க்கடலையின் பங்கு

முடி வளர்தலில் ஏற்படும் சிக்கல்கள் பலநபர்களை மனஅழுத்தம் வரை கொண்டு விடுவதாக உளவியல் கூறுகிறது. கடைகளிலும் விளம்பரங்களிலும் விற்கப்படும் எண்ணெய்கள் மூலம் கவரப்பட்டு அதனை பல ஆயிரம் செலவழித்து பயன்படுத்தி அதன்பின் இருக்கும் முடியை இழந்தவர்கள் ஏராளம்.

ஆகவே கூந்தல் வளர வேண்டும் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பவர்கள் இயற்கை முறையில் கூந்தலை ஆரோக்கியமாக மாற்ற வேர்க்கடலை பயன்படுத்துங்கள்.

1. வேர்க்கடலை முடி வளர்வதை ஊக்குவிக்கிறது

உலகம் முழுவதும் இருக்கின்ற எல்லா இளம் வயது மற்றும் நடுத்தர வயது ஆண்களுக்கும், பெண்களுக்கும் தலை முடி உதிர்வு என்பது ஒரு கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது. உடலில் ஊட்டச்சத்து குறைவதாலும், உடலில் சுரக்கின்ற ஹார்மோன்களின் காரணங்களாலும் தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது.

வேர்க்கடலையில் நிறைந்துள்ள வைட்டமின் பி சத்து வகையை சார்ந்த, பயோட்டின் எனும் வேதிப்பொருள் இருக்கிறது. இது தலை முடியின் ஆரோக்கியத்தை காத்து, அதிக அளவில் முடி உதிர்வதை தடுக்கிறது. முடி உதிர்ந்த இடங்களில் மீண்டும் முடி வளர செய்ய உதவுகிறது.

2. வேர்க்கடலை முடியை உறுதிபடுத்துகிறது

வைட்டமின் சி சத்தானது தலை முடி வலுவிழந்து உடையாமல் தடுக்கும். வேர்க்கடலையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. வைட்டமின் சி உடன் மற்றும் பி அதிகமாக இருக்கிறது. இந்த ஊட்டச்சத்துகள் முடி வளர்ச்சிக்கு உதவும் கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது.

3. வேர்க்கடலை வழுக்கை வராமல் தடுக்கிறது

நாம் சாப்பிடும் உணவுகளில் போதிய புரதச்சத்து இல்லாத காரணத்தினால் முடியின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுகிறது. பலருக்கு முடி உதிர்வது என்பது இயல்பான ஒன்றாகும். இந்த முடி பிரச்னை ஹார்மோன் மாற்றங்களால் நிகழக்கூடியது. இதனை தடுக்க வேர்கடலையை தொடர்ச்சியாக உண்டு வந்தால், இதில் உள்ள பயோட்டின் முடி உதிர்வதை தடுத்து வழுக்கை உண்டாவதை குறைக்கிறது.

வேர்க்கடலையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:

அமெரிக்க வேளாண்மைத் துறையின் கூற்றுப்படி, 100 கிராம் வேர்க்கடலை கீழ்க்கண்ட சத்துகள் உள்ளது.

 • 567 கலோரி ஆற்றல்
 • 25.8 கிராம் புரதம்
 • 8.5 கிராம் நார் சத்து
 • 16.13 கிராம் கார்போஹைட்ரேட்டுகள்
 • 4.72 கிராம் சர்க்கரைகள்

வேர்க்கடலையில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை இதய நோய் அபாயத்தைக் குறைக்கின்றன. மேலும் ஏராளமான புரத சத்தும் நிறைந்துள்ளது. பெரியவர்களுக்கு ஒரு நாளுக்கு பரிந்துரைக்கப்படும் புரதத்தின் அளவு ஆண்களுக்கு 56 கிராம் மற்றும் பெண்களுக்கு 46 கிராம் (25) ஆகும்.

வேர்க்கடலையை உட்கொள்வதற்கு முன்பு வேகவைப்பது முக்கியம். வேர்க்கடலை வேகவைப்பது அவற்றின் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறது என்பதை சில ஆராய்ச்சி காட்டுகிறது. வேகவைத்த வேர்க்கடலையில் ஐசோஃப்ளேவோன் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்தில் இரண்டு முதல் நான்கு மடங்கு அதிகரிப்பு உள்ளது.

100 கிராம் வேர்கடலை பின்வரும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன:

ஊட்டச்சத்துகள் 100 கிராமுக்கான மதிப்பு
நீர்6.5 கிராம்
ஆற்றல்567 கி.கே.
புரதம்25.8 கிராம்
கொழுப்பு49.24 கிராம்
கார்போஹைட்ரேட்16.13 கிராம்
நார்ச்சத்து8.5 கிராம்
சர்க்கரைகள்4.72 கிராம்
கனிமங்கள்
கால்சியம்92 மிகி
இரும்பு4.58 மிகி
மக்னீசியம்168 மிகி
பாஸ்பரஸ்376 மிகி
பொட்டாசியம்705 மிகி
சோடியம்18 மி.கி.
துத்தநாகம்3.27 மி.கி
வைட்டமின்கள்
வைட்டமின் பி164 மிகி
வைட்டமின் பி10.135 கிராம்
வைட்டமின் பி312.066 கிராம்
வைட்டமின் பி60.348 மி.கி.
ஃபோலேட்240 μg
வைட்டமின் ஈ8.33 மி.கி.
கொழுப்புகள் / கொழுப்பு அமிலங்கள்
சாசுரேட்டேட்6.279 கிராம்
மோனோஅன்சாசுரேட்டேட்24.426 கிராம்
பாலிஅன்சாசுரேட்டேட்15.558 கிராம்

வேர்க்கடலையை எப்படி பயன்படுத்தலாம்.?

வேர்க்கடலை தோலில் நார்ச்சத்து நம்பமுடியாத அளவிற்கு அதிகமாக உள்ளது. மேலும் இருப்பினும், அளவுக்கு அதிகமான நார்ச்சத்து இருப்பதால், அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். வேர்க்கடலையில் கொழுப்பு, புரதங்கள் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளன. ஒரு கப் வேர்க்கடலையில் சுமார் 830 கலோரிகள் உள்ளன. அவற்றை சாப்பிடுவதற்கான ஆரோக்கியமான வழி உங்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிக்கோள்களைப் பொறுத்தது, இருப்பினும் தேன் அல்லது பிற சர்க்கரை வகைகள் அதன்மீது பூசப்படாவிட்டால் பொதுவாக நல்லது.

வெறும் வேர்க்கடலையை மட்டும் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், அதனை சமைத்தும் சாப்பிடலாம். வேர்க்கடலை கொண்டு சமைக்கப்படும் சில உணவுகள் குறித்து அடுத்து பார்க்கலாம்.

வேர்க்கடலை சுண்டல்

தேவையான பொருள்கள்

 • பச்சை வேர்க்கடலை – தேவையான அளவு
 • உப்பு – தேவையான அளவு

தாளிக்க

 • கடுகு – 1 ஸ்பூன்
 • உளுந்து – 1 ஸ்பூன்
 • கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
 • வரமிளகாய் – 4
 • கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

பச்சை வேர்க்கடலையை உப்பு போட்டு குக்கரில் நான்கைந்து விசில் வரும் வரை விட்டு வேக வைத்து எடுக்கவும். வேக வைத்த கடலையை வடித்து எடுத்து தனியே வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு (2 ஸ்பூன் அளவு போதும்) கடுகு உளுந்தைப்பருப்பு கடலை பருப்பை நன்கு சிவக்க வறுக்கவும். அதனுடன் வரமிளகாய்களை கிள்ளி போட்டு கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து இறக்கினால் வாசனையான வேர்க்கடலை சுண்டல் தயார்.

இதனை மாலை வேளைகளில் முதியவர்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் கொடுத்து வந்தால் அவர்கள் கை கால் வலியின்றி நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.

1. வேர்க்கடலைக் குழம்புக் கறி

தேவையான பொருள்கள்:

 • நிலக்கடலை – ஒரு கப்
 • நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கப்
 • பச்சை மிளகாய் – 2
 • பதியாக நறுக்கிய ஏலக்காய் – 1
 • சீரகம் – ஒரு ஸ்பூன்
 • கிராம்பு – 2
 • இலவங்கப்பட்டை – 1
 • துருவிய தேங்காய் – 2 ஸ்பூன்
 • நறுக்கிய இஞ்சி – ஒரு ஸ்பூன்
 • நறுக்கிய பூண்டு – அரை ஸ்பூன்
 • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
 • மஞ்சள் – சிறிதளவு
 • சிவப்பு மிளகாய்த்தூள் – தேவையான அளவு
 • உப்பு – தேவையான அளவு
 • தண்ணீர் – 2 கப்

செய்முறை:

நிலக்கடலையுடன் உப்பு, தண்ணீர் கொஞ்சம் சேர்த்து வேகவைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர், ஒரு வாணலியில் எண்ணெயை சூடுபடுத்தி, அரைத்த வெங்காயத்துடன் நறுமணப்பொருட்கள் எல்லாம் சேர்த்து பொன் நிறமாகும் வரைக்கும் நன்றாக வதக்க வேண்டும்.

அதன் பிறகு, ஏற்கனவே வேக வைத்திருந்த நிலக்கடலையை, ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் தண்ணீர், மஞ்சள் சேர்த்து மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.

அதோடு சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.

தேவைப்பட்டால் கொஞ்சம் உப்பு சேர்த்துக்கொள்ளலாம். இறுதியாக இதன் மீது தேங்காய்த் துருவல்களை தூவி விடவும்.

இதனை சாப்பாடு மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

2. கடலை மிட்டாய் ரெசிபி

Peanuts Tamil Article

Shutterstock

தேவையான பொருட்கள்:

 • 250 கிராம் வேர்க்கடலை
 • 200 கிராம் சர்க்கரை / வெல்லம்
 • 25 கிராம் பட்டர்

செய்முறை

தோல் நீக்கிய வேர்க்கடலையை வறுத்து உடைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

வேர்க்கடலையை அதில் சேர்த்துக் கிளறவும்.

தட்டில் பட்டர் தடவி கலவையை ஊற்றி சிறிதாக வெட்டி ஆற விடவும்.

காற்று போகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.

3. வேர்க்கடலை பக்கோடா

தேவையானவை :

 • வறுத்த வேர்க்கடலை – 1 1/2 கப்
 • கடலை மாவு – அரை கப்
 • அரிசி மாவு – 4 டேபிள் ஸ்பூன்
 • பூண்டு – 5 பற்கள்
 • வரமிளகாய் – 5
 • மிளகுத் தூள் – அரை டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
 • கறிவேப்பிலை – சிறிது
 • உப்பு – 1 டீஸ்பூன்
 • தண்ணீர் – தேவையான அளவு
 • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் பூண்டு மற்றும் வரமிளகாயை தண்ணீரில் போட்டு, அதனை 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் மாதிரி செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் கடலை மாவு, கொஞ்சம் அரிசி மாவு, அரைத்து வைத்துள்ள வரமிளகாய்-பூண்டு பேஸ்ட், சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

மேலும் தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி கட்டி சேர்ந்து வராதவாறு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையினுள் வேர்க்கடலையை கொட்டி நன்கு கலக்கி எடுக்க வேண்டும்.

கடைசியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவுக்கு எண்ணெய் ஊற்றி காய விட வேண்டும்.

பிறகு பிசைந்து வைத்துள்ள, மசாலா கலவையை கொஞ்சம்கொஞ்சமாக எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான வேர்க்கடலை பக்கோடா ரெடியாகி விடும்.

வேர்க்கடலை சட்னி

கோயம்புத்தூர் ஈரோடு பக்கங்களில் பிரபலமானது இந்த வேர்க்கடலை சட்னி. ஆரம்பத்தில் இது ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சட்னியின் சுவையை எழுத்தால் விளக்க முடியாது. சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என எதற்கு வேண்டுமானாலும் இந்த வேர்க்கடலை சட்னியை தொட்டுக் கொள்ளலாம்.

வேர்க்கடலை சட்னி செய்ய தேவையான பொருள்கள்

 • தேங்காய் – 1/2 மூடி
 • வேர்க்கடலை – 1 கப்
 • வரமிளகாய் – 5
 • புளி – சிறிதளவு
 • கருவேப்பிலை 1 கைப்பிடி
 • உப்பு தேவையான அளவு
 • தாளிக்க கடுகு மற்றும் உளுந்து

முதலில் தேங்காய் மற்றும் தோல் நீக்கிய வேர்க்கடலையை மிக்சியில் போடவும். உடன் வரமிளகாய் மற்றும் புளி, உப்பை சேர்க்கவும். அதனுடன் கைப்பிடி கறிவேப்பிலையில் பாதி அளவு சேர்க்கவும். இவற்றை நன்றாக மைய அரைக்கவும். அவ்வளவுதான் சுவையான வேர்க்கடலை சட்னி தயார். தயாரான சட்னியில் கடுகு மற்றும் உளுந்து போட்டு தாளித்து கொட்டி விடவும்.

எப்படி நல்ல வேர்க்கடலையை வாங்குவது?

வேர்க்கடலையில் முளைவிட்ட பகுதி கருப்பாக இருந்தால் அதனை வாங்க கூடாது. அதில் நச்சுக்கள் அதிகமாக நிறைந்து இருக்கும். அதை அப்படியே வேகவைத்துச் சாப்பிடும்போது, கல்லீரல் பாதிக்கக்கூடும். இதனால் வேர்க்கடலையை ஓடுடன் வாங்குவதைவிட, உடைத்து வைத்ததை வாங்குவது நல்லது.

குப்பை படிந்து, அதிக உமி நிறைந்திருக்கும் வேர்க்கடலையை வாங்க கூடாது. சில நிலக்கடலை ஓடுகளில் துளை நிறைந்து காணப்படும், அது மாதிரியானவற்றை வாங்க கூடாது.

நிறமாற்றம் அடைந்து பச்சை அல்லது கருப்பு நிறம் படிந்திருந்தால் அது நச்சு தன்மை நிறைந்த வேர்க்கடலை. தரமான வேர்க்கடலை வாங்க வேண்டும் என்றால் கூடுமான வரை செலவழித்து பிராண்ட் பார்த்து வாங்க வேண்டும். வேர்கடலை சில வகைகள் முற்றிலும் சுவை இல்லாமல் இருக்கும். மனதில் வைத்துக் கொள்ளுங்கள், அத்தகைய தயாரிப்பு கெட்டுப் போயிருக்கும்.

வேர்க்கடலையை எப்படி சேமிப்பது.?

சேமிப்பிற்காக, காற்று புகாத கொள்கலனைப் பயன்படுத்தி, வேர்க்கடலையை உலர்ந்த, குளிர்ந்த இடத்தில் வைக்கவும். அங்கு அவற்றை ஒரு வருடம் வரை வைத்திருக்க முடியும். மேலும், பூச்சி சேதத்தை சரிபார்க்கவும். பீன்ஸ் முழுதும் மற்றும் விரிசல் இல்லை என்பதையும் சரிபார்க்கவும்.

ஷெல் செய்யப்பட்ட வேர்க்கடலை குளிர்சாதன பெட்டியில் சுமார் மூன்று மாதங்கள் வரையிலும், ஃபிரீசரில் ஆறு மாதங்கள் வரை வைத்திருக்க முடியும். நீங்கள் அவற்றை சேமிக்கப் போகிறீர்கள் என்றால் வேர்க்கடலையை நறுக்கக்கூடாது.

சாப்பிடுவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு முன்பு மட்டுமே வேர்க்கடலையை நறுக்குவது நல்லது. வெட்டுவது மேற்பரப்புப் பகுதியை அதிகரிக்கிறது, காற்று எண்ணெய்களை ஆக்ஸிஜனேற்ற அனுமதிக்கிறது, மேலும் விரைவாக அவற்றின் தன்மையை மாற்ற ஊக்குவிக்கிறது.

வேர்க்கடலையின் பக்கவிளைவுகள்

Peanuts Tamil Article

Shutterstock

அராச்சின் மற்றும் கொனராச்சின் ஆகிய இரண்டு புரதங்கள் இருப்பதால் வேர்க்கடலையால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். இந்த பருப்பு வகைகளின் அதிக அளவு நுகர்வு சில பாதகமான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. வேர்க்கடலையின் மற்றொரு தீவிர பக்க விளைவு அதிலுள்ள அஃப்லாடாக்சின் விஷம்.

தீவிரமான அஃப்லாடாக்சின் விஷம் கல்லீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும். இது பூஞ்சை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நிலைமைகளில், அதிக வெப்பநிலையில் சேமிக்கப்படும் உணவுப் பொருட்களில் நிகழ்கிறது. வேர்க்கடலையை சேமிக்கும் போது ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை குறைவாக வைத்திருப்பதன் மூலம் இதைத் தடுக்கலாம்.

அஃப்லாடாக்சின் விஷம் உடலில் ஏறி இருக்கிறது என்பதற்கான அறிகுறிகளாக மஞ்சள் நிறமாக மாறும் கண்கள் மற்றும் பசியின்மை ஆகியவற்றை கூறுகிறார்கள். இதுதான் கல்லீரல் நோய்க்குமான அறிகுறி.

வேர்க்கடலை சில நபர்களுக்கு ஒவ்வாமைகளை ஏற்படுத்தக்கூடும்.ஒரு சிலருக்கு அலர்ஜி என்பது வேர்க்கடலை மூலமாக ஏற்படலாம் . இது பொதுவான அலர்ஜிகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்கர்களின் 1 சதவிகிதம் பேருக்கு இந்த வேர்க்கடலை அலர்ஜி இருப்பதாக சொல்லப்படுகிறது.

சில சமயங்களில் வேர்க்கடலை அலர்ஜி என்பது உயிர் போக்கும் நோயாகவும் மாறி விடும் அபாயம் இருக்கிறது. அதுவே கடுமையான ஒவ்வாமைக்கு வழி செய்து விடுகிறது. ஆகவே நிலக்கடலை உண்ண விரும்புபவர்கள் இதனைப் பற்றி தெரிந்து கொண்டு அதன் பின் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வாமை இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை சந்திக்கவும்.

அளவுக்கதிகமான வேர்க்கடலை என்பது நீங்கள் எதற்காக வேர்க்கடலையை எடுத்துக் கொள்கிறீர்களோ அந்த எதிர்பார்ப்பை அழித்து விடும் என்கிறார்கள். வேர்க்கடலையில் உள்ள சில ஆன்டி நியூட்ரியண்ட் பொருள்கள் உங்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.இதனால் ஊட்டச்சத்து குறைப்பாடுகள் வரலாம்.

அந்த ஆன்டி நியூட்ரியண்ட்களில் phytic acid மிக முக்கியமானது. இந்த phytic acid எல்லாவிதமான விதைகள் , கொட்டைகள் , மற்றும் தானியங்களில் இருக்கின்றது. அதன் அளவு 0.2வில் இருந்து 4.5 வரை நீளும்.

phytic acid வேர்க்கடலையில் உள்ள இரும்பு சத்து மற்றும் ஜின்க் சத்துக்களை குறைப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இது தினமும் சமசீர் உணவு முறையை பின்பற்றுபவர்களுக்கு இருக்காது .அதிலும் தினமும் இறைச்சி உண்பவர்களுக்கு இந்த பாதிப்பு என்பது இருக்காது என்கிறார்கள்.அதனை தவிர தானியம் மற்றும் லெக்யூம்களை பிரதான உணவாக கொண்ட வளர்ந்து வரும் நாடுகளுக்கு இது சில பிரச்னைகளை தரலாம்.

வேர்க்கடலை உடல் எடை இழப்புக்கு உதவினாலும், அவை நிறைய கலோரிகளை வழங்குகின்றன, இதனால் அதிக அளவு வேர்க்கடலை உட்கொண்டால் எடை மேலாண்மைக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்காது.

வேர்க்கடலையில் பொட்டாசியம் மற்றும் சோடியம் நிறைந்ததாக இருக்கிறது. இந்த சோடியம் அதிகமாக எடுத்துக்கொள்வது உங்கள் இதயத்திலும் ஆரோக்கியத்திலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

முடிந்த வரையில் வறுத்த மற்றும் உப்பு சேர்க்கப்பட்டவேர்க்கடலையை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சோடியம் ஆகியவற்றை அதிக அளவில் கொண்டிருக்கும் என்பதால் அதிக தீங்கு விளைவிக்கும்.

வேர்க்கடலை ஒவ்வாமைக்கான அறிகுறிகள்

வேர்க்கடலை ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும். அது ஒரு சிலரின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என ஏற்கனவே கூறியிருந்தோம். அப்படி வேர்க்கடலை ஒவ்வாமை ஏற்பட்டால் அதனை சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அவையாவன

 • உடல் அரிப்பு
 • சின்ன சின்ன தடிப்புகள்
 • உங்கள் தொண்டைக்குள் கூசும் உணர்வு
 • தொடர்ந்து மூக்கு ஒழுகுதல்
 • குமட்டல்

இது ஆரம்ப நிலை ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இப்படி இருக்கும். இப்போதே நீங்கள் சரி செய்யாவிடில் தீவிர தன்மைக்கு உங்களை கொண்டுபோய் விட்டு விடும்

 • அதிகமான அலர்ஜி என்றால்
 • உதடுகள் அல்லது நாக்கு வீங்கலாம்
 • முகம் அல்லது கை கால் மூட்டுக்கள் வீங்கலாம்
 • மூச்சு விட சிரமம் ஏற்படும்
 • ஆஸ்துமா போல ஆகலாம்
 • வயிறு இழுத்து பிடிப்பது போன்ற உணர்வு வரலாம்
 • குமட்டல்
 • வாந்தி
 • வயிற்றுப்போக்கு
 • பதட்டம்
 • போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
 • உயிருக்கு ஆபத்து என சொல்லப்படும் அறிகுறிகள்
 • தொண்டை வீங்கலாம்
 • மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படலாம்
 • ரத்த அழுத்தம் குறையும்
 • படபடப்பு அதிகம் ஆகும்
 • குழப்பம்
 • மயக்கம்

சுயநினைவை இழத்தல் போன்றவை ஏற்படும்.

உங்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மூச்சு விடுதலில் சிரமம் அல்லது வயிற்று பக்கங்களில் வலி போன்றவை இருந்தால் மருத்துவர் உங்களுக்கு epinephrin எனப்படும் ஊசியை உள்ளே செலுத்தினால் உடனடியாக நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்.

இறுதியாக

எந்த சூழ்நிலையிலும் பயிரிடப்பட கூடியதாக இருக்கும் வேர்க்கடலை, ஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படும் அளவுக்கு, முந்திரியில் உள்ள ஊட்டச்சத்துக்களை விட அதிக சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. இனிப்பு மற்றும் காரம் என்று எல்லாவகை உணவுகளிலும் வேர்க்கடலை பயன்படுத்தப்படுகிறது. வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் வெளிநாடுகளில் மதிப்பு மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

உடல் ஆரோக்கியம் என்று வந்து விட்டால் எதற்காகவும் நாம் விட்டு கொடுக்க கூடாது. வேர்க்கடலையின் ஆரோக்கிய பண்புகள் என்னவென்று உணர்ந்த பிறகு நீங்கள் அதனை பயன்படுத்த வேண்டியதும் அவசியம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் வேர்க்கடலை தரும் நன்மைகள் அளப்பரியது.

உடல் வலிமைக்கு உதவி செய்யும் வேர்க்கடலையை இனிமேலும் தள்ளி வைக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட் வகைகளை வாங்கி தருவதைக் காட்டிலும் வேர்க்கடலை மூலம் செய்யப்பட்ட இனிப்புகளை வாங்கி கொடுத்து ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குங்கள்.

Sources

ஸ்டைல்க்ரேஸ் எப்போதும் தன்னுடைய கட்டுரைகளை தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது. மூன்றாம் நிலை ஆதாரங்களை முடிந்தவரை தவிர்க்கிறது. இந்த கட்டுரையின் உண்மைத்தன்மைக்கான 22 ஆதாரங்களும் அதன் இணைய இணைப்புகளும் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
Was this article helpful?
The following two tabs change content below.