ஒழுங்கற்ற மாதவிலக்கால் அவதிப்படுகிறீர்களா.. எளிய வீட்டு முறைகளில் இதனைச் சரி செய்து கொள்ளுங்கள் !


by Deepa Lakshmi

ஒழுங்கற்ற மாதவிலக்கு என்பது கணிசமான பெண்களுக்கு ஏற்படும் ஒரு வித உடலியல் சிக்கல் எனலாம். சாதாரணமாக 28 நாட்களுக்கு ஒருமுறை வர வேண்டிய மாதவிலக்கானது ஒரு சில பெண்களுக்கு 20 நாட்களிலோ  அல்லது 40 நாட்களுக்கு நடக்கலாம். ஒரு சிலருக்கோ மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்படலாம். ஒரு சிலருக்கு 7 நாட்களுக்கும் மேல் அதிக ரத்தப்போக்குடன் மாதவிலக்கு நடக்கலாம். இவை எல்லாமே ஒழுங்கற்ற மாதவிலக்கு எனக் கூறப்படுகிறது.

ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்பட என்ன காரணம் ?

மரபணு சிக்கல்கள் , உணவுப் பழக்கவழக்கங்கள் , மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் பெண்களுக்கு இப்படி ஒழுங்கற்ற மாதவிலக்கு நேரலாம். அதிகமாகப் பத்தியம் இருப்பது, பிசிஓடி போன்ற கர்ப்பப்பை நீர்கட்டிகள் உள்ளவர்கள், புகைபிடிப்பவர்கள் என ஒழுங்கற்ற மாதவிலக்கு நடைபெறுவதற்கான காரணங்கள் கூடிக் கொண்டே போகின்றன(1).

இது தவிர உடல் உபாதைகளுக்காக மாத்திரை அதிகம் எடுத்துக் கொள்பவர்கள், மது அருந்துபவர்கள் , சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணாதவர்கள் போன்றவர்களுக்கும் ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்னை இருப்பதாக அறியப்படுகிறது (2).

இந்த சீரற்ற மாதவிலக்கு சிக்கலை நாம் எளிதாகத் தீர்த்து விட முடியும். நமது ஹார்மோன் மாற்றங்களை சரி செய்ய ஒரு சில பாரம்பரிய உணவுப்பழக்க முறைகளை நீங்கள் பின்பற்றினால் வெகு விரைவில் இதில் இருந்து மீண்டுவிடலாம்.

ஒழுங்கற்ற மாதவிலக்கை சரி செய்யும் வீட்டு முறை வைத்தியங்கள்

சோம்பு

என்ன செய்ய வேண்டும்

சோம்பு அல்லது பெருஞ்சீரக விதைகள் மாதவிலக்கு சிக்கல்களை நீக்க பெரிதும் உதவி செய்கின்றன. பெருஞ்சீரகத்தில் உள்ள கிருமிநாசினி தன்மை இதற்கு உதவி செய்கிறது. இரண்டு தேக்கரண்டி பெருஞ்சீரக விதைகளை எடுத்து ஒரு டம்ளர் நீரில் இரவு ஊற வைக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரைப் பருக வேண்டும்.

எப்படி வேலை செய்கிறது 

சோம்பில் உள்ள கிருமி நாசினி தன்மையானது வயிற்றில் நீண்ட காலமாகத் தங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற உதவுகிறது (3). மாதம் முழுவதும் இப்படி செய்து வந்தால் குறைந்த நாட்களிலேயே நீங்கள் ஒழுங்கற்ற மாதவிலக்கு துன்பத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

பப்பாளி

என்ன செய்ய வேண்டும்

மாதவிலக்கு அல்லாத நாட்களில் பப்பாளிக்காய் சாறு செய்து பருகி வர வேண்டும். தொடர்ந்து பருகி வந்தால் ஒரு சில மாதங்களில் சரியாகி விடும்.

எப்படி வேலை செய்கிறது

பப்பாளிக்காய் ஆனது கர்ப்பப்பை தசைநார்களைத் தூண்டி விடும் தன்மை கொண்டது (3). ரத்தப்போக்கு இல்லாதவர்கள், தாமதமாக மாதவிலக்கு ஏற்படுபவர்கள் இந்த முறையைப் பின்பற்றலாம்.

மஞ்சள்

என்ன செய்ய வேண்டும் 

இரண்டு சிட்டிகை மஞ்சள் தூளை பால், தேன் அல்லது வெல்லத்தில் கலந்து உட்கொள்ள வேண்டும். பல வாரங்கள் இதனைத் தினமும் செய்து வந்தால் உங்கள் ஹார்மோன்கள் சமநிலை அடையும்.

எப்படி வேலை செய்கிறது 

மஞ்சள் பல அற்புதமான மருத்துவ குணங்களைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. மாதவிலக்கை சரி செய்யவும், ஹார்மோன் சமநிலை இன்மையைக் குணப்படுத்தவும் மஞ்சள் உதவுகிறது (4). தினமும் சில சிட்டிகை மஞ்சளைப் பாலில் கலந்து குடித்து வர வேண்டும்.

இஞ்சி

என்ன செய்ய வேண்டும் 

உங்கள் விரலில் கால் பாகம் அளவிற்கு இஞ்சியை எடுக்க வேண்டும். அதனை லேசாகத் தட்டி  ஒரு டம்ளர் நீரில் 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் அந்த தண்ணீரைப் பருகி வரவும். உணவுக்குப் பின்னர் தண்ணீரில் தேன் கலந்தும் சாப்பிடலாம்.

எப்படி வேலை செய்கிறது 

இஞ்சி பெண்களின் மாதவிலக்கு சிக்கல்களை மறைய செய்து விடும் ஆற்றல் கொண்டது. மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் வயிற்று வலியை இஞ்சி சரி செய்கிறது (5). தினமும் மூன்று வேலை உணவிற்குப் பின்னர் சாப்பிட்டு வர நல்ல மாற்றம் தெரியும்.

லவங்கப்பட்டை

என்ன செய்ய வேண்டும் 

ஒரு முழு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் சிறிதளவு லவங்கப்பட்டை பொடியைத் தூவிக் குடிக்க வேண்டும். தினமும் இதனை செய்து வருவதால் மாதவிலக்கு சிக்கல்கள் நீங்கி விடும்.

எப்படி வேலை செய்கிறது 

லவங்கப்பட்டை உங்கள் உணவுகளில் சுவை கூட்டுவதற்கு மட்டுமல்ல. உங்கள் உடலில் ஆரோக்கியம் சேர்வதற்கும் உதவி செய்கிறது. உங்கள் உடலில் ஒரு வெதுவெதுப்பு தன்மையை லவங்கப்பட்டை ஏற்படுத்துகிறது. இது மாதவிலக்கு நேரங்களில் சிரமப்படும் உங்கள் வயிற்றுப் பகுதிக்கு இதம் தருகிறது (6). இதனால் மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் வயிற்று தசை பிடிப்பு கூட சரியாகி விடும்.

எள் விதைகள்

என்ன செய்ய வேண்டும் 

எள்ளுருண்டை செய்து சாப்பிடலாம். அல்லது எள் துவையல் , எள் சேர்க்கப்பட்ட உணவுப் பதார்த்தங்களை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.

எப்படி வேலை செய்கிறது

எள்ளுருண்டை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது. உடல் எடை பராமரிக்கப்படுகிறது. இதில் நல்ல கொழுப்புகள், கேல்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் எலும்புகள் வலுவடைகின்றன(7). இதனால் மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் கால்வலி போன்றவை கட்டுப்படுத்தப்படுகின்றன.

வோக்கோசு (பார்ஸ்லி)

என்ன செய்ய வேண்டும்

வோக்கோசு எனப்படும் பார்ஸ்லி இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு 2 நிமிடம் ஆற விடவும். அதன் பின்னர் இலைகளை வடித்து விட்டு நீரை தேநீர் போலப் பருகவும்.

எப்படி வேலை செய்கிறது 

பார்ஸ்லி இலைகளில் உள்ள மிரிஸ்டிஸின் மற்றும் அபியோல் (myristicin and apiole) ஈஸ்ட்ரஜன் உற்பத்தியை அதிகரித்து ஹார்மோன் சமநிலை இன்மையைக் கட்டுப்படுத்துகிறது. பார்ஸ்லி கருப்பை வாய் பகுதியை மென்மையடையச் செய்வதால் மாதவிலக்கு சரியான நேரத்தில் நடைபெற உதவி செய்கிறது.

பைனாப்பிள்

என்ன செய்ய வேண்டும் 

பழுத்த பைனாப்பிள் எடுத்து உங்களுக்கு விருப்பமான வகையில் உணவு தயாரித்து சாப்பிடலாம். பைனாப்பிள் துண்டுகளைத் தேனில் நனைத்து சாப்பிடுவது மிக விரைவான பலனைத் தரும்.

எப்படி வேலை செய்கிறது 

உங்கள் கருப்பை சுவர் நெகிழ்ந்து கொடுக்க ஆரம்பிக்கும்போது தான் மாதவிலக்கு நிகழ்கிறது. இதற்கு பைனாப்பிள் மிகவும் உதவுகிறது.இதில் உள்ள ப்ரோமெலைன் (bromelain) கருப்பை வாய் பகுதியை நெகிழச் செய்யும் தன்மை வாய்ந்தது (8). அதனால் இதனை உண்ட சில மணி நேரங்களில் மாதவிலக்கு நேர்கிறது.

காஃபி

என்ன செய்ய வேண்டும் 

பால் இல்லாத காஃபியை குடிக்கலாம். காஃபி சேர்க்கப்பட்ட இனிப்பு கேக்குகள் புட்டிங் போன்றவற்றை உண்ணலாம். இதனால் தள்ளிப் போகும் மாதவிலக்கு பிரச்னைகள் சரியாகிறது.

எப்படி வேலை செய்கிறது 

காஃபியில் உள்ள கஃபைன் ஆனது உங்கள் ஈஸ்ட்ரஜன் சுரப்பை அதிகரிக்கிறது. இதனால் ஹார்மோன் சமநிலை இன்மை சரியாகிறது (9). ஆகவே மாதவிலக்கு ஏற்படுகிறது. மேலும் மாதவிலக்கால் ஏற்படும் உடல் வலி மற்றும் வயிற்று வலி போன்றவையும் கட்டுப்படுகிறது.

கரும்புச் சாறு

என்ன செய்ய வேண்டும்

கரும்புச் சாறு வீட்டில் தயாரித்தோ அல்லது வெளியில் வாங்கியோ பருக வேண்டும். உடனடி பலன் பெற கூடுதலாக ஒரு டம்ளர் சேர்த்து அருந்தி வரலாம்.

எப்படி வேலை செய்கிறது

கரும்பு எப்போதும் உடல் சூடு தரக் கூடிய ஒரு உணவாகும். அதனால்தான் வெளியில் விற்கப்படும் கரும்புச்சாறுகளில் எலுமிச்சை சேர்த்து தரப்படுகின்றது. எலுமிச்சையால் உடல் சூடு தணியும். கரும்பு சாறு உடல் வெப்பத்தை அதிகரித்து கருப்பை வாய் திறக்க வழி வகுக்கிறது. இதனால் தவறிப்போகும் மாதவிலக்கு சரியாகிறது.

விட்டமின் சி

என்ன செய்ய வேண்டும் 

விட்டமின் சி அதிகம் உள்ள பழங்கள் மற்றும் உணவு வகைகளை சாப்பிடலாம். விட்டமின் சி உள்ள மாத்திரைகளும் பலன் தரலாம்.

எப்படி வேலை செய்கிறது

விட்டமின் சி உடலில் ஈஸ்ட்ரஜன் அளவை அதிகரிக்கிறது. அதனால் ஹார்மோன் சமநிலை இன்மை சரி செய்யப்பட்டு மாதவிலக்கு ஏற்படுகிறது. விட்டமின் சி ஆனது கருப்பை சுவர் ஒட்டியுள்ள பகுதிகள் மென்மையடைந்து மாதவிலக்கு ஏற்பட வழி செய்கிறது (10).

சுடுதண்ணீர் ஒத்தடம்

என்ன செய்ய வேண்டும் 

ஒரு ஹாட் வாட்டர் பேக் அல்லது பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். பொறுக்கும் அளவு சூட்டில் நீரை அதனுள் ஊற்ற வேண்டும். அதன் பின்னர் வயிற்று பகுதியில் வைத்து ஒத்தடம் கொடுக்கவும்.

எப்படி வேலை செய்கிறது 

சுடு தண்ணீர் ஒத்தடமானது கர்ப்பப்பை சுற்றியுள்ள தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்துகிறது. ரத்த நாளங்களை நெகிழ்ச் செய்கிறது. அதனால் கருப்பையில் ரத்தம் சீராகப் பாய்கிறது. இதன் மூலம் ஒழுங்கற்ற மாதவிலக்கு சிக்கல்கள் சரியாகின்றன (11).

ஒழுங்கற்ற மாதவிலக்கைச் சரி செய்யும் யோகா முறைகள்

சில சமயம் ஒழுங்கற்ற மாதவிலக்கிற்கு மன அழுத்தம் கூடக் காரணம் ஆகின்றன. மனதில் ஏற்படும் காயங்கள் உடலின் பலத்தைக் குறைக்கிறது என்பது நிருபிக்கப்பட்ட உண்மையாகும். இதனைச் சரி செய்ய யோகா முறைகள் பயன்படுகின்றன. குறிப்பாக வக்ராசனம், நாடி சுத்தி, பிராணயாமா , சக்திபந்தாசனம் போன்ற யோகா முறைகள் ஒழுங்கற்ற மாதவிலக்கைச் சரி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன (12).

ஒழுங்கற்ற மாதவிலக்கைச் சரி செய்ய மேலும் சில குறிப்புகள்

  • உடல் ஆரோக்கியத்தைச் சரியாகப் பேண வேண்டும்
  • ரத்தமின்மை காரணமாகக் கூட ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்படலாம். ரத்தவிருத்திக்குத் தேவையான உணவுகளைத் தேர்ந்தேடுத்து உண்ணவும்.
  • இரும்பு சத்து அதிகம் உள்ள உணவினை உட்கொள்ளவும்.
  • இரும்புச் சத்தினை உடல் உறிஞ்சிக் கொள்ள விட்டமின் சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்
  • சரியான உடற்பயிற்சி , யோகா மற்றும் உணவுப் பழக்கங்கள் மூலம் மிக எளிதாக இந்த ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

இறுதியாக

மேற்குறிப்பிட்ட உணவுகளை மாதவிலக்குத் தொடங்க வேண்டிய நாள்களுக்கு ஐந்து நாட்கள் முன்பிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  அளவுக்கு அதிகமாக எது இருந்தாலும் அது விஷம் தான். அதனால் குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். அதிக அளவில் எடுத்துக் கொண்டால் அதிக ரத்தப்போக்கு ஏற்படக் கூடும். கவனம்.

Was this article helpful?
scorecardresearch