பீட்ரூட் தரும் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Beetroot Benefits, Uses and Side Effects in Tamil

Written by StyleCraze

நம்மை பொறுத்தவரையில் விலை உயர்ந்த காய்கறி, பழவகைகளில் தான் அதிகம் சத்து நிறைந்துள்ளது , என்று எண்ணிக்கொண்டு விலைகுறைவான காய்கறிகளில் கவனம் செலுத்த மறந்துவிடுகிறோம். உடலில் ஏதோ ஒரு பிரச்னை வந்து, மருத்துவமனை பக்கம் ஒதுங்கும் போதுதான் நாம் ஒதுக்கிய காய்கறிகளின் மகத்துவம் புரியும். காசுக்கு ஏற்றாற் போல தரம் என்பது செயற்கையாக மனிதன் உருவாக்கியவற்றிற்கு மட்டுமே இயற்கையானவைகளுக்கு கிடையாது என்பதை உணர்ந்தவர்கள் மிகச்சிலரே.

நம்மில் பலருக்கும் பீட்ரூட்டை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காது. ஏனெனில் அதில் உள்ள ஒருவகை இனிப்பு, சிலருக்கு பிடிக்காமல் போய் விடுகிறது. இதனாலே ஏராளமான நல்ல விஷயங்களை கொண்ட பீட்ரூட்டை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். விலைகுறைவான அதேநேரம் உடலுக்கு தேவையான அத்தனை அத்தியாவசியத்தையும் தன்னுள் வைத்துள்ள பீட்ரூட் குறித்து, முழுமையான விளக்க பட்டியலை பார்ப்போம்.

பீட்ரூட் தரும் ஆரோக்கிய நன்மைகள் –  Benefits of beetroot in Tamil

பூமிக்கு அடியில் வளரும் வகையை சார்ந்த பீட்ரூட் ஆனது தன்னுள் பல்வேறு அற்புதங்களை அடக்கியது. பீட்ரூட் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் தரும் என்பதை இங்கே பார்க்கலாம்.

1. நீரிழிவு

உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.

எவ்வாறு

ஐஸ்லாந்தில் மேற்கொண்ட ஆய்வின்படி, இதிலிருந்து பெறப்படும் ஒருவகை நார்ச்சத்து ஹைப்பர் கிளைசீமியாவைக் (இரத்த சர்க்கரை மிகைப்பு) கட்டுப்படுத்துகிறது(1). இங்கிலாந்தின் ஆய்வின்படி, பீட்ரூட் சாறு உட்கொள்வது போஸ்ட்ராண்டியல் (உணவுக்குப் பிறகு உயரும் சர்க்கரை அளவு) கிளைசீமியாவை கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டது(2)

2. இதய நோய்கள்

இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

எவ்வாறு

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. அதுமட்டுமின்றி, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. ஆய்வின்படி, ஒருவார கால அளவில் பீட்ரூட் சாறு எடுத்துக்கொள்ளும்போது, இதய செயலிழப்பு ஏற்படும் அபாயத்தையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் கொண்டுவரலாம்.(3) மற்றொரு அமெரிக்க ஆய்வானது,  பீட்ரூட் சாறு உட்கொள்வது மாரடைப்பு ஏற்படுவதையும்  தடுப்பதாக கூறியுள்ளது.(4) எலிகளை கொண்டு மேற்கொண்ட ஆய்வில், எலும்பு தசைகளுக்கு போதுமான ஆக்ஸிஜனை வழங்குவதில் பீட்ரூட் முக்கிய பங்கு வகிப்பதாக கண்டறியப்பட்டது (5). எலும்பு தசைகள் போதுமான ஆக்ஸிஜனைப் பெறாதபோது, ​​அவை பலவீனமடைந்து  கை அல்லது கால்களை நகர்த்துவதற்கான திராணியை குறைக்கிறது.  அன்றாடம் இந்த பீட்ரூட்டை ஜூஸ்அல்லது சாலட் போன்று ஏதோ ஒருவகையில் எடுத்துக்கொள்ளும்போது, இது போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது.

3. இரத்த அழுத்தம்

ரத்த ஓட்டம் சீரடைந்து இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது.

எவ்வாறு

லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பீட்ரூட் சாறு நான்கு வாரங்களில் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது கண்டறியப்பட்டது. வல்லுனர்களின் கூற்றுப்படி, இதில் உள்ள நைட்ரேட்டுகளை மனித உடல் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றுகிறது. இந்த செயல்பாடு காரணமாக  இரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் ரத்த ஓட்டம் சீரடைந்து இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது(6).

4. புற்றுநோய்

பீட்ரூட் ஜூஸ் மார்பக புற்றுநோய்களைத் தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வாறு

பீட்ரூட்டில் பெட்டானின் இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதே போல, வாஷிங்டன் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய்களை தடுக்கும் திறன் கொண்டுள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது(7). பீட்ரூட் ஜூஸ் உடன்  கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ளும்போது,  . ​​ரத்த புற்று நோயை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது.

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோயைத் தடுக்கும் என்பதும் இதற்கு முக்கிய காரணமாக பீட்ருட்டில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பொருள், கேன்சர் செல்லை அழிப்பதாக கண்டறியப்பட்டள்ளது.  இதன் சிவப்பு வன்ணத்தில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், புற்றுநோயுடன் போராடும் வல்லமைகொண்டது.

5. அனீமியா

உடலில் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் அனீமியாவை(ரத்தசோகை) பீட்ரூட்டில் உள்ள குணநலன்கள் தடுக்கிறது. உடல் சோர்வு, கவனமின்மை, எதிலும் ஆர்வமின்மை போன்றவைகளுக்கு வழிவகுக்கும் அனீமியாவை விரட்ட பீட்ரூட்டை அன்றாடம் எடுத்துக்கொள்ளும் போது இரத்தசோகையிலிருந்து மிக விரைவாக குணமடையலாம்.

எவ்வாறு

பீட்ரூட் ஜூஸ்ஸில், கீரைகளை விட அதிக இரும்புச்சத்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது(8).  அதுமட்டுமின்றி பீட்ரூட்டில் உள்ள ஃபோலேட் எனும் பொருள்  இரத்த சோகை சிகிச்சையிலும் உதவக்கூடும்(9).

6. செரிமான கோளாறு

செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு பீட்ரூட் சிறந்த நிவாரணி. உணவு உண்ணும் போது அரை டம்ளர் பீட்ரூட் ஜூஸ் அருகில் வைத்துக்கொள்ளுங்கள். இதுமட்டுமா? மலச்சிக்கல் போன்றவைகளுக்கு சிக்கலே இல்லாமல் சுமூகமாக தீர்வை காண, ரோமானியர்கள் பீட்ரூட் ஜூஸ் பயன்படுத்தினர் என கூறப்படுகிறது.

எவ்வாறு

இதிலுள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்திற்கும் செரிமானத்திற்கும் உதவுவதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன(10).

 7. ஆற்றல்

பீட்ரூட் ஜூஸ் ஆனது,  தசைகளை அதிக எரிபொருள் திறன் கொண்டதாக மாற்றுகிறது. எரிபொருள் எரிக்கப்படும் போது, ஆற்றல் உருவாக்கப்பட்டு சோம்பல் அகன்று சுறுசுறுப்பு உண்டாகிறது. இதனால் சகிப்புத்தன்மை மற்றும் மனஅமைதி அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

எவ்வாறு

ஒரு ஆய்வில் 19 முதல் 38 வயது வரையிலான ஆண்கள் உடற்பயிற்சி செய்யும் சைக்கிள் ஓட்டினர். அப்போது அவர்களுக்கு அரை லிட்டர் பீட்ரூட் ஜூஸை கொடுத்த போது, அவர்களது ஆற்றல் மற்ற நாட்களை காட்டிலும் 16% நீடித்து இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன(11). பீட்ரூட் ஜூஸ் ஆனது இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமக்கும் திறனை மேம்படுத்துகிறது என்பது நிரூபணமானது(12). பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் இரத்த ஓட்டம், செல் சிக்னலிங் மற்றும் ஹார்மோன்களையும் அவற்றின் செயல்பாடுகளில் பெரிய மாறுதலை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. உடலின் தலைமை ஆற்றல் பண்பான ‘அடினோசின் ட்ரைபாஸ்பேட்டின்’ தசை பயன்பாட்டைக் குறைக்க பீட்ரூட் உதவக்கூடும்.

8. எலும்புகள் மற்றும் பற்களின் பாதுகாப்பு

பீட்ரூட் சாறில் கால்சியம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும் உதவும்.

எவ்வாறு

பீட்ரூட் ஜூஸ்ஸில் உள்ள நைட்ரேட்டுகள் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றம் அடைவதை ஏற்கனவே பார்த்தோம். ஜப்பானிய ஆராய்ச்சி ஒன்றில், நைட்ரிக் ஆக்சைடு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்களுக்கு தீர்வு அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது(13). ஆஸ்டியோபோரோசிஸுக்கு சிகிச்சையளிக்க பீட்ரூட் தகுந்த நிவாரணி என கூற மற்றொரு காரணம் ‘சிலிக்கா’ இருப்பதுதான்(14). கால்சியத்தை திறமையாக பயன்படுத்த உடலுக்கு இன்றியமையாத தாதுக்கள் சில தேவைப்படுகிறது. அதற்கான சிறந்த பங்களிப்பை பீட்ரூட் செய்துவிடுகிறது. ஆய்வுகளின்படி பீட்ரூட் சாறு , பீட்டேன் சப்ளிமெண்ட்ஸ் உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவைக் குறைக்க உதவுகிறது. ஹோமோசைஸ்டீனின் அதிகப்படியான படிவு, ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை ஏற்படுத்தும். பீட்ரூட் சாறில் கால்சியம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும் உதவும்(14).

9. கொழுப்பு உருவாதல் தடை

கலோரிகள் குறைவாகவும், பூஜ்ஜிய கொலஸ்ட்ரால் கொண்ட  சில உணவுகளில் பீட்ரூட் முக்கியமான ஒன்றாகும். இதனால் கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் பீட்ரூட் சாற்றை அருந்தலாம்(15)

எவ்வாறு

எலிகளை வைத்து மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் பீட்ரூட் சாறு  கொடுக்கப்பட்ட எலிகள் மொத்த கொழுப்பின் அளவு குறைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் பீட்ரூட் உதவி செய்கிறது(16). ‘இந்த ஆராய்ச்சி இன்னமும் அதிகாரபூர்வமாக முடிவடையாத நிலையில் ஆராச்சியாளர்கள் பீட்ரூட்டில் உள்ள ‘பைட்டோ நியூட்ரியண்ட்ஸ்’ கொழுப்புகளை கரைப்பதற்கான மூலப்பொருள்களை கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

10. கருத்தரிப்பு

கர்ப்பிணிப் பெண்களுக்கு பீட்ரூட் சாறு,  நன்மை பயக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறு

இதில் உள்ள ஃபோலிக் அமிலம், கர்ப்பிணித் தாய்மார்கள்  தங்களது உணவில் பீட்ரூட்டை சேர்க்க மிகவும் தகுந்த உணவு.  ஃபோலிக் அமிலம் குழந்தையின் நரம்புக் குழாய் குறைபாடுகளைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது..இதிலுள்ள ஃபோலாசின் பெண்களின் உடல்நலத்துக்கு மிகவும் நல்லது. கருவுறும்  பெண்களுக்கு தேவையான சத்துகள் நிறைய இருக்கின்றன(17).

11. உடல் எடை குறைப்பு

பீட்ரூட் ஜூஸை பருகும் போது, உடலில் உள்ள நச்சுக்கள் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி இதில் கொழுப்பு சத்து கிடையாது. நச்சு வெளியேறினாலே உடலில் உள்ள  கெட்ட கொழுப்புகள் அகற்றப்பட்டு உடல் எடை அதிகரிப்பது தடை செய்யப்படும்(18)

எவ்வாறு

உடலில் நச்சு பொருட்கள் அதிகமாக இருக்கும்போது, நோய்களின் ஆதிக்கம் வலுப்பெறும். அதுமட்டுமின்றி கெட்ட கொழுப்புக்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகும். அத்தகைய நச்சுப்பொருட்களை  பீட்ரூட்டில் உள்ள ‘பீட்டாலயின்’ என்னும் பொருள் அகற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

12. கல்லீரல் பாதுகாப்பு

பீட்ரூட் ஜூஸை ஒரு டம்ளர் தினமும் அருந்திவர சாற்றில் உள்ள நோயெதிர்ப்பு, கல்லீரல் அழற்சி தன்மையை  தடுத்து போராடுகிறது.

எவ்வாறு

பீட்ரூட் ஜூஸில்  ஜின்க் மற்றும் காப்பர் என்னும் வேதிப்பொருள் கல்லீரல் பாதிப்படைவதில் இருந்து பாதுகாக்கிறது(19). மேலும் இந்த ஜூஸைக் அன்றாடம் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் கூட புதுப்பிக்கப்படும். ஒருசிலருக்கு நுண் கிருமிகளின் தாக்கத்தினால் உடலினுள் அழற்சி ஏற்பட்டு கல்லீரல் வீக்கம் ஏற்படும். இந்த பாதிப்பிலிருந்தும் காக்கும் தன்மை கொண்டது பீட்ரூட்.

13. கண் புரை நோய்

வயதாக வயதாக ஏற்படும் கண்புரை, தோல் சுருக்கம் மற்றும் மறதி போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு.

எவ்வாறு

பீட்ரூட் ஜூஸ்ஸில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், கண்புரைக்கு எதிராக செய்லபடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது(20).

14. சரும பாதுகாப்பு

தோலின் நிறம் பளபளக்க பீட்ரூட் ஜூஸ் அடிக்கடி எடுத்துக்கொண்டால் சருமத்தின் நிறம் மெருகேறும்.

எவ்வாறு

தோல் தொடர்பான பிரச்சனைகளான தோல் அரிப்பு, எரிச்சல் போன்றவைகளுக்கு சிறந்த தீர்வு. பீட்ரூட் ஜூஸை படிகாரத்துடன் சேர்த்து பேஸ் மாஸ்க்காக பயன்படுத்தும்போது சருமம் பொலிவு பெறும். தீப்புண் ஆரம்ப நிலையில் இருக்கும் போது பீட்ரூட் சாற்றை, புண் உள்ள இடத்தில் தேய்க்க புண் தீவிரமாவது தடுக்கப்படும்.  வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளதால் சரும பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது(21).

15. கூந்தல் பராமரிப்பு

தலைமுடியின் நலம் என்பது உடலின் நலத்தை வெளிக்காட்டும் கண்ணாடி. சிலருக்கு முடி அடர்த்தி குறைந்து வலுவற்று கிடக்கும். அதற்கு பீட்ரூட் சாற்றை தலையில் தேய்க்க நல்ல மாற்றம் காணலாம். அதுமட்டுமா?  பீட்ரூட் சாற்றுடன், வினிகர் கலந்து தேய்க்க பொடுகு, முடி உதிர்தலுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

எவ்வாறு

இதிலுள்ள அதிகப்படியான இரும்புச்சத்து(அயர்ன்) தான் இதற்கு முக்கிய காரணம்.(22).

பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பீட்ரூட்டில் ஃபோலாசின், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, பொட்டாசியம், மாவுச்சத்து(ஸ்டார்ச்), இரும்புச்சத்து(அயர்ன்) இதில் அதிகம் நிறைந்து உள்ளன. அடுத்து முக்கியமான மக்களால் அதிகம் பயன்படுத்தாத ஒன்று, பீட்ரூட்டின் இலைகள். ஆம், பீட்ரூட்டில் என்னென்ன ஊட்டச்சத்து உள்ளதோ அவை அத்தனையும் அதன் இலைகளிலும் இருப்பதுதான் கூடுதலான தகவல். நம்மில் பலரும் இலையை அரிந்து தூக்கிப்போட்டு விடுவோம்.

இலைகளையும் சமைக்க விரும்பினால்,  இலைகளை பொடியாக நறுக்காதீர்கள், ஏனெனில் அதிலிருக்கும் ‘விட்டமின் சி’ கரைந்துவிடும். வேகவைத்தால் மூடி போட்டு வேகவிட வேண்டாம். ஏனெனில் பீட்ரூட்டில் உள்ள ஆக்ஸாலிக் அமிலம் ஆவியாக வெளியேற வேண்டும் என்பது இன்றியமையாதது. இலைகளிலுள்ள அதீத சுண்ணாம்புச்சத்தை உடல் எடுத்துக்கொள்வதை தடுக்கவே இந்த வேலை. இந்த ரிஸ்க் எல்லாம் வேண்டாம் என நினைப்பவர்கள் இலையை தவிர்த்துவிடலாம்.

ஒரு கப் அல்லது 136 கிராம் பீட்ரூட்டில்

ஊட்டச்சத்துக்கள்per 136 gm
கலோரிகள்58
கார்போஹைட்ரேட்டுகள்13 கி
புரதம்2 கி
நார்ச்சத்து4 கி
கால்சியம்22 மி.கி
இரும்பு1 மி.கி
சோடியம்72 மி.கி
மெக்னீசியம்31 மி.கி
பாஸ்பரஸின்54 மி.கி
பொட்டாசியம்442 மி.கி
துத்தநாகம்47 மி.கி
மாங்கனீசு44 மி.கி
வைட்டமின் சி6 மி.கி
பீட்டெய்ன்175 மி.கி
ஃபோலேட்148 மைக்ரோகிராம்
மாவுச்சத்து10 கி
நார்ச்சத்து5 கி

எப்படி பயன்படுத்துவது

Shutterstock

பீட்ரூட் சூப்

தேவையானவை 

சின்ன பீட்ரூட் – 2,

சிவப்பு முட்டைக்கோஸ்- 1 கப் (இன்றியமையாதது இல்லை)

வெங்காயம்- 1,

புளிப்பு ஆப்பிள் – 1 (இன்றியமையாதது இல்லை),

ஆலிவ் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,

தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்,

காரட் மற்றும் உருளைக்கிழங்கு வேகவைத்த நீர்  அல்லது

சிக்கன் அல்லது மட்டன் வேகவைத்த நீர் – 1 கப்,

செய்முறை:

தேவையான அளவு எண்ணெயை சுடவைத்து நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, அதனுடன் ஆப்பிள், கோஸ், பீட்ரூட் எல்லாவற்றையும் சேர்த்து அவற்றுடன் தக்காளிச்சாறு, காரட் மற்றும் உருளைக்கிழங்கு வேகவைத்த நீர் சேர்த்து, சில மணித்துளிகள் மூடி வைத்துக் கொதிக்கவிடவும். கொதித்ததும் பத்து நிமிடங்கள் தீயை மெதுவாக எரியவிடவும். இப்போது பீட்ரூட் சூப் குடிக்க தயார்.

பீட்ரூட் அல்வா 

தேவையானவை

பெரிய அளவு பீட்ரூட் – 1,

பால் – கால் டம்ளர் ,

சர்க்கரை – 50 கிராம் (ருசிக்கேற்ப அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்)

நெய் – 25 கிராம்(இன்றியமையாதது இல்லை)

முந்திரி, உலர்ந்த திராட்சை – ஐந்து

செய்முறை

பீட்ரூட்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அரைத்து எடுத்து கொள்ளலாம் அல்லது துருவி வைத்துக்கொள்ளலாம். பின்னர் அதை பாலில் சேர்த்து வேக விடவும். வெந்துவிட்டால், பீட்ரூட் ஆனது பாலை ஈர்த்து இருக்கும். இப்போது சர்க்கரையைச் சேர்த்து கிளறவும். பீட்ரூட், அல்வா பதத்திற்கு வெந்ததும் எடுத்துவைத்த நெய், முந்திரி, திராட்சையை வறுத்து போட்டால் அல்வா ரெடி.

வேறு சில குறிப்புகள்

இத்தனை வழிமுறைகளை பின்பற்ற முடியாது ஆனால் பீட்ரூட்டை கண்டிப்பாக எடுத்துக்கொள்ளவேண்டும் என நினைப்பவர்கள், அரை பீட்ரூட்டை மிக்சியில் அரைத்து தேவையான அளவு சர்க்கரை போட்டு அருந்தலாம். வேண்டுமென்றால் பால் சேர்த்துக்கொள்ளலாம்.

பீட்ரூட்டில் உள்ள இனிப்பு சுவை காரணமாக சிலருக்கு பீட்ரூட் பொரியல் பிடிக்காது. அப்போது அல்வா அல்லது ஜுஸ் செய்து எடுத்துக்கொள்ளலாம்.

பீட்ரூட்டை வாங்கும் போது அடர் கருஞ்சிவப்பு வண்ணத்தில் உள்ள பீட்ரூட்டை தேர்வு செய்யுங்கள். முடிந்தவரை மீடியம் அளவில் இருக்கும் காயை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வாங்கும் பீட்ரூட், இலைகளோடு இருந்தால் இன்னும் சிறப்பு. அந்த இலைகளிலும் ஊட்டச்சத்துக்கள் உண்டு.  நீங்கள் எப்போது சமைக்கிறீர்களோ அல்லது ஜூஸ் போடுகிறீர்களோ அப்போது தான் காயை நறுக்க வேண்டும். முன்னரே நறுக்கி காயை ப்ரிட்ஜில் வைப்பது தவறு.

பக்க விளைவுகள்

  1. பீட்ரூட்டில் ஆக்சலேட் அதிகம் உள்ளதால் நாம் உண்ணும் உணவுகளில் கால்சியம் உறிஞ்சப்படுவதைக் குறைக்கும். இதனால் சிறுநீரக கற்களை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு. ஒருநாளைக்கு அரை டம்ளர் பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வது உத்தமம்.
  2. பீட்ரூட் சாறு, அதிகளவு எடுத்துக்கொள்ளும் போது, குரல்வளை சுருக்கம் மற்றும் மூச்சுக்குழாயில் அழற்சி ஏற்படலாம்
  3. பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் உள்ளதால், நாம் அதிகம் உண்ணும் போது, வயிற்று வலி ஏற்படலாம். இந்த நைட்ரேட்டுகள் கர்ப்பகாலத்தில் சிக்கலை உண்டாக்கும்.
  4. சிலருக்கு பீட்ரூட் சேராத பட்சத்தில் தோல் தடிப்பு மற்றும் காய்ச்சல் ஏற்படலாம். அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிர்க்கும் போது, இந்த பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.
  5. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு தான். இதில் பீட்ரூட் மட்டும் விதிவிலக்கா என்ன?  பீட்ரூட்டையும் அளவாக எடுத்துக்கொள்ளும் போது சிறப்பு. இல்லையெனில் மேற்கண்ட பிரச்சனைகளுக்கு ஆளாகுவோம். வாரத்திற்கு சில முறைகள் எடுத்துக்கொள்ளலாம்

இறுதியாக

வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறி, பழவகைகள் எப்போதும் விலை கூடுதலாகத்தான் இருக்கும். நாமும் அவற்றில் தான் ஊட்டச்சத்து அதிகம் என அதன் பின் ஓடிகொண்டிருப்போம்.  நமது சீதோஷண நிலையில் விளைந்தவை தான்,  அதே சீதோஷண நிலையில் வளர்ந்த நமக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை சிந்திக்க மறந்துவிடுகிறோம். இயற்கையின் படைப்பில் எல்லா காய்கறி, பழவகைகளுக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு. அப்படி இருக்க, காஸ்லியான வெளிமாநிலத்து அல்லது அயல்நாட்டு பழவகைகளில் உள்ள சத்தை காட்டிலும், நம்மூரில் விளையும் விலைகுறைவான காய்கறிகளே அதிக ஊட்டச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது எனும் போது அதை நாம் பரீசீலிக்கலாமே?

கட்டுரைக்கு உதவிய ஆதாரங்கள் பற்றிய விபரங்கள் 

22 ஆதாரங்கள்

ஸ்டைல்க்ரேஸ் எப்போதும் தன்னுடைய கட்டுரைகளை தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது. மூன்றாம் நிலை ஆதாரங்களை முடிந்தவரை தவிர்க்கிறது. இந்த கட்டுரையின் உண்மைத்தன்மைக்கான 22 ஆதாரங்களும் அதன் இணைய இணைப்புகளும் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

Sources

Articles on StyleCraze are backed by verified information from peer-reviewed and academic research papers, reputed organizations, research institutions, and medical associations to ensure accuracy and relevance. Check out our editorial policy for further details.
Was this article helpful?
The following two tabs change content below.