வயிற்று வலிக்கான காரணங்கள் மற்றும் அதனை விரைவில் சரி செய்யும் வீட்டு முறை வைத்தியங்கள் – Stomach Pain Home Remedies in Tamil


by StyleCraze

சிறுவயதில் பள்ளிக்கு விடுமுறை எடுக்க, அடிக்கடி வயிற்றுவலி என பொய்க்  காரணங்களை சொல்லி விடுப்பு எடுத்திருப்போம். எதைப்பற்றியும் தெரியாத அப்பா அம்மாக்கள் நம்மை ஓய்வெடுக்க சொல்வது அல்லது மருத்துவரிடம் அழைத்து செல்வது போன்ற அப்பாவித்தனமான வேலைகளை செய்வார்கள் ஆனால் கிராமத்தில் இன்றளவும் ஒரு சில பாட்டிமார்கள், நம்முடைய வயிற்றை தொட்டுப்பார்த்தே வயிற்றுவலிக்கு என்ன காரணம் என சொல்லிவிடுவார்கள். கூடவே நிஜமாகவே வயிற்றுவலியா இல்லை நடிக்கிறோமா என்பதையும் சொல்லிவிடுவார்கள் .

சாதாரண வயிற்றுவலிக்கு CT ஸ்கேன் வரை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் உங்களால் இதனை நம்ப முடிகிறதா ! உண்மைதான் வயிற்றின் இடது பக்கம் வலி என்றால் குடலிறக்கம் என்பார்கள், நடுப்பகுதியில் வலி என்றால் உடல் சூடாக இருக்கும் தொப்புளுக்கு எண்ணெய் வையுங்கள் என்பார்கள். இன்றும் மருத்துவர்கள் வலி உள்ள இடத்திற்கு தகுந்தவாறு, சிகிச்சை அளிப்பதை பார்க்கிறோம் (1). ஆரம்பத்திலேயே வயிற்று வலிக்கான காரணத்தை கண்டுபிடித்து,அதற்கான கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி முடிந்தவரை தீவிரமாகாமல் பார்த்துக்கொள்ள ஒரு சில தீர்வுகளை காண்போம்.

வயிற்று வலி ஏற்படுவதற்கான காரணங்கள் – Causes of Stomach Pain in Tamil

 1. கண்ணில் கண்டதையெல்லாம் வாயில் போடும்போது இரைப்பை உணவை செரிக்க முடியாமல் கஷ்டப்படும். அப்போது அசவுகரியம் ஏற்பட்டு வயிறு வலி ஏற்படக்கூடும். ஒருசிலர் அப்படி என்றால், ஒருசிலர் வாரம் முழுக்க விரதம் இருந்து வயிற்றில் அல்சர் ஏற்படுத்திக் கொள்வார்கள்.
 1. வயிற்றில் வைரஸ் அல்லது பாக்டீரியா (2) போன்ற நுண்ணுயிரிகளின் பாதிப்பு ஏற்பட்டால் கூட, வயிறு கடுமையான வலியை உணரும் (3).
 1. பித்தப் பையில் சிறு கற்கள் உருவாகியிருக்கும் நிலையிலும் தாங்க முடியாத அதீத வலி ஏற்படக்கூடும்.கொழுப்பு நிறைந்த உணவினை எடுத்துக்கொள்ளும் போது, உணவு மூலக்கூறுகளை சிறுசிறு துண்டுகளாக உடைக்க நீரினை குடலுக்குள் செரிமானத்திற்காக செலுத்த முயலும். அப்போது, உருவான இந்த கற்களால் அடைப்பு ஏற்படும். இந்த நிகழ்வில் ஏற்படும் வலி தாங்க முடியாத அளவு வலியை ஏற்படுத்தும். இதற்கு அறுவை சிகிச்சையே தீர்வாக அமையும் (4).
 1. இவற்றை தவிர்த்து பான்க்ரியாஸ் வீக்கம் எனும் கணையத்தில் ஏற்படும் வீக்கமும் தாங்க முடியாத வலியும், எரிச்சலும் கொடுக்கும். இதற்கு உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. சிலருக்கு உண்ட உணவு மற்றும் இரைப்பை சுரக்கும் ஆசிட் இரண்டுமே வயிற்றிலிருந்து மேலெழும்பி வரலாம். இதனால் ஒருவித விரும்பதகாத உணர்வு வயிற்றில் ஏற்படலாம்(5).
 1. பார்லி, கோதுமை உணவுகளில் உள்ள க்ளூடன் எனும் புரதம் பலருக்கு ஒத்துக்கொள்ளாது. இதன் விளைவாக, வயிற்றுவலியை ஏற்படுத்தும் (6).
 1. மேலும் கருப்பை கோளாறு, முறையற்ற ரத்தப்போக்கு, கருத்தரிப்பின்மை ஆகிய காரணிகளாலும் வயிற்று வலி ஏற்படலாம்(7).
 1. சுத்தமற்ற நீரினை அருந்தும் போதும், அதில் உள்ள நுண்ணுயிரிகள் வயிற்றில் தொற்றை ஏற்படுத்தலாம். சுகாதாரம் இன்மை, வேதிப்பொருட்கள் கலந்த உணவு, மலச்சிக்கல், அதிகப்படியான உடற்பயிற்சி என வயிற்றுவலிக்கு பல காரணங்கள் உள்ளன(8).
 1. இதை தவிர புற்றுநோய், அஜீரணம், எரிச்சல் என பல காரணத்தால் வயிற்று வலி ஏற்படக்கூடும். வலி கட்டுப்படுத்த முடியாத நிலையை அடைந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது(9).
 1. இதை தவிர குடி பழக்கம் இருக்கும் பட்சத்தில் கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு தீராத வயிற்று வலியை ஏற்படுத்தும்(10).
 1. மண்ணீரல் அடைப்பு, கருமுட்டை கருப்பையை தவிர்த்து வேறொரு இடத்தில் பதிந்து வளர்தல், கருப்பை கட்டி போன்றவைகளும் வயிற்றுவலிக்கு முக்கிய காரணம்(11).

வயிற்று வலிக்கான அறிகுறிகள் – Symptoms of Stomach Pain in Tamil

 1. உணவு உண்டதும் எப்போதும் எரிச்சல் உணர்வுடன் இருக்கிறது என்றால் அது அல்சராக இருக்கலாம். அல்சர் தீவிரமானால் அமிர்தம் கூட வயிற்றில் தங்காது.
 1. அடுத்து, தொப்புளின் வலது, இடது பக்கங்களில் மாறி மாறி வலி ஏற்படுகிறது என்றால் சீறுநீரக குழாய் பாதையில் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
 1. இடுப்பிற்கு கீழே வலி என்றால், அது சிறுநீரக கல் உருவாக அறிகுறி. ஆரம்பத்திலே மருத்துவரை அணுகினால், சிறிய கல்லாக இருக்கும்போதே மருந்துகள் கொடுத்து கரைத்து விடுவார்கள். பெரியதாக முற்றிவிட்டால், அறுவை சிகிச்சை தான் தீர்வு.
 1. குடல் இயக்கத்தில் அடைப்பு அல்லது பாதிப்பு ஏற்பட்டால் வயிற்றுவலியுடன் கூடிய  இரத்த வயிற்றுப்போக்கு ஏற்படும்.
 1. இது இல்லாமல் உணவு செரிமானம் அடையாமல் வயிற்றுக்குள் ஒருவித அசவுகரியத்தை உணர்ந்தால் வயிற்று உப்புசமாகும். ஜீரணமாகும் பானங்களை எடுத்துக்கொண்டால் ஓரளவு தீர்வு கிடைக்கும்.
 1. மேல் வயிற்று பகுதியில் வலி என்றால் பித்தப்பை மற்றும் கல்லீரல் தொடர்புடையதாக இருக்கும்.
 1. மேல் வயிற்று நடுப்பகுதியில் வலித்தால் அது அல்சரின் அறிகுறி. அல்சர் என கண்டுபிடித்து விட்டால்,  ஆரம்பத்திலே பார்த்து தீர்வு காண்பது புத்திசாலித்தனம்.
 1. தொப்புளை சுற்றி வலி எனில், அது உணவு சேராமல் நச்சாக மாறியதற்கு அறிகுறி.
 1. அடிவயிறு நடுப்பகுதியில் வலி எனில் அது சிறுநீர்ப்பை தொடர்புடையது. அடிவயிறு இடது பக்கம் வலி எனில் அது குடல் இறக்கமாக இருக்கும். குடலிறக்கம் எனும்போது உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது சரியாக கவனிக்காமல் விடும்நிலையில், முற்றிய குடலிறக்கம் வெடித்து அதன் நீர் இரைப்பை முழுவதும் பரவ வாய்ப்புள்ளது.

வயிற்றுவலிக்கான தீர்வுகள் – Home Remedies for Stomach Pain in Tamil

163527320

Shutterstock

தீர்வு 1 –  இஞ்சி

தேவைப்படும் பொருள்கள்

இஞ்சி – சிறிதளவு

தேன் – 1 ஸ்பூன்

வெந்நீர் – 1 டம்ளர்

என்ன செய்ய வேண்டும்

வயிற்று பகுதியில் வலி ஏற்படுகிறது என உணர்ந்தால், நீரில் இஞ்சி மற்றும் தேனை போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்த வலி குறைவதை உணரலாம்.

எப்படி சரியாகிறது

இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலி ஏற்படும் வீக்கங்களை குறைத்து வயிற்று வலியை நீக்குகிறது(12,13).

தீர்வு 2 –  பெருங்காயம்

தேவைப்படும் பொருள்கள்

பெருங்காயம் – சிறிதளவு

தேன் – 1 ஸ்பூன்

இஞ்சி – சிறிதளவு

என்ன செய்ய வேண்டும்

வலி ஏற்படுகிறது என உணர்ந்தால், நீரில் இஞ்சி,பெருங்காயம் மற்றும் தேனை போட்டு கொதிக்க வைத்து அருந்த வலி குறையும்.

எப்படி சரியாகிறது

பெருங்காயம் ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக செயல்படுவதால் செரிமான பிரச்சனைகளுக்கு உகந்தது

தீர்வு 3 –  சோம்பு

தேவைப்படும் பொருள்கள்

சோம்பு – சிறிதளவு

வெந்நீர் – 1 டம்ளர்

என்ன செய்ய வேண்டும்

சுடு நீரில் சோம்பை கொதிக்கவைத்து அந்த நீரை அருந்தினாலே, வயிற்று வலி குறைவதை காணலாம்

எப்படி சரியாகிறது

சோம்பு ஆனது பிரியாணி போன்ற அசைவ உணவுகளில் சேர்க்கப்படும் போது, ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. செரிமானத்திற்கு மட்டுமின்றி, உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரவல்லது. உணவு ஒத்துக்கொள்ளமல் களிமண் போல கனமாக உணரும்போது,  சோம்பை எடுத்துக்கொள்ளலாம்(14).

தீர்வு 4 –  ஓமம்

தேவைப்படும் பொருள்கள்

ஓமம்  – 35 கிராம்

பனைவெல்லம்  – சிறிதளவு

என்ன செய்ய வேண்டும்

ஓம பொடியை 35 கிராம் எடுத்து அவற்றுடன் பனைவெல்லம் சேர்த்து தினமும் 5 கிராம் உண்டு வந்தாலே நாள்பட்ட வயிற்று வலி சரியாகும்.

எப்படி சரியாகிறது

உமிழ்நீர் சுரப்பை தூண்டும் தன்மை கொண்டதால், விரைவில் உணவு செரிமானம் அடையும். அஜீரண வயிற்று வலி நிவாரணமாகும்.  அதுமட்டுமின்றி தினமும் இதை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வரும் போது,  வாயு கோளாறுகள், அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற தொல்லைகள் குறையும்(14).

தீர்வு 5  –  சீரகம்

தேவைப்படும் பொருள்கள்

சீரகம் – சிறிதளவு

வெந்நீர்  – ஒரு டம்ளர்

என்ன செய்ய வேண்டும்

நீரை கொதிக்க வைத்து, அதில் தேவையான அளவு சீரகத்தை போடவும். பின்னர் ஆறிய சீரக நீரை அருந்தவும்.

எப்படி சரியாகிறது

சீரகம் இயற்கையாகவே வயிற்று கடுப்பகற்றியாகவும் கிருமி நாசினியாகவும் செயல்படுவதால் வயிறு தொடர்பான எல்லா பிரச்சனைகளுக்கும் முக்கிய நிவாரணியாக உள்ளது

தீர்வு 6  – ஆப்பிள் செடார் வினிகர்

தேவைப்படும் பொருள்கள்

ஆப்பிள் வினிகர்  – ஒரு தேக்கரண்டி

வெந்நீர்  – ஒரு டம்ளர்

என்ன செய்ய வேண்டும்

ஆப்பிள் வினிகர் ஒரு தேக்கரண்டியை, ஒரு டம்ளர் சூடான நீருடன் கலந்து பருக மேல் வயிற்று வலி குறையும். தேன் கலந்தும் குடிக்கலாம். சுத்தமான தேன் கிடைக்காத பட்சத்தில் சுடு நீருடன் மட்டும் கலந்து குடிக்கலாம்

எப்படி சரியாகிறது

உறுப்புகளின் PH மதிப்பை  கட்டுப்படுத்துவதில் வினிகர் முக்கியப்பங்கு வகிப்பதால் வயிற்று வலிக்கு சிறந்த நிவாரணி (15,16)

தீர்வு 7 –  கெமோமில் தேநீர்

தேவைப்படும் பொருள்கள்

கெமோமில் மலர்கள்  – ஒரு தேக்கரண்டி

வெந்நீர்  – ஒரு டம்ளர்

என்ன செய்ய வேண்டும்

கெமோமில் இலைகள் ஒரு தேக்கரண்டியை, ஒரு டம்ளர் சூடான நீருடன் கலந்து பருக வயிற்று வலி குறைந்து இலேசாக உணரலாம்.

எப்படி சரியாகிறது

இது நரம்புகளையும் தசைகளையும் அமைதிப்படுத்த உதவும் என்பதால் மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று வலிக்கு விரைவில் பலன் கிடைக்கும்(17).

தீர்வு 8 –  சாதம் வடித்த நீர்

தேவைப்படும் பொருள்கள்

சாதம் வடித்த நீர்

மஞ்சள்

என்ன செய்ய வேண்டும்

சாதம் வடித்த நீருடன் ஒரு சிட்டிகை மஞ்சள் உடன் கலந்து பருக அஜீரண கோளாறு காரணமாக ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

எப்படி சரியாகிறது

மஞ்சள் கிருமி நாசினியாகவும் சாதம் வடித்த நீரில் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்து இருப்பதாலும் கடுமையான வயிற்றுப்போக்கின் போது, ஏற்படும் நீரிழப்பை குறைத்து வயிற்று கடுப்பை குறைக்க வல்லது.

தீர்வு 9 –  திருநீற்றுப்பச்சிலை

தேவைப்படும் பொருள்கள்

திருநீற்றுப்பச்சிலை

என்ன செய்ய வேண்டும்

திருநீற்றுப்பச்சிலையை பொடியாக்கி கஷாயம் போல அருந்திவந்தால், வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து அல்சரை குணமாக்கும்.வாயு பிரச்சினை மற்றும் பிரசவ கால வலியை கூட குணமாக்கும் தன்மை கொண்டது.

எப்படி சரியாகிறது

திருநீற்றுப்பச்சிலை நுண்ணுயிரிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளதால் தொற்று காரணமாக ஏற்படும் வயிற்று வலிக்கு சிறப்பான நிவாரணம்

தீர்வு 10 –  வெந்நீர் ஒத்தடம்

தேவைப்படும் பொருள்கள்

சுடுநீர்

என்ன செய்ய வேண்டும்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கு ஹாட் வாட்டர் ஒத்தடம் கொடுக்கலாம்.

எப்படி சரியாகிறது

இதனால் வயிற்று தசைகள் தளர்ந்து,  நிதானமடைந்து வலிகுறைவதை உணரலாம். ஒத்தடம் கொடுக்க முடியாத நிலையில், சுடுநீரில் குளிக்க வயிற்று வலி குறையும்

இதர வலிநிவாரணிகள்

Stomach Pain

Shutterstock

 1. மிதமான வயிற்று வலி எனும்போது, ஓரிரு நாட்கள் வலி ஏற்பட்டு பின்னர் உடல் கழிவோடு நச்சுக்கள் வெளியேறும். வெளிஉணவுகளில் உள்ள நச்சுக்கள் காரணமாக இந்த வகையான வலி ஏற்பட்டு, செரிமான கழிவுகள் வெளியேறியதும் லேசாக உணரலாம்.
 2. வயிற்று வலி இருக்கும்போது, பால், கடினமான, காரமான உணவுகளை தவிர்த்து செரிமானத்திற்கு இலகுவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
 3. உறங்கும் போது கண்டபடி படுக்காமல், உங்களுக்கு வசதியான முறையில் வயிற்றுக்கு இதமான முறையில் உறங்கவும். ஏனெனில், குழந்தைகள் அடிக்கடி புரண்டு படுக்கும் போது, குடல் இறக்கம் ஏற்பட்டு, கடுமையான வயிற்றுபோக்கு ஏற்படும். கோடி ரூபாய் கொடுத்தாலும் குடல் இறக்கத்திற்கு வைத்தியம் இல்லை என கிராமத்தில் ஒரு வழக்கு உண்டு.
 4. அசிடிட்டியின் போது வலி ஏற்பட்டால், மருந்தகங்களில் வலிநிவாரணிகளை வாங்கி பயன்படுத்தலாம். வயிற்றுவலியுடன் வாந்தி என்றால், ஆன்டி எமிட்டிக் மருந்துகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
 5. பித்தம் காரணமாக ஏற்படும் வலிக்கு, அடிக்கடி உணவில் கரிசலாங்கண்ணி கீரையை சேர்த்துக்கொண்டால் உடல் நச்சு வெளியேறி பித்தத்தால் ஏற்படும் வலி நீங்கும்.
 6. இதை தவிர கீழாநெல்லியை வேருடன் அரைத்து, மோருடன் கலந்து குடிக்கலாம். கடுகடுவென இருக்கும் அல்சர் போன்ற வயிற்று வலிக்கு சிறந்த நிவாரணி.
 7. வாரம் ஒருமுறையாவது சனிநீராடல் செய்ய வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து குளித்தாலே பித்தம், பித்தப்பை கல் உருவாதல் போன்ற பிரச்சனைகள் காணாமல் போகும். மறக்காமல் நாக்கு நுனியில் இரண்டு சொட்டு வைத்து குளியுங்கள். ஒரு வாரத்திலே நல்ல மாற்றம் கிடைக்கும்.
 8. குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறையாவது தொப்புளில் எண்ணெய் வைக்கலாம். இதனால் உடல் சூட்டால் ஏற்படும் வயிற்றுவலி, கண் எரிச்சல் குணமாகும்.
 9. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கு ஹாட் வாட்டர் ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் வயிற்று தசைகள் தளர்ந்து வலிகுறைவதை உணரலாம்.
 10. இதை தவிர மாதவிடாய் காலத்தில் அசவுகரியத்தை மறந்து உடற்பயிற்சி செய்யலாம். நகர்வதே கடினம், உடற்பயிற்சி எல்லாம் சாத்தியமா என நினைக்கிறீர்களா! ஒருமுறை முயன்று தான் பாருங்களேன். உடற்பயிற்சி வயிற்று தசைகள் இறுக்கத்தை விடுத்து லேசாக உணரவைக்கும்.
 11. குறைந்த அளவிலான நீரை அருந்தும் போது, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறாமல் சிறுநீரகத்திலே தங்கிவிடுகிறது. இது போன்ற சூழல் உருவாக விடாமல் அதிகளவு நீரை அருந்தும் போது, உடலில் தேங்கியிருந்த நச்சுக்கள் வெளியேறும். அடிக்கடி இளநீர், பழச்சாறு எடுத்துக்கொள்ளும் போது, உடல் சூட்டால் ஏற்படும் வயிற்று வலி தணியும்.
 12. குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் வயிற்று வலிக்கு, வயிற்றை சுற்றியும் விளக்கெண்ணெய் ஒத்தடம் கொடுக்கலாம்.
 13. ஒரு சொம்பு நீருடன்  அதில் கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் சீரகம் இவற்றைசேர்த்து நன்கு கொதிக்கவிட்டு பின்னர் இந்த கலவையை வடிகட்டி அருந்த கடுமையான வயிற்றுவலியும் குறைய ஆரம்பிக்கும்.

இறுதியாக

மேற்கண்ட நிவாரணிகள் மூலம் குணமாகாத பட்சத்தில்,மருத்துவரை அணுகுவது நல்லது. ஆடி காரில்  செல்வதை காட்டிலும் ஆஸ்பத்திரி பக்கம் செல்லாதவனே வசதியானவன் என்பதை மறக்க வேண்டாம். முடிந்தவரை ஆரோக்கியமான உணவுகளை உண்டு வளமான வாழ்க்கைக்கு வித்திடுவோம்.

கட்டுரைக்கு உதவிய ஆதாரங்கள் பற்றிய விபரங்கள்

18 ஆதாரங்கள்

Stylecraze has strict sourcing guidelines and relies on peer-reviewed studies, academic research institutions, and medical associations. We avoid using tertiary references. You can learn more about how we ensure our content is accurate and current by reading our editorial policy.

ஸ்டைல்க்ரேஸ் எப்போதும் தன்னுடைய கட்டுரைகளை தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது. மூன்றாம் நிலை ஆதாரங்களை முடிந்தவரை தவிர்க்கிறது. இந்த கட்டுரையின் உண்மைத்தன்மைக்கான 17 ஆதாரங்களும் அதன் இணைய இணைப்புகளும் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

Was this article helpful?
scorecardresearch