கர்ணன் திரைப்படம் என்ன சொல்ல வருகிறது – Karnan movie review

Discover the powerful narrative and vibrant emotions driving this unforgettable cinematic journey.

Written by StyleCraze
Last Updated on

தமிழக மக்களின் கவனத்தை தன்வசமாக்கியிருக்கும் கர்ணன் திரைப்படம் பற்றியும் அதன் வெற்றிக்கான காரணங்கள் பற்றியும் நான் இங்கே காண இருக்கிறோம்.

pinit button

இரண்டு முக்கிய காரணங்களுக்காக இந்தப் படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. முதலாவது அசுரன் திரைப்படத்தின் அற்புதமான வெற்றிக்குப் பிறகு தனுஷ் தரும் அடுத்த அசத்தலான திரைப்படம் கர்ணன் தான். இரண்டாவதாக பரியேறும் பெருமாள் எனும் சாதீய ஒடுக்குமுறை கதையை  அழகான முறையில் அதே நேரம் அழுத்தமான முறையில் காட்டிய இயக்குனர் மாரி செல்வராஜின் இரண்டாவது திரைப்படம் கர்ணன் என்பதால் எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது.

நம் எதிர்பார்ப்புகளையும் தாண்டி கர்ணன் திரைப்படம் அற்புதமாக வெளியாகி பல பாராட்டுகளையும் மூன்று நாட்களில் 25 கோடி வசூலையும் பெற்றிருக்கிறது.

தென்கோடி கிராமமான பொடியன்குளத்தில் உண்டாகும் சாதி மோதல்களை சிறப்பான திரைக்கதையாக்கி தந்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். மிகவும் பின் தங்கிய கிராமமான பொடியன்குளத்தில் பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன. ஆதிக்க சாதியினர் ஊர் வரை நடந்தே சென்று பேருந்து ஏறும் அவலம் அங்கே தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் உண்டாகும் பாதிப்புகளையும் இதற்கான காரணத்தையும் அறிந்த இளைஞன் கர்ணன் ( dhanush ) இதற்காகத் தன்னுடைய போராட்டத்தை ஆரம்பிக்கிறான். இதில் அவன் வெற்றியடைந்தானா.. பேருந்து நிறுத்தம் கிடைத்ததா என்பதை பல்வேறு குறியீடுகளுடன் கூறியிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

Director Mari Selvaraj pinit button

1990 முதல் 2001 வரை தமிழகத்தை இரண்டு பெரும் கட்சிகள் மாற்றி மாற்றி ஆட்சி புரிந்து வந்த சமயத்தில் தென் பகுதி கிராமங்களில் சாதி வன்முறை மற்றும் அடக்குமுறை நடந்து கொண்டே இருந்தன. இந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்துதான் இந்த திரைக்கதை அமைக்கப்பட்டதாக ஒரு சிலர் யூகிக்கின்றனர்.

இந்த நவீன யுகத்திலும் தொடரும் சாதிக் கொடுமைகளை சொல்லிக் காட்டுவது இயக்குனரின் நோக்கம் என்றால் அதற்கு சரியான ஒத்துழைப்பை நடிகர் தனுஷ் தந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். எவ்வளவு விருதுகள் வாங்கியிருந்தாலும் இயக்குனரின் எதிர்பார்ப்பினை முழுமனதோடு பூர்த்தி செய்யும் நடிகர் யாரென்றால் அது தனுஷ் எனலாம்.

ஒவ்வொரு பிரேமிலும் தனுஷின் உடல்மொழி நம்மை திரைக்கதையோடு ஒன்றிணைய வைக்கிறது. கோபமோ காதலோ தனுஷ் மூலம் வெளிப்படும்போதுதான் உணர்வுகள் அவற்றின் சரியான உச்சத்தையும் அளவையும் அடைகின்றன எனலாம். அடக்குமுறை நேர கோபங்களும் காதலி திரௌபதி மீதான தாபங்களும் அத்தனை கச்சிதமாக வெளிப்படுத்த தனுஷால் மட்டுமே முடியும்.

Only Dhanush can express pinit button

நடிகர்கள் இதுவரை நடிக்காத பல காட்சிகள் படத்தின் உள்ளே இருக்கின்றன. இறுதி ஊர்வலக் காட்சி ஒன்று இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக உள்ளது. பெயருக்குத் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போல இல்லாமல் நாயகி ரஜிஷா விஜயன் தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார். தென் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருக்கும் ரஜிஷா தனுஷுக்கு இணையாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார் என்று கூறலாம்.

சாதீய அடக்குமுறை என்பது எவ்வளவு தூரம் வரை செல்லும் என்பதை பல படங்கள் தொடர்ந்து நமக்கு அறிவுறுத்திக் கொண்டே வருகின்றன. அவற்றுள் கர்ணன் ( karnan ) ஒரு மைல்கல் எனலாம். அசுரன் திரைப்படமும் இதனை வேறொரு பாணியில் சொல்லி இருக்கிறது. இருப்பினும் முதல் திரைப்படத்தில் சாதி ஒடுக்குமுறைகள் பற்றி ஒரு விழிப்புணர்வைத் தொடங்கிய மாரி செல்வராஜ் ( mari selvaraj ) இரண்டாவது படத்தில் அதனை சற்றே விஸ்தாரமாக்கி இருக்கிறார்.

எளிய மக்களிடம் இருந்து பிடுங்கப்படும் உரிமைகள், அவர்களைத் தங்கள் காலின் கீழே போட்டு நடக்க விரும்பும் உயர் சாதிகள், இதில் குளிர்காயும் அரசியல் எனப் பல விஷயங்களை பதைபதைப்புடன் பதிந்திருக்கிறார் இயக்குனர்.

நிஜத்தில் உண்டான வன்முறைகள் ஒடுக்கப்பட்ட சாதியினர் படித்த சான்றிதழ்களை கிழிப்பது, குடிசை வீட்டில் இருந்து ஓட்டு வீட்டுக்கு மாறியவர்கள் வீட்டை சூறையாடுவது போன்ற செயல்கள் மூலம் அவர்களை ஆதிக்க சாதியினர் பயமுறுத்த பார்த்தனர். இதனால் வன்முறை கலவரம் என்பது இரண்டு பக்கங்களில் இருந்தும் வெடித்தது. இதையே திரைக்கதையிலும் அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

The screenplay is stressful as well pinit button

கர்ணன் கதாபாத்திரத்திற்கு பிறகு அனைவர் மனதிலும் அழுந்தப் பதிவது கர்ணனின் குருவான லால். இதுவரை பல திரைப்படங்களில் வில்லனாகப் பார்த்த இவரைச் சரியாகப் பயன்படுத்தியவர் இயக்குனர் மாரி செல்வராஜ் எனலாம். வயது வித்யாசம் இல்லாமல் தனுஷிடம் ஒரு நண்பனாகவும் அதே நேரம் குருவாகவும் மிளிர்கிறார்.

தனுஷின் அக்காவாக லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி, 96 கௌரி கிஷன், யோகிபாபு, முக்கிய கதாபாத்திரத்தில் அழகம்பெருமாள், பூ ராமு எனப் பலர் இதில் தங்கள் பங்கினை சிறப்பாக செய்திருக்கின்றனர். காவல்துறை அதிகாரியாக வரும் நட்டி எனும் நட்ராஜ் தன்னுடைய அசாத்திய நடிப்பால் இப்போது அனைவரிடமும் திட்டு வாங்கி கொண்டிருக்கிறார். அரசாங்கம் என்பது முதல்வர் மட்டுமே அல்ல.. அரசாங்கத் பணியாளர்கள் அனைவரும் அதற்கு பொறுப்பானவர்களே என்பது போல முரட்டுத்தனமான காவல் துறை அதிகாரியாக பணிபுரிந்திருக்கிறார் நட்டி.

தேனீ ஈஸ்வரின் ( theni eeswar )  ஒளிப்பதிவு எப்போதும் நம் அம்மாவின் அடிமடி தரும் இதம் போன்றது. கர்ணன் திரைப்படத்தில் அவரது ஒளிப்பதிவு  உண்மையின் வலியை யதார்த்தத்தின் வேதனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.

இசை சந்தோஷ் நாராயணன் ( santhosh narayanan ) படம் வெளியாவதற்கு முன்பே வெற்றியடையும் இசையமைப்பாளர். கண்டா வரச் சொல்லுங்க பாடல் அதற்கொரு உதாரணம். மேலும் மஞ்சணத்தி புராணம் மற்றும் தட்டான் தட்டான் பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் மலைப்பைத் தரும்.

90களின் கதைக்களம் என்பதால் அதற்கான கிராமத்தை நமக்கு தர மிகவும் மெனக்கெட்டிருக்கிறார் கலை இயக்குனர் ராமலிங்கம்.

பேருந்து வன்முறைகள், காவல் நிலையத்தில் ஒடுக்கப்பட்டோர் நடத்தப்படும் முறை, கிராம மக்கள் மீதான வன்முறை பற்றிய வசனங்கள் நம்முள் இனி எந்த நாளும் இப்படியான சூழ்நிலை நமக்கு வரக்கூடாது எனும் படியான பயத்தை உண்டாக்குகிறது.

Causing fear pinit button

கால்கள் கட்டப்பட்ட கழுதை , தலையில்லாத சிலை , பெயர் வைத்து அழைக்கும் திமிர் அரசியல், குதிரை நாயகன் என பல விஷயங்களை குறியீடுகளாக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். கிராம மக்களின் வாழ்வை நமக்கு புரிய வைக்கும் முயற்சியில் படத்தின் நீளம் சற்றே அதிகரித்திருக்கிறது. இருப்பினும் இரண்டாம் பாகம் வேகமாக நகர்வதால் இந்த தொய்வு தெரிவதில்லை.

சாதி எனும் அரக்கன் எளிய மக்களின் அன்றாட வாழ்வில் எத்தகைய ஆதிக்கமுறையை செலுத்துகிறான் என்பதும் அடக்குவதால் பயப்படால் நிமிர்ந்து வா எனப்படும் பாடமும் அதற்காக வாள் ஏந்தி தயாராகும் நாயகனும் கர்ணன் சாதிய வரலாற்றில் மிக முக்கியமாக பதியப்படும் படம் என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றனர்.

பரியேறும் பெருமாள் மெல்ல நகரும் கதை மூலம் மெல்ல மெல்ல நமக்கு சாதிக் கொடுமைகளை சொல்லி சென்றது என்றால் கர்ணன் அதற்கு எதிராக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அதிரடியாக ஆணித்தரமாக சொல்லியிருக்கிறது எனலாம்.

அதற்காக மெனக்கெட்ட இயக்குனருக்கு நிச்சயம் விருதுகள் பூமாலைகள் தேடி வரலாம். அசுரன் மூலம் இரண்டாவது முறையாக தேசிய விருது வாங்கிய தனுஷ் மீண்டும் அதனைப் பெற கர்ணன் ஒரு காரணமாக இருப்பார் என நம்புவோமாக.

Was this article helpful?
thumbsupthumbsdown

disqus_comment

Community Experiences

Join the conversation and become a part of our empowering community! Share your stories, experiences, and insights to connect with other beauty, lifestyle, and health enthusiasts.

Latest Articles