குழந்தைகள் பந்தயக்குதிரைகள் அல்ல .. உங்கள் குழந்தையை நீங்கள் இப்படி வளர்ப்பதுதான் சிறந்தது!
குழந்தைகள் தனித்துவ வாழ்வும் வளர்ச்சியும் பெற, செம்மையான முறைகள் அறிவோம்!

Image: iStock
தவமோ விபத்தோ அல்லது ஏற்கனவே விதிக்கப்பட்ட விதியோ ஏதோ சில காரணங்களுக்காக ஒரு குழந்தையை நாம் சுமக்கிறோம். அதன் பாரத்தை 10 மாத முடிவில் உடல் அளவில் இறக்கி விட்டாலும் மனதளவில் நமது இறப்பு வரை நம் குழந்தை மீதான அக்கறையை நாம் சுமந்து கொண்டே தான் இருக்கிறோம்.
அம்மாவின் அன்பு கிடைக்காத குழந்தைகள் ஒருபோதும் முழுமையடைவதில்லை என்கிறது ஆய்வு முடிவுகள். வார்த்தைகள் அற்ற போதும் குழந்தையின் ஒரு அழுகுரல் அதில் எது பசி எது வலி என்பதை ஒரு அக்கறை கொண்ட தாய் உடனடியாக உணர்கிறாள். இது தாய்மைக்கான பிரத்யேக சக்தி.
ஒரு குழந்தை என்பது வெறும் குழந்தையா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு குழந்தை நல்ல மனிதனாக வளர வேண்டும். அதற்கு அம்மாவின் பங்கு இங்கே அவசியம் தேவை. அதிலும் குழந்தை வளர்ப்பு என்பது வெறும் உணவு ஊட்டுவதும் பள்ளிக்கு அனுப்புவதும் மட்டுமே என நினைத்து பல தவறுகள் அம்மாக்கள் செய்வதுண்டு.
குழந்தை வளர்ப்பில் உங்கள் பங்கு என்ன ?
நீங்கள் விரைவில் தாயாக போகிறீர்கள் அல்லது ஏற்கனவே குழந்தைகளின் தாயாக இருக்கிறீர்கள் என்றால் இந்தக் கட்டுரை உங்களுக்கானது தான். உங்கள் குழந்தையை வளர்க்கையில் சரியாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர்களோடு சேர்ந்து நீங்களும் வளருங்கள்.
1. ஒப்பீடுகள் ஒன்றுக்கும் உதவாது
உங்கள் அண்டை வீட்டு பெண் போல நீங்கள் இருக்கிறீர்களா..இல்லைதான் இல்லையா? அவர்கள் குணம் வேறு உங்கள் குணம் வேறு அப்படி இருக்கையில் உங்கள் குழந்தையை அருகில் இருக்கும் வளரும் குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள். அதற்கு மாறாக உங்கள் குழந்தை செய்த நல்ல செயல்களுக்கு பாராட்டு தெரிவியுங்கள் அதே நேரம் தவறு செய்கையில் தவறை அதன் வீரியத்தை அதன் மொழியில் புரிய வையுங்கள்.
2. நேரம் உங்கள் வாழ்க்கைக்கான அஸ்திவாரம்
உங்கள் பிஞ்சுக்குழந்தைகளுடன் அம்மாவாகிய நீங்கள் நேரம் நிறைய செலவழிக்க வேண்டும். அவர்களோடு விளையாடுவதும் அவர்களை எப்போதும் பிசியாக வைப்பதும் கண்டிப்பாக அதில் உங்கள் பங்கும் இருக்க வேண்டும். அதே நேரம் உங்கள் குழந்தைகள் தவறு செய்ததை நீங்கள் தெரிந்து கொள்ளும்போது அவசியம் கண்டிக்க வேண்டும் கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது. நீங்கள் கண்டிப்பதற்கான மூல காரணம் உங்கள் குழந்தைக்கு புரிய வேண்டும். ஒரு முறை புரிந்து கொண்டாலே அவர்கள் சிறப்பாக செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.
3. பிடிவாதத்திற்கு வளையேல்
இன்றைய தலைமுறை குழந்தைகள் நவீனம் வாய்ந்தவர்கள். அதனால் அவர்களின் பிடிவாத குணம் அதிகம் ஆகிவிட்டது. மேலும் ஒரு குழந்தை உள்ள வீடுகளில் குழந்தை ஒரு விஷயத்தை விரும்பி விட்டால் அதனை வாங்கி தந்தே ஆகவேண்டும் என்று பரிதவித்து போவார்கள். அப்படி நேர்கையில் நீங்கள் அதன் விருப்பத்தை தள்ளி போட வேண்டும். இது இப்போது வேண்டாம் நாளை வாங்கலாம் என்று சொல்வதும் தள்ளிபோடுவதும் நல்லது. ஏனெனில் குழந்தைகள் அடுத்த நாள் வரை எதையும் நினைவு வைத்துக் கொள்ளப் போவதில்லை. சமாளிக்க நம்மிடம்தான் ஆயிரம் மாயக் கதைகள் இருக்கிறதே !
4. முரட்டுத்தனம் வளர்க்காதீர்கள்
மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளை மேலும் அதிக கவனமாக வளர்க்க வேண்டி வரலாம். இதற்கு அனுபவஸ்தர்கள் அறிவுரை நல்ல பலன் தரும் அல்லது மருத்துவரின் உதவி உங்களுக்கு உதவி செய்யலாம். குழந்தைகளுக்கு கோபம் வந்தால் கையில் உள்ளவற்றை உடைப்பது, உங்களை அடிப்பது போன்ற காரியங்கள் செய்வார்கள். அந்த சமயங்களில் குழந்தைகள் 5 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் சில நிமிடங்கள் வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து கதவை சாத்தி விடலாம். யாருமற்ற தனிமை அவர்களுக்கு பயம் மற்றும் தவற்றை உணரும் தன்மை இரண்டையும் கொடுக்கும்.
5. அவர்களின் உதாரணம் நீங்கள் தான்
மிக முக்கியமான விஷயம் குழந்தைகள் தாங்கள் என்ன பார்க்கிறார்களோ அவற்றைத்தான் செய்கிறார்கள். எனவே அவர்கள் முன்னிலையில் நீங்கள் கோபப்படாமல் இருப்பதும் வாக்குவாதம் செய்யாமல் இருப்பதும் மிக நல்லது. அது தான் சிறந்த தீர்வும் கூட.
6. ஷேரிங் ஈஸ் கேரிங்
குடும்பத்தாரோ நண்பர்களோ பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை பற்றி உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள். இல்லாவிடில் உங்கள் குழந்தைக்கு பொறாமை மற்றும் பாகுபாடு எண்ணங்கள் உண்டாகலாம். பகிர்தல் என்பது உணவு மட்டுமல்லாமல் உடை, விளையாட்டு பொருள்கள் என எல்லாவற்றையும் பகிர வைத்து அவர்களை பழக்குங்கள்.
7. பொய்களை ஆதரிக்காதீர்கள்
ஒரு சில குழந்தைகள் பொய் சொல்வதை விளையாட்டாக வைத்திருப்பார்கள் அதனை ஆதரிக்காதீர்கள். அது தவறானது என்பதை புரிய வையுங்கள் அதே போல மரியாதையாக பேசுவதற்கும் நீங்கள் இப்போதில் இருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த வயதில் கற்றுக் கொள்ளாவிட்டால் பின் எந்த வயதிலும் இது நடக்காது.
8. பொறுப்பு துறப்பு
உங்களுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கலாம் அதற்காக குழந்தையிடம் நேரம் செலவழிக்காமல் இருக்காதீர்கள். ஒரு உயிரை வளர்க்கும் பொறுப்பு உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தட்டிக் கழிக்காதீர்கள். குழந்தையோடு நிறைய நேரம் செலவழிப்பது மிக மிக அவசியமான ஒன்றாகும்.
9. திணிக்க முயற்சிக்காதீர்கள்
உங்கள் குழந்தைக்கு என்ன வருமோ அதனை செய்ய விடுங்கள். உங்கள் குழந்தையால் முடியாத ஒன்றை நீங்கள் செய்யத் தூண்டாதீர்கள். டிவி நிகழ்ச்சியில் காட்டப்படும் குழந்தைகள் போல உங்கள் குழந்தை இல்லை என்று அவர்கள் மீது பல சுமைகளைத் திணிக்காதீர்கள். டிவியில் காட்டப்படும் பிரபலம் போல நீங்களும் இல்லைதானே? இதைப் பற்றி என்றைக்காவது அவர்கள் நம்மிடம் கேட்டிருக்கிறார்களா ! நியாயமாக இருப்பது நல்ல பெற்றோருக்கு அழகு.
10. பாகுபாடு வேண்டாம்
ஆண் பெண் பாகுபாடுகள் உடன் உங்கள் குழந்தையை வளர்க்காதீர்கள். இருவருக்கும் எப்போதும் சம உரிமையை நிலை நாட்டுங்கள். அவர்கள் என்ன செய்தாலும் பாராட்டுங்கள். உங்கள் பாராட்டுக்கள் தான் அவர்களை வளர்க்கும் தவிர காம்பளானோ ஹார்லிக்ஸோ அல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள்.
11. குழந்தைகள் பந்தயக்குதிரைகள் அல்ல
நன்மை தீமை இரண்டையும் சொல்லிக் கொடுங்கள். ஒரு பந்தயக்குதிரை போல உங்கள் குழந்தையை பயிற்றுவிக்காமல் சக உயிர் போல மதிப்போடும் மரியாதையோடும் அவர்களை நடத்துங்கள்.
நீங்கள் விதைப்பது தான் விளையும் என்பதை மறந்து விடாதீர்கள்.

Community Experiences
Join the conversation and become a part of our empowering community! Share your stories, experiences, and insights to connect with other beauty, lifestyle, and health enthusiasts.