உங்கள் சுதந்திர சிறகுகளைப் பறிக்க நினைக்கும் காதல் வேடர்களிடம் சிக்காமல் பறக்க சில யோசனைகள் !

Written by Deepa Lakshmi • 
 

தாய் வழிச் சமூகம் என்பது வெறும் வாய்ப்பேச்சாக இருக்கின்ற காலத்தில் தான் நாம் இன்னமும் இருக்கிறோம் என்பது கொஞ்சம் வருத்தமான ஒன்றுதான்.

பெண்ணின் இந்த சம உரிமைக்காக கடந்து வந்த போராட்டங்களும் இறந்து போன உயிர்களும் எண்ணில் அடங்காதவை. இருப்பினும் இந்த சுதந்திரத்தையும் ஒரு சில பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதும் ஆண்கள் அதில் சிக்கி மாய்வதும் நடக்கத்தான் செய்கிறது.

நாம் பேசப் போவது அந்த மாதிரியான பெண்களுக்காக அல்ல.

சுதந்திர சிறகுகள் நம்மிடம் இருந்தாலும் நம்மைக் குறி வைக்கும் வேடர்களிடம் இருந்து தற்காப்போடு பறப்பதும் பயணிப்பதும் நமக்கு சொல்லித் தரப்படவில்லை. அதற்கான சிறு முயற்சிதான் இந்தக் கட்டுரை.

1. யாரோ ஒரு ஆணின் முறையற்ற ஆசை எதுவும் அறியாத நம்மை ஏன் காயப்படுத்த வேண்டும் ?

share button
Image: IStock

நாம் நம்பி பழகும் ஒரு சில நபர்கள் திடீரென தங்கள் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கும்போது நாம் பெரும்பாலும் அதிர்ந்து போகிறோம். வழக்கமாக நம் உடன் பணிபுரிகிற ஆண் அல்லது உயர் அதிகாரிகளிடம் இது நேரலாம். சில சமயங்களில் கல்லூரி நண்பர்களிடம் கூட இதனை நீங்கள் அனுபவிக்க நேரலாம். பல பெண்களுக்கு தங்களுடைய உறவினர்கள் மூலம் இந்த துன்பம் ஏற்படலாம்.

தமிழ்ப் பெண்களில் பெரும்பாலானோர் இதனை வெளியில் சொல்லத் தயங்குகின்றனர். பெரும்பாலும் வெளியில் சொல்லவும் முடியாமல் வேலையை விடவும் முடியாமல் வாழ்வாதார சிக்கல்களால் சிக்கித் தவிக்கின்றனர். அனுதினமும் பயந்து பயந்து வாழும் ஒரு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். யாரோ ஒரு ஆணின் முறையற்ற ஆசை எதுவும் அறியாத நம்மை ஏன் காயப்படுத்த வேண்டும் ? பழகும்போதே அவர் சரியானவரா என்பதை உறுதிப்படுத்தி விட்டால் இனி எந்த துயரமும் உங்கள் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடாது.

2. இன்பாக்ஸ் துன்பங்கள்

share button
Image: IStock

முகநூலில் இல்லாத பெண்கள் ஆண்களே இல்லை எனலாம். அது ஒரு பொது வெளி. அங்கே யார் வேண்டுமானாலும் நம்மோடு தொடர்பு கொள்ள முடியும். அல்லது நமது நட்பு வட்டத்தை நாம் உருவாக்கி கொள்ளவும் முடியும். அதிகப்படியான பத்திரிகை செய்திகள் முகநூல் மூலம் பெண்கள் ஏமாற்றப்பட்ட கதையைச் சொல்கிறது. அனைவரும் அறிந்த காசி வழக்கு இதற்கொரு உதாரணம். மற்றொரு உதாரணம் பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவங்கள். இவை எல்லாம் நம்மால் என்றும் மறக்க முடியாத கசப்பான தருணங்கள்.

யாரோ ஒரு பெண்ணுக்கு நேர்ந்தாலும் அதன் வலியினை நாம் உணர்கிறோம். எனவே இப்படியான மோசடி ஆட்களிடம் இருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள அடிக்கடி உங்களிடம் இன்பாக்சில் வழியும் ஆண்களைத் தூர வைக்கலாம். மிஸ் யூ போன்ற வார்த்தைகளால் நம்மை மிஸ்யூஸ் செய்யாமல் பார்த்துக் கொள்ளலாம். எல்ல்லாவற்றிற்கும் மேலாக கவிஞர்கள் என்கிற பெயரில் கவிதைகளை விற்பனை செய்யும் நபர்களிடம் நாம் மயங்காமல் சமநிலையை மெயின்டைன் செய்வது மிக மிக அவசியம். மென்மையான டெம்பிளேட் வார்த்தைகள் மூலம் அவர்கள் நம் வாழ்வை நம் நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்துப் போடும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. உங்களோடு மட்டும் அல்லாமல் அவரின் முகநூல் பின்தொடர்பாளர்கள் பலரிடம் அவர் இதனைச் செய்து கொண்டிருக்கலாம். க்ராஸ் செக் செய்தால் உண்மை தெரிய வரும்.

3. உங்களைப் பாராட்டும் தந்திரங்கள்

share button
Image: IStock

மற்ற எந்த நபரை விடவும் ஏன் தாய் தந்தையை விடவும் உங்களைப் பற்றி நன்கு அறிந்தவர் நீங்கள்தான். அன்றாடம் கண்ணாடியில் சந்திக்கும் உங்களை பற்றி உங்களிடமே சொல்லப்படும் ஒரு சில பாராட்டு வார்த்தைகளுக்காக ஏங்கி வாழ்க்கையை வீணாக்காதீர்கள். உங்கள் அழகினைப் பாராட்டினால் சிறு புன்னகை பதில் போதுமானது. அதற்கும் மேல் அதில் உணர்ச்சிவசப்பட ஏதுமில்லை. அவர்கள் கண்களுக்கு நம்மை விருந்தாக்கும் போலி ஒப்பனைகள் எப்போதும் ஆபத்தானது. அளவுக்கு மீறிய ஒப்பனை நம் தன்னம்பிக்கை குறைபாடை மற்றவர்களுக்கு பறையறிந்து சொல்கிறது என்பதில் கவனம் வையுங்கள்.

உங்களிடம் பேச ஆரம்பிக்கும்போது மற்றவருக்கு அனுப்ப வேண்டிய தகவலை மாற்றி உங்களுக்கு அனுப்பி விட்டதாக சொல்வார்கள், மற்றொரு பெண்ணின் பெயர் சொல்லி உங்களை அழைத்து மன்னிப்பும் கேட்பார்கள். இப்படித்தான் பெரும்பாலான ராங் நம்பர் உறவுகள் தொடங்குகின்றன.

4. உங்கள் தனிமையைப் பயன்படுத்த திட்டமிடுவார்கள்

share button
Image: IStock

உங்களை உண்மையாக நேசிப்பவரை விடவும் உங்கள் தனிமையைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் மனிதர்கள் தான் இங்கே அதிகளவில் உள்ளனர். இவர்கள் உடனடியாக உங்களிடம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார்கள். உங்கள் தனிமையின் ஆழம் வரை முதலில் அறிந்து கொள்வார்கள். அதனை நுகர்ந்து கொண்டு உங்களை ஏமாற்றும் தருணத்திற்காக காத்திருப்பார்கள்.

நீண்ட காலம் ஆன பின்பு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் பலவீனத்தை அழகாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். உன்னைப் போன்ற நல்லவளுக்கு இது தேவையா.. நான் உடன் இருக்கிறேன்.. நான் காப்பாற்றுகிறேன் என்பார்கள். அது உங்கள் பலவீன நேரமாக இருந்தால் அவரின் முறையற்ற ஆசைக்கு நீங்கள் இரையாவதை யாராலும் தடுக்கவே முடியாது. உங்கள் மனதின் சமநிலை எப்போதும் ஒரே நிலையில் இருப்பதே இதில் இருந்து நீங்கள் தப்பிக்க ஒரே வழி.

5. கொஞ்சம் உரிமை மீறல் கொஞ்சம் உரிமை தேடல்

share button
Image: IStock

உங்களிடம் பழகிக் கொண்டிருக்கும் ஆண் சமயங்களில் உங்களிடம் உரிமையாக பேசுவது போல ஒருமையில் அழைப்பது ஹனி என்பது டார்லிங் என்பது போன்ற வார்த்தைகளை பிரயோகிக்கத் தொடங்கலாம். உங்கள் அனுமதி இல்லாமல் இது நடந்தால் நீங்கள் கவனமாக இருங்கள்.

ஒரு சில ஆண்கள் எடுத்த உடனே வா போ என உரிமை கொண்டாடுவதும் உண்டு. இதன் தூரம் எது என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி. நாமும் யதார்த்தமாக இதனை அனுமதித்தோம் என்றால் எல்லா ஆண்களும் நல்லவர்கள் இல்லை என்பதை மிகத் தாமதமாக புரிந்து கொள்ள வேண்டி வரலாம்.

என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் முகநூல் என்பது பலரால் ஒரு டீக்கடை பெஞ்சு போலவும் நண்பர்கள் பார் போலவும் சமயங்களில் பார்க்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அனுமதித்த உரிமை கொண்டு ஏதோ ஒரு ரகசிய க்ரூப்பில் அவர் உங்களை பற்றிய தவறான தகவல்களை மற்ற ஆண்களுக்கு பரப்பலாம். மற்ற ஆண்களிடம் தன்னுடைய ஆண்மையின் பெருமையை இப்படியாகவும் போலியாக காட்டும் பலர் இருக்கின்றனர்.

நான்தான் அவளுக்கு நெருக்கமானவன் எனும் டெரிட்டரி மார்க் இப்படியும் போடப்படுவது உண்டு. எனவே யாருக்கு என்ன அளவில் உரிமை கொடுக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்து அதில் உறுதியாக இருங்கள். எடுத்த உடனே பழகாமல் உரிமை கொள்ளும் ஆண்களிடம் விலகி இருங்கள்.

6. உங்கள் உண்மைத்தன்மையை ஒளித்து வைக்கச் சொல்லும்  நபர்கள்

share button
Image: IStock

ஒரு சில ஜென்யூன் கிரிமினல்கள் இங்கே ஊடுருவித் தான் இருக்கிறார்கள். அவர்களை நாம் உடனடியாக அடையாளம் காணவோ மற்றவரிடம் காட்டிக் கொடுக்கவோ முடியவே முடியாது. அப்படியானவர்களை நீங்கள் சில விஷயங்கள் மூலம் கண்டுபிடிக்க முடியும்.

உங்கள் ஒரிஜினல் பெயர் இல்லாமல் வேறொரு பெயரில் வேறொரு ஆண் பெயரில் உங்கள் நம்பரை அவர்கள் செல் போனில் சேவ் செய்வார்கள். இவர்களுக்கு உறுதியாக மற்றொரு கேர்ள் பிரென்ட் அல்லது முறையற்ற உறவுகள் இருக்கிறது என்று அர்த்தம். உங்கள் போன் கால் சில குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வர வேண்டும் என்று அவர்கள் கண்டிஷன் போடலாம். இதுவும் தவறான ஒன்றுதான். உங்களை ரகசிய ஸ்நேகிதியாக்க அவர் முயல்கிறார் என்பதே இதன் அர்த்தம்.

தன்னுடைய நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தாரிடமோ உங்களை அறிமுகப்படுத்த அவர் தயங்கலாம். இது அவரின் கள்ளத்தனத்தை காட்டுகிறது. காரணம் உங்களுடன் பழகி உங்களைக் கழட்டி விடும் நேரத்தில் மற்றவர்களின் கேள்விகளில் இருந்து தப்பிக்க அவர் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இதுதான். அல்லது வேறொரு புனைபெயரில் உங்களை அவர்களுக்கு தொலைபேசி மூலம் பேசச் சொல்லலாம். இதற்கு உடன் படாதீர்கள். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

அவருக்காகவும் அவருடைய சூழலுக்காகவும் நீங்கள் இதற்கு ஒப்புக் கொண்டால் உங்கள் எதிர்கால குடும்ப வாழ்க்கை நிச்சயம் பாதிக்கப்படலாம். அவரது ரகசிய சிநேகிதி அல்லது முறையற்ற உறவுக்கு நீங்கள் சம்மதம் தெரிவிப்பதாகவே அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

7. பொறுப்புத் துறப்பு

share button
Image: IStock

இறுதியாக உங்கள் மீதும் உங்கள் நல்வாழ்வின் மீதும் அவர் எந்த அக்கறையையும் காட்ட மாட்டார். உங்கள் கஷ்ட நேரங்களைப் பற்றி அவரிடம் பகிர்ந்து கொண்டால் கூட உங்கள் மூலமாகவே தீர்வினை தேடிக் கொள்ள சொல்வார். தன்னால் உங்கள் பிரச்னைக்கு தீர்வளிக்க முடியும் என்றாலும் கூட செய்ய மாட்டார். “ball ஐ அவங்க கைலயே கொடுத்துட்டேன் ” என்று பெருமையாகவும் பேசிக் கொள்வார். அவர் உங்கள் மீது கொண்ட அக்கறையின் அளவு குறைந்து கொண்டே வரும்போது நீங்கள் விழிப்படைய வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம் என்பதை உணருங்கள்.

போலவே உங்களுடன் செலவழிக்கும் நேரங்கள் குறையலாம். போனிலும் நேரிலும் பேசுவதை அவர் தவிர்க்க பல காரணங்களை அள்ளி விடலாம். இதெல்லாமும் உங்கள் நம்பிக்கைக்குரிய நபர் அப்படியானவர் அல்ல என்பதை உங்களுக்கு உணர்த்தும் தருணங்கள்.

முடிவாக

ஒருவரிடம் பழகும்போது உங்கள் கான்ஷியஸ் தன்மையை விடாமல் அவரை நீங்கள் கவனித்து வந்தால் பல வாழ்க்கை சேதங்களை நீங்கள் தவிர்க்க முடியும். ஒரே ஒரு முறை தான் நமக்கு இந்த மனித வாழ்வானது கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீண்டும் இந்த மனித வாழ்வை பெற நீங்கள் பல ஜென்மங்கள் பல்வேறு உயிரினங்களாக பிறந்து முடிக்க வேண்டும்.

ஒரே ஒருமுறை தரப்பட்ட உங்கள் வாழ்வை ஒரு அர்த்தமற்ற  உறவுக்காக அர்ப்பணிக்கத் துடிப்பதுதான் எத்தனை அபத்தமானது ? யோசியுங்கள். உங்கள் உறவுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.

Was this article helpful?
thumbsupthumbsdown
The following two tabs change content below.

    Latest Articles